நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து நாட்டில் தற்போது காவல் துறை ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக தளர்த்தப்படுகின்ற மாவட்டங்களில் மக்களின் தேவைக்கு என பொது போக்கு வரத்து நடவடிக்கைகள் அரச பேருந்துகள் மூலம் இடம் பெற்று வருகின்றது.
ஆனால் தற்போது மன்னார் மாவட்டத்தில் காவல் துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக் கொள்ளப்படும் சந்தர்ப்பத்தில் அதிக அளவான உள்ளூர் போக்கு வரத்து சேவைகள் இடம் பெற்று வருகின்றது.
எனினும் மன்னார் போக்கு வரத்து சாலை நிர்வாகத்தினால் ‘கொரோனா’ அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் எந்த வித சுகாதார நடை முறையும் பின் பற்றப்படுவதில்லை என மன்னார் சாலையில் கடமையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மேலும் மன்னார் சாலைக்கு என தற்போது சாலை முகாமையாளர் ஒருவர் இல்லாத நிலையில் வட பிராந்திய பிரதான முகாமையாளரே மன்னார் சாலையை மேற்பார்வை செய்ய வேண்டும்.
கடந்த இரண்டு மாதங்களாக வட பிராந்திய பிரதான முகாமையாளருக்கு அனைத்து அதிகாரங்களும் கிடைக்கப்பெற்ற நிலையிலும் அவர் இது வரை மன்னார் சாலைக்கு வருகை தராது, எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாது உள்ளார் தெரிவிக்கப் படுகின்றது.
குறிப்பாக மன்னார் சாலையில் பயணிக்கின்ற பேரூந்துகள் சரியான முறையில் கிருமி தொற்று நீக்கப்படுவதில்லை எனவும் சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் சரியான முகக் கவசங்களோ கையுறைகளோ வழங்கப்படுவதில்லை எனவும், அலுவலக உத்தியோகஸ்தர்களுக்கு கடந்த மாத சம்பளம் 9ஆம் திகதியே வழங்கப்பட்ட நிலையில் சாலை காப்பாளர்கள் மற்றும் பொறித்துறை வினைஞர் ஆகியோர் இக்கட்டான சூழ் நிலையில் பணிக்கு சென்றும் மாத சம்பளங்கள் அவர்களுக்கு கிடைக்கவில்லை எனவும் கவலை தெரிவிக்கின்றனர்.
வட பிராந்திய பிரதான முகாமையாளர் மன்னார் சாலைக்கு இன்று வரை வராத நிலையில் தொழிலாளர்கள் மிகுந்த பாதிப்படைந்து உள்ளதோடு மன்னார் சாலையில் நிலவும் நிர்வாக குறைவினால் இது வரை கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக இருக்கும் மன்னாருக்கு, கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கை இல்லாது செயல்படுவது பணியாளர்கள் மத்தியில் மட்டுமின்றி மன்னார் மக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் சமூக இடை வெளியை பின்பற்ற அனுமதிப்பதில்லை எனவும் , பேருந்து நிலையங்களிலோ பேருந்து தரிப்பிடங்களிலோ ஏன் மன்னார் பொது சாலையில் கூட சாரதிகளோ நடத்துனர்களோ தங்களை தூய்மைப்படுத்திக்கொள்ள எந்த தனிப்பட்ட ஏற்பாடுகளும் மன்னார் சாலையினால் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சுமத்துகின்றனர்.
தங்களுடைய சம்பள பிரச்சனை கூட இதுவரை ஒழுங்கான முறையில் தீர்த்துவைக்கப்படா விட்டாலும் மக்களுக்கு என தாங்கள் பணி செய்வதாகவும் எங்களுக்கு என மன்னார் பொது போக்குவரத்து சாலையால் உரிய பாதுகாப்பு ஏற்பாடோ அல்லது சுகாதார ஏற்பாடோ செய்து தரப்படாமை எங்களுக்கு கவலை ஏற்படுத்துவதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குறித்த விடையங்களை சரி செய்து தருமாறு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.