அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, அரசாங்கம் முழுமையாக கவனம் செலுத்தி, அவர்களை பிணையில் விடுதலை செய்து புனர்வாழ்வு அளிப்பதற்கான நடவடிக்கையை, அரசாங்கம் உடனடியாக முன்னெடுக்கவேண்டும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.
மன்னாரிலுள்ள அவரது அலுவலகத்தில், நேற்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அரசியல் கைதிகள் தொடர்பாக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது என்றும் நாடாளுமன்றத்திலும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும், இதுவரையில், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கம் ஆக்கபூர்வமான செயற்பாட்டை இன்றுவரை மேற்கொள்ளவில்லை என்றும் கொரோனா வைரஸ் தொற்று, சிறைச்சாலையிலும் பரவி வரும் நிலையில், அவர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையிலும், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் மௌனம் காப்பது, தமிழர்கள் என்ற இனமே இலங்கையில் இல்லாத உணர்வையே ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, 15 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம், எழுத்து மூலக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளதாகவும் இது தொடர்பான நிலைப்பாட்டைத் தெரிந்துகொள்வதற்காக, செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளின்போது, அவரைச் சந்திக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.