சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பெருமளவு உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வைரஸ் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. நமது நாட்டில் இந்த நோய் பரவாமல் தடுப்பதற்காக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கோரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ளைப்பூண்டு, கிராம்பு, கறிவேப்பிலை மற்றும் பசுவின் கோமியம் மருந்தாக பயன்படுத்தலாம் என சமூகவலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
ஆனால் இதை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:- கொரோனோ நோயை குணப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத்துறை செய்தி எதுவும் வெளியிடவில்லை. கொரோனா வைரசை குணப்படுத்த குறிப்பிட்ட மருந்து எதுவும் இல்லை.
எனவே மக்கள் வதந்தியை நம்பக்கூடாது. வெள்ளைப்பூண்டு, கிராம்பு, கறிவேப்பிலை மற்றும் பசுவின் கோமியம் ஆகியவை கோரோனா வைரசை குணப்படுத்தும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. மக்கள் சுத்தமான மற்றும் முழுமையாக சமைத்த சத்தான உணவை உண்ண வேண்டும்.
அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும், இருமும்போது கைக்குட்டையால் வாயை மூடிக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.