இலங்கையில் இடம்பெற்ற ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிகின்ற போதிலும் விசாரணைகளை மழுங்கடிக்க நாட்டின் அதிகாரமிக்க நபர் ஒருவர் அழுத்தம் கொடுத்து வருவதாக கடந்த 22ம் திகதி கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்தி இருந்தார். ஆனாலும் அழுத்தம் கொடுக்கும் பிரபல நபர் யார் என்பதை மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவிக்கவில்லை.
இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வரும் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் முன்னாள் அமைச்சர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் உள்ளிட்ட 7 சந்தேகநபர்களை கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்துள்ளனர். ஷெங்ரிலா ஹோட்டலில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் இரண்டாவது தற்கொலை குண்டுதாரியான முகமத் இப்ராகிம் இன்சாப் என்பவருடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கூறிய சந்தேகநபர்களை கைது செய்ய குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் காணப்படும் ஒரே ஒரு சாட்சி இரண்டாவது தற்கொலை குண்டுதாரியான இப்ராஹிம் இன்சாப் என்பவருடன் சந்தேகநபர்கள் தொலைபேசியில் உரையாடி உள்ளமை ஆகும். இந்த தொலைபேசி உரையாடல்கள் இடம்பெற்ற தினம், நேரம், மற்றும் இலக்கங்கள் என்பவற்றைத் தவிர என்ன விடயங்கள் தொடர்பில் கதைத்தார்கள் என்பது தொடர்பான குரல் பதிவுகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் அனைவரும் இப்ராஹிம் இன்சாப் என்பவருடன் தொலைபேசியில் உரையாடியமை தொடர்பான தகவல்கள் வருமாறு
சந்தேக நபரின் பெயர்/ இன்ஷாபின் தொலைபேசிக்கு அழைப்புகள் எடுத்த தடவைகள்/ இன்ஷாபினால் சந்தேகநபர்களுக்கு தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்ட தடவைகள் முறையே தரப்பட்டுள்ளன.
முஹம்மத் அனீஸ்/ 5 / 0
முஹம்மத் அமானுல்ல/ 0 / 0
முஹம்மத் மூபீன்/ 0 / 0
முஹம்மத் அஸ்மி/ 0 / 0
இஸ்மாயில் ஹாஜியார்/ 260 / 311
மோகமத் ரியாஸ்/ 5 / 0
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்/ 142 / 48
சந்தேகநபர்கள் தற்கொலை குண்டுதாரியான இன்ஷாபுடன் தொலைபேசியில் உரையாடியதை தவிர வேறு எந்தவிதமான சாட்சிகளையும் திரட்டுவதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் முடியாமல் போய்விட்டது. ‘incoming , out going’ தகவல்கள் அடங்கிய வரலாற்றைப் பார்க்கும் போது இன்ஷாபுடன் கூடிய தொடர்பு வைத்திருந்த நபர் யார் என்பதை சிறு பிள்ளைகளால் கூட கண்டுபிடிக்க முடியும். அவர்தான் 571 தடவைகள் தற்கொலை குண்டுதாரியுடன் தொலைபேசியில் உரையாடி உள்ள இஸ்மாயில் ஹாஜியார் ஆவார்.
புதுமை ஆனாலும் உண்மை. தற்கொலை குண்டுதாரியான இன்சாபுடன் 571 தடவைகள் தொலைபேசியில் உரையாடிய சந்தேகநபரான இஸ்மாயில் ஹாஜியார் கைது செய்யப்பட்டு நான்கு மணித்தியாலங்களுக்குள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இருந்து வந்த உத்தரவின் அடிப்படையிலேயே இவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இஸ்மாயில் ஹாஜியார் என்பவர் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு 200 கோடி ரூபாய் வழங்கியதுடன் கோட்டாவுடன் அவருக்கிருக்கும் நட்பும் இந்த உதவியை செய்ய காரணமாக அமைந்ததென தெரிய வருகிறது.
தற்கொலை குண்டுதாரியான இன்சாபின் தொலைபேசி இலக்கத்திற்கு அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொது மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமாக கடமை புரிந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார பல தடவைகள் அழைப்பு எடுத்துள்ளார். இன்ஷாபின் தொலைபேசி இலக்கத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சகோதரரான ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் குமார சிறிசேனவும் பல தடவைகள் அழைப்பு எடுத்துள்ளார். இன்ஷாபிற்கு சொந்தமான வெல்லம்பிட்டிய செப்பு கம்பி தொழிற்சாலைக்கு செப்பு கம்பிகளை வழங்குமாறு சாந்த பண்டார சிபாரிசு கடிதம் ஒன்றையும் வழங்கியுள்ளார். அதேபோன்று ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் சார்பில் சிறிசேனவின் சகோதரர் 5000 மெட்ரிக் தொன் செப்பு கம்பிகளை இன்ஷாபின் தொழிற்சாலைக்கு பெற்றுக் கொடுத்துள்ளார்.
தகவல்கள் இவ்வாறு இருக்க, கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் குற்றச்சாட்டை கீழ்வரும் வடிவத்தில் பூர்த்தி செய்யலாம். ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அழுத்தம் கொடுத்து வருவது தெளிவாகிறது.