Breaking
Tue. Nov 26th, 2024

(ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)

சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களும் எந்த நோக்கத்துக்காக இன்றைய நல்லாட்சி அரசை உருவாக்குவதற்கு துணை நின்றார்களோ எவ்வாறான நம்பிக்கைகளின் அடிப்படையில் மைத்திரியையும் ரணிலையும் அரச கட்டிலில் ஏற்றி அழகு பார்த்தார்களோ அந்த நோக்கங்கள், நம்பிக்கைகள் இன்று தவிடு பொடியாக்கப்பட்டுள்ளன.

மைத்திரியின் அரசை விட மஹிந்தவின் அரசு ஓரளவு பரவாயில்லை என நம்மில் பலரும் இன்று சிந்தித்து கைசேதப்படுவதனையும் காணக் கூடியதாக உள்ளது.

மஹிந்த ராஜபக்க்ஷவின் அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற விடயத்தில் முஸ்லிம் அரசியல் கட்சிகளின் தலைமைகள் அன்று தீர்மானம் எடுப்பதற்கு முன்னரேயே முஸ்லிம் சமூகமாகிய நாங்கள் அந்த தீர்மானத்தை எடுத்து விட்டோம் எனவும் இதன் காரணமாகவே வேறு வழியின்றி முஸ்லிம் அரசியல் கட்சித் தலைமைகளும் எமது விருப்பத்தின் அடிப்படையில்தான் இன்றைய நல்லாட்சியை உருவாக்க முன்வந்ததாகவும் நாங்கள் அன்று மார்தட்டி பெருமைப்பட்டோம். ஆனால், அந்தப் பெருமையும் சந்தோஷமும் நாம் கொண்டிருந்த நம்பிக்கையும் நீண்ட காலம் நிலைக்கவில்லை. அனைத்தும் இன்று கானல் நீராகிப் போயுள்ளன.

எங்களது முஸ்லிம் அரசியல் தலைமைகள் கூட இன்று வாக்காளார்களாகிய எங்கள் மீதே சுட்டுவிரல் நீட்டி உங்களால்தான் இந்த நிலை எமக்கு ஏற்பட்டது என்று எம் மீது குற்றம் காண்பார்களோ தெரியாது.

மஹிந்த ராஜபக்க்ஷ ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியில் இந்த நாட்டில் வாழக் கூடிய முஸ்லிம்கள் எதிர்கொண்ட விரும்பத்தகாத சம்பவங்களுடன் மைத்திரி –ரணில் ஆட்சிக் காலத்தில் ஆரம்பப் பகுதியிலேயே நாம் எதிர்கொண்டுள்ள துன்பியல்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, எதிர்காலத்தை பற்றி நாம் அதிக அச்சம் கொண்டவர்களாக, ஒவ்வொரு நாட்களையும் வேதனையுடனும் அனுபவித்து கடத்தும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளளோம்.

சிங்கள பேரினவாத சக்திகளால் இன்று எமக்கெதிராக முன்னெடுக்கப்படும் எந்த நடவடிக்கையையும் மக்கள் அரசாங்கம் என்ற வகையில் இன்றைய அரசு தடுக்கத் தவறி விட்டது. அநியாயக்கார்களுக்கு எதிராக ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கைகளையும் எந்த அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

சிங்கள பேரினவாத சக்திகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்தால் அது தங்களுக்குப் பாதமாகி விடும். சிங்கள மக்களின் ஆதரவை நாம் இழந்து விடலாம் என்ற வெறும் அரசியல் நோக்கத்துடன் இன்றைய அரசு நடந்து கொள்வதன் மூலம் எங்களது இருப்பு இன்று கேள்விக்குறியாகி விட்டது. முஸ்லிம்களும் இந்த நாட்டு குடிமக்கள் என்ற அடிப்படையில் அவர்களையும் நாங்கள் பாதுகாக்க வேண்டுமென்ற பொறுப்பை புறந்தள்ளியும் இன்றைய அரசு செயற்படுவது எதிரிகளுக்கு எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போன்றாகி விட்டது.

எமது சமூகத்தின் அரசியல் தலைமைகளை எவ்வாறு சந்தோஷப்படுத்த முடியும் என்பதற்கு மட்டும் இன்றைய நல்லாட்சி அரசாங்கம் உரிய மருத்துவத்தைக் கண்டுபிடித்துள்ளது என்பதனையும் இங்கே கூற வேண்டியுள்ளது.

கடந்த வாரம் முஸ்லிம் அரசியல் முக்கியஸ்தர்கள், உலமா சபையின் முக்கியஸ்தர்கள் உட்பட பலரையும் சந்தித் இந்த நாட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள், இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்கள் தொடர்பில், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து நல்ல சமிக்ஞையை வெளிக்காட்டவில்லை என்பது கசப்பான விடயம். ஏதாவது நல்லது நடக்கு என்ற நம்பிக்கையோடு சென்ற எம்மவர்கள் மிகுந்த ஏமாற்றத்துடன் வெறும் கையுடன் திரும்பியுள்ளனர்.

முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகள், தேவையான நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவை பத்திரம் ஒன்றின் ஊடாக தீர்வு காண்பதாகவும் இந்த விடயத்தை அமைச்சரவையில் தான் சமர்ப்பிக்கப் போவதாகவும் ஜனாதிபதி அங்கு தெரிவித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான அனைத்து பணிகளையும் சுற்று நிரூபங்களை பின்பற்றாது தேவைக்கு ஏற்ப விரும்பியபடி செயற்படுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அதே ஜனாதிபதி, எம் சமூகத்தின் எரியும் பிரிச்சினைகளுக்கு மட்டும் அமைச்சரவை பத்திரத்தின் ஊடாகவே தீர்வு காண தீர்மானித்துள்ளது மிக வேதனையான விடயம்.

அமைச்சரவையில் எமது சமூகம் சார்ந்த விடயங்களை சாதகமாகப் பரிசீலித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க பேரினவாத சிந்தனை கொண்ட சிங்கள அமைச்சர்கள் நிச்சயம் ஆதரவளிக்மாட்டார்கள். அதன் மூலம் இந்த அமைச்சரவைப் பத்திரத்தால் எமக்கு எதுவுமே நடக்கப் போவதில்லை என்பது மட்டும் நிச்சயம்.

பொதுபலசேன அமைப்பின் தலைவரான ஞானசார தேரரைக் கைது செய்வதற்கு பல பொலிஸ் குழுக்கள் களத்தில் இறங்கி உள்ளதாகவும் அவர் தலைமறைவாகியுள்ளதால் தேடப்படும் நபராகக் கருதப்படுவதாகவும் பொலிஸ் தரப்பு கூறுகிறது.

ஆனால் அவர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரால் நீதிமன்றில் ஆஜராக முடியாதுள்ளது என அவரது தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.

இத ஒரு வேடிக்கையான விடயம்தான். ஒரு வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பொலிஸாரோ அவர் தலைமறைவாகியுள்ளார் என தெரிவிக்கின்றனர். வைத்தியசாலை என்பது நபர் ஒருவர் தலைமறைவாக வாழக் கூடிய இடமா? வேடிக்கையான விநோதம்தான் இது.

இதனை விட இன்னொரு நாடகமும் மேடையேறியுள்ளது. ஞானசாரரைக் கைது செய்து சிறையில் அடைத்து அங்குள்ள பாதாள உலகத்தினர் உதவியுடன் அவரைக் கொலை செய்யத் திட்டமாம்!

கச்சிதமான கதை சிறந்த தயாரிப்பாளர்கள், நடிகர்களைக் கொண்டு அரசாங்கத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம். எத்தனை நாட்கம் ஓடும் என்று பார்ப்போம்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *