தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று அணியை உருவாக்க அனைத்து கட்சிகளையும் முன்வருமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்போது, தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
அரசாங்கத்தினால் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் 2 கோடி ரூபா விடயம் அதிகமாக பேசப்படுகின்றது. தேசிய கொள்கை மற்றும் திட்டமிடல் ஊடாக பிரதமரினால் அந்த நிதி வழங்கப்பட்டது.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமனற் உறுப்பினர்களுக்கே 2 கோடி ரூபா நிதி கொடுக்கப்பட்டது. பொது எதிரணியில் உள்ள 50 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படவில்லை. மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி) கொடுக்கவில்லை.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு 2 கோடி ரூபா கொடுக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சொல்கின்றார்.
அவ்வாறாயின், தாமும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றோம் என்பதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒத்துக்கொள்கின்றார்களா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான முடிவுகள் வரும் என பேசும் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பொது மக்கள் மத்தியில் பொதுவான எதிர்ப்பு உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேநேரம், கூட்டமைப்பிற்கு பாடம் புகட்ட மக்கள் தீர்மானித்துள்ளார்கள். யாரை தெரிவு செய்வதற்கு முன்னர், கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் உரிமையையும் கொண்டு வரவில்லை. அபிவிருத்தியையும் கொண்டு வரவில்லை.
அபிவிருத்தி எமது அடிப்படை உரிமை என்பதனை கூட்டமைப்பினர் மறந்துவிட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
கூட்டமைப்பு வெல்லக்கூடிய ஆசனங்களைப் பெறாவிடின், ஐக்கிய தேசிய கட்சி, ஆதரவு கொடுத்து ஆட்சி அமைக்க நினைக்கும்.
நாம் பாடம் புகட்ட வேண்டுமாயின், கூட்டமைப்பிற்கு வாக்களிக்காமல் விடுவதைப் போன்று, ஐக்கிய தேசிய கட்சிக்கும் வாக்களிக்க சிந்திக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தேர்தல் நிறைவடைவதற்குள் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக மாற்று அணியை உருவாக்க அனைத்துக் கட்சிகளையும் தம்முடன் கைகோர்க்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் பகிரங்க அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.