டெல்லி மாநில முதல்– மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அதிகபட்ச பாதுகாப்பை ஏற்காமல் சாதாரணமாக அலுவலகத்துக்கு சென்று வருகிறார். முதல்வர் அலுவலத்திலும் அவர் அதிக பாதுகாப்புக்கு அனுமதி கொடுக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று மாலை 4.30 மணிக்கு போலீஸ் கட்டுப்பாட்டுக்கு அறைக்கு ஒரு மர்ம போன் அழைப்பு வந்தது. போனில் பேசியவன், இன்னும் ஒரு மணி நேரத்தில் மனித வெடிகுண்டு மூலம் தற்கொலை தாக்குதல் நடத்தி கெஜ்ரிவாலை படுகொலை செய்யப் போகிறோம். முடிந்தால் அவரை காப்பாற்றி கொள்ளுங்கள் என்று சொல்லி விட்டு வைத்து விட்டான்.
இதை கேட்டதும் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். டெல்லி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு இதுபற்றி தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து கெஜ்ரிவாலின் வீடு மற்றும் முதல்வர் அலுவலகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். கெஜ்ரிவாலுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
கெஜ்ரிவாலின் வீடு மற்றும் முதல்வர் அலுவலகத்துக்கு வந்த வாகனங்கள் அனைத்தும் கடுமையாக சோதிக்கப்பட்டன. கெஜ்ரிவாலை சந்திக்க வந்தவர்களும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டனர்.
கெஜ்ரிவாலுக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார் என்றும் ஏன் என்றும் தெரியவில்லை. மிரட்டல் விடுத்தவனின் குரலை வைத்து, அந்த மர்ம மனிதனை பிடிக்க டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.