கியூபாவின் குவன்தனாமோ பேயில் இருக்கும் சர்ச்சைக்குரிய அமெரிக்க இராணுவ சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல கைதிகளையும் குறைந்தது இரண்டு நாடுகளுக்கு அனுப்ப அமெரிக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
இந்த சிறைச்சாலையை மூடும் அமெரிக்க அரசின் முயற்சியின் ஓர் அங்கமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குவன்தனாமோவில் இருந்து இந்த கைதிகள் அடுத்த வாரங்களில் வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் கைதிகள் அனுப்பப்படும் இடம் குறித்த விபரத்தை அமெரிக்க இராணுவம் வெளியிடவில்லை.
இதில் நீண்ட காலம் உண்ணாவிரத போராட்டம் நடத்திய யெமனின் தாரிக் பா ஒதாவும் விடுவிக்கப்படும் கைதிகளில் இருப்பதாக அதிகாரிகள் ராய்ட்டர்ஸுக்கு உறுதி செய்துள்ளனர்.
கடந்த 2002 ஆம் ஆண்டு சுமார் 800 கைதிகள் இருந்த குவன்தனாமோ சிறையில் தற்போது சுமார் 91 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த கைதிகளை தமது சொந்த நாட்டுக்கு அல்லது அமெரிக்காவின் இராணுவ அல்லது சிவில் சிறைச்சாலைக்கு மாற்றுவது குறித்து அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆலோசித்து வருகிறார்.
மனித உரிமைக் குழுக்களின் கடும் கண்டனத்திற்கு உள்ளான இந்த சிறைச்சாலையை நடத்த ஆண்டுக்கு 445 மில்லியன் டொலர்கள் செலவாவதாக ஒபாமா குறிப்பிடுகிறார்.