Breaking
Sun. Nov 24th, 2024
எழுக தமிழ் எழுச்சி பேரணியானது நீடித்த நிரந்தரமான அரசியல் தீர்வு நோக்கிய பயணத்திற்கு வலுச்சேர்ப்பதாகவே அமையும் என தெரிவித்த புளொட் அமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், எமது உரிமைகளை கேட்பதில் எந்த தவறுமில்லை. கேட்டால் தான் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழில் நடைபெற்ற எழுக தமிழ் எழுச்சி பேரணி தொடர்பில் தென்னிலங்கை கொண்டிருக்கும் நிலைப்பாடு மற்றும் தற்போதைய நிலைமைகளை அப்பேரணி பாதிக்குமா என்பது தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்கள் தமது உரிமைகளை கோரி சுமார் ஆறு தசாப்த காலத்திற்கும் அதிகமாக போராடி வருகின்றனர். ஆரம்பத்தில், தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்ற தலைசிறந்த தமிழ்த் தலைவர்களின் தலைமையில் அகிம்சை வழியிலான போராட்டங்கள் மூன்று தசாப்தமாக நீடித்தன.

அதன் தொடர்ச்சியாக போராட்ட வடிவம் கூர்ப்படைந்து அடுத்த மூன்று தசாப்த காலமாக ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஆயிரமாயிரம் இளைஞர் யுவதிகளின் உயிர்கள் தியாகம் செய்யப்பட்டுள்ளன. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் உயிர்நீத்திருக்கின்றார்கள். இவற்றையெல்லாம் கடந்து தான் தற்போது நாம் இருக்கின்றோம்.

ஆயுதப்போராட்டம் முற்றுப்பெற்று ஏழாண்டுகளாகின்ற நிலையில் ஆட்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பிரச்சினைகள் அனைத்திற்கும் உரிய தீர்வுகளை வழங்கி இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சுபீட்சமான இலங்கையை கட்டியெழுப்புவதாக ஆட்சியாளர்கள் வாக்குறுதி அளித்துள்ளார்கள்.

எனினும் அந்த வாக்குறுதியின் அடிப்படையில் அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமானதாக அமையவில்லை. விசேடமாக அவை மிகமிக மெதுவான நிலையிலேயே சென்றுகொண்டிருக்கின்றது. இதனால் தமிழ் மக்கள் மனதில் பல்வேறு கிலேசங்கள் எழுகின்றன. அந்த கிலேசங்கள் வலுப்பெற்றால் நிலைமை மேலும் மோசமாகிவிடும்.

ஆகவே தான் எமக்கு உள்ள உடனடிப் பிரச்சினைகள் என்ன? நீண்டகால பிரச்சினைகள் என்ன? அவற்றுக்கு விரைவாக தீர்வை வழங்குங்கள் எம்மீது கரிசனை கொண்ட அனைத்து தரப்புகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலேயே தான் எழுக தமிழ் எழுச்சிப்பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் ஆயிரமாயிரமாய் மக்கள் கூடியிருந்தார்கள். ஆதரவை நல்கியிருந்தார்கள். முற்றவெளியில் அணி திரண்டு தமக்கு என்ன தேவை என்பதை தெளிவாக எடுத்துரைத்திருந்தார்கள்.

அவ்வாறான நிலையில் தென்னிலங்கை கொதித்தெழுகின்றது, நல்லிணக்கம் பாதிக்கின்றது என்பதை ஏற்கமுடியாது. இது சிலர் தமது சுயலாப அரசியலுக்காக கூறும் காரணமாகவே பார்க்கவேண்டியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தன், செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்றவர்களுடன் இணைந்து பணியாற்றியவர். நீண்டகால அரசியல் அனுபவம் கொண்டவர்.

அவர் எழுக தமிழ் கவனயீர்ப்பு பேராட்டத்தை நிரந்தர தீர்வுக்கான பயணத்திலோ அல்லது பேச்சுவார்த்தை மேசையிலோ தனக்கு சாதகமாகவே பயன்படுத்துவார் என்பதில் மாற்றுக்கருத்திற்கு இடமில்லை. ஆகவே, இந்த பேரணியால் எவ்விதமான பாதிப்புக்களும் ஏற்படப்போவதில்லை.

அதேநேரம் ஆறு தசாப்தமாக அகிம்சை ரீதியிலும், ஆயுத ரீதியிலும் எமது கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோது அவற்றை நிறைவேற்றாத ஆட்சியாளர்கள் தற்போது எமக்கு அனைத்தையும் நிறைவாக பெற்றுத்தந்து விடுவார்கள் என கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருக்க முடியாது. தென்னிலங்கை இனவாத சக்திகளுக்கு அச்சம் கொண்டு அமைதி காக்கவும் முடியாது.

மக்களின் ஆணைகளைப் பெற்றுக்கொண்டு அவ்வாறு அமைதியாக இருப்போமானால் தமிழ் மக்களை அடக்கியாள்வதற்கு முயலும் தரப்புக்கள் தனது திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலை நிறைவு செய்து விடும், ஆகவே தான் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழும் பகுதிகளில் நடைபெறும் ஆக்கிரமிப்புக்களை நிறுத்தக்கோரியும், எமது நியாயமான கோரிக்கைகளை ஏற்று அவற்றுக்கான தீர்வை வழங்குமாறு வலியுறுத்தியும் கவனயீர்ப்பு பேரணியொன்றை நடத்தியுள்ளோம்.

அதனை தவறாக அர்த்தப்படுத்துவதானது காலத்திற்கு பொருத்தமானதல்ல. தென்னிலங்கையில் இனவாத அரசியலை முன்னெடுக்கும் தரப்புக்கள் தற்போதல்ல என்றுமே வடக்கில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும், விடயங்களுக்கும் முரண்பாடான அர்த்தம் கற்பித்தலை செய்துகொண்டேயிருப்பார்கள். அதில்தான் அவர்களின் வாக்குவங்கி தங்கியிருக்கின்றது.

அதற்காக அவர்களுக்கு அச்சப்பட்டுக்கொண்டு எமது உரிமைகளை, அபிலாசைகளை விட்டுக்கொடுக்க முடியாது. எதனையுமே கேட்டால்தான் பெற்றுக்கொள்ள முடியும். மக்களின் மனோநிலையை ஆட்சியாளர்கள் உணர்ந்து செயற்படுவது மிகவும் அவசியமானது என்றார்.

(ஆர். ராம்) நன்றி: வீரகேசரி 27.09.2016.
vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *