Breaking
Mon. Nov 25th, 2024

நள்ளிரவில் என் தலையை தடவி, தன் மகன் வீடு திரும்பி விட்டான் என்பது தனது கனவல்ல, உண்மை தான் என்பதை என் தாய் உறுதிபடுத்திக் கொள்வார் தனது இயல்பான தொனியில் நிசாரூதின் கூறிய வாக்கியம் இது.

தன் வாழ்க்கையில் 23 வருடங்களை சிறையில் கழித்து விட்டு, இந்திய தென் மாநிலமான கர்நாடகாவில் உள்ள குல்பர்கா நகரில் உள்ள தன் வீட்டுக்கு நிசாரூதின் திரும்பியுள்ளார் என்பதனை அறியும் வரையில், அவரின் வாக்கியத்தில் உள்ள ஆழமான உணர்ச்சியை புரிந்து கொள்வது சிரமமாகும்.

யாரையும் காயப்படுத்தியதாலோ, ஏமாற்றியதாலோ அல்லது கொலை செய்த காரணத்தாலோ அவர் சிறையில் காலம் கழிக்கவில்லை. 1994-ஆம் ஆண்டு ஹைதராபாத் போலீசார் குற்றம்சாட்டியது போல், ஹைதராபாத்தில் உள்ள கல்வி நிலையம் மீதோ அல்லது ஆந்திர பிரதேச விரைவு ரயில் மீதோ அவர் நிச்சயமாக வெடிகுண்டு வீசவில்லை.

நிசார் மற்றும் அவரின் மூத்த சகோதரர் ஜாஹிரூதின் மற்றும் மேலும் இருவர் கூறிய ஒப்புதல் வாக்குமூலங்களை சார்ந்தே போலீசார் இந்த வழக்கை பதிவு செய்துள்ளதால், உச்சநீதிமன்றம் அவரை சிறையில் இருந்து விடுவிக்க கடந்த மாதம் உத்தரவிட்டது. அவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்கள் அப்பட்டமாக ஜோடிக்கப்பட்டவையாகும்.

´´நிசாரின் மீது சுமத்தப்பட்ட குற்றமும், வழங்கப்பட்ட தண்டனையும் முற்றிலும் சட்டரீதியான் வலுவற்றவை ´´ என்று இரண்டு வாரங்களுக்கு முன்னர் தங்களின் உத்தரவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எ ஃ ப். எம். கலி ஃ புல்லா மற்றும் யூ. யு. லலித் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.

´´வாக்கு மூல சாட்சியத்துக்கு ஆதாரமளிப்பது போல் எந்த ஆவணமும் கையிருப்பில் இல்லாத நிலையில், உடன் குற்றம் சாட்டப்பட்டவரின் வாக்குமூலத்தை வைத்து மட்டும் ஜாஹீரின் மீது குற்றச்சாட்டும், தண்டனையும் வழங்கப்பட்டது ஏற்றுக் கொள்ள முடியாதது´´ எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சுருங்கக் கூறுவதென்றால், போலீசாரால் கட்டமைக்கப்பட்டுள்ள ஜோடனை வழக்கில் நிசார் மற்றும் ஜாஹீர் சிக்க வைக்கப்பட்டனர். இதற்கான காரணங்கள் என்ன என்று அவர்களுக்கு இன்னும் தெரியவில்லை.

ஆனால், என்ன நடந்ததென்று தனது இயல்பான, உண்மையான தொனியில் நிசார் விவரிக்கிறார்.

1994-ஆம் ஆண்டு, ஜனவரி 15-ஆம் தேதியன்று தான் படிக்கும் மருந்தியல் கல்லூரிக்கு நிசார் கிளம்பினார். அதற்கடுத்த வாரம், அவருக்கு கல்லூரி தேர்வு இருந்தது. இந்நிலையில், அவரை ஹைதராபாத் போலீசார் கைது செய்தனர்.

இது குறித்து அவர் பிபிசி ஹிந்தி சேவையிடம் பேசுகையில், ´´43 நாட்கள் சட்டவிரோதமாக காவலில் வைக்கப்பட்டிருந்த நான், இறுதியாக ஒரு மாஜிஸ்டிரேட் நீதிபதியின் முன் ஆஜர் செய்யப்பட்டேன். என்னைத் தலைகீழாக கட்டி அடித்து சித்திரவதை செய்தனர்” என்றார்.

“நான் என்ன தவறு செய்தேன் என்று அறிந்து கொள்ள அவர்களிடம் கெஞ்சியும், வேண்டியும் கேட்டுக் கொண்டேன்”.

“ஜோடிக்கப்பட்ட ஒரு வாக்குமூலத்தில் என் கையெழுத்தை அவர்கள் பெற்றுக் கொண்டனர்´´ என்று நிசார் கூறினார்.

´´அவ்வாறு கையெழுத்து வாங்கியது எனது விடுதலைக்காக என்று என்னிடம் அவர்கள் தெரிவித்தனர். ´தடா´ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதியாக சிறையில் நுழைந்த போது தான், என்ன குற்றத்தின் பேரில் என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அறிந்து கொண்டேன்.

இரண்டு வருடங்களுக்கு பின்னர், உள்ளூர் தடா நீதிமன்றம் தடா கைதிகள் தொடர்பான விதிகள் எனக்கு பொருந்தாது என்று கூறினர்´´ என்று நிசார் மேலும் தெரிவித்தார்.

நிசாரின் வழக்கறிஞர் ஷதான் ஃபர்சாத் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ´´பொதுவாக, ஒரு போலீஸ் அதிகாரி முன்னர் தெரிவிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் செல்லுபடியாகாது.

ஆனால், தடா சட்டத்தின் கீழ் போலீஸ் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) தர வரிசையில் உள்ள ஒரு போலீஸ் அதிகாரி முன்னர் தெரிவிக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் ஏற்றுக் கொள்ளப்படும்.

ஆனால், இந்த வழக்கில் ஒரு மூத்த அதிகாரியின் அனுமதியின்றி ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அப்போதே இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்க வேண்டும்.

ஆனால், இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சிபிஐ அமைப்பு, ரயில்வே வழக்கில் அளிக்கப்பட அதே ஒப்புதல் வாக்குமூலத்தை, ஆஜ்மீர் தடா நீதிமன்றத்திலும் சமர்பித்தது. இதனால், நிசாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது´´ என்று நிசாரின் வழக்கறிஞர் ஷதான் ஃபர்சாத் தெரிவித்தார்.

´´எனக்கு நுரையீரல் புற்றுநோய் இருந்ததால், எனக்கு ஜாமீன் கிடைத்தது. எங்களுக்கு உச்சநீதிமன்றம் செல்லவும், இறுதியாக விடுதலையாகவும் 12 ஆண்டுகள் ஆனது´´ என்று ஜாஹிர் கூறினார்.

தனது விடுதலையின் போது எழுந்த மன உணர்ச்சிகள் குறித்து கருத்து தெரிவித்த நிசார், ´´சிறையிலுருந்து வெளியே வந்த அன்று, விடுதலையானதாகவே என்னால் நம்ப முடியவில்லை.

பொதுவாக, சிறையில் இருந்து ஒருவர் விடுதலையானால் ஒரு விதமான மகிழ்ச்சியான சூழல் நிலவும். நான் விடுதலை செய்யப்பட்ட போது, என்னால் எந்த மகிழ்ச்சியையும் உணர முடியவில்லை. வீடு திரும்பிய பின்னர் தான், நான் விடுதலையடைந்ததாக உணர்ந்தேன். ஆனால், எல்லாம் மாறிவிட்டது. என் சொந்த ஊரில், என்னை ஒரு அந்நியனாக உணர்ந்தேன்.

என் மருமகள்களையும், மருமகன்களையும் எனக்கு முறையாக அறிமுகம் செய்ய வேண்டியிருந்தது. என் சகோதரிகளையும், சகோதரர்களையும் எனக்கு அடையாளம் தெரிந்தது. இத்தனை ஆண்டுகள் எனக்காக போராடி வந்த என் தந்தை மறைந்து விட்டார்.

என் வீட்டை சுற்றிலும் இருந்த எல்லாம் மாறி விட்டது. ஆனால், உடைந்த சுவர்கள் மற்றும் ஒழுகும் கூரையுடன் இருந்த என் வீட்டின் நிலை மட்டும் மாறவில்லை.

என்னை சுற்றியிருந்த உலகம் தன் போக்கில் நகர்ந்து விட்டது´´ என உணர்ச்சி ததும்ப நிசார் தெரிவித்தார்.

தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை சிறையில் கழித்து விட்ட நிசார் இனி என்ன செய்வது என்று ஆழமாக சிந்திக்கவில்லை. ´´20 வயதில் என்னை கைது செய்தனர். 43 வயதில் ஒருவர் தன் வாழ்க்கையை முதலில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமென்றால், ஏதோ ஒரு விதமான வாழ்க்கையை தான் எதிர்பார்க்க முடியும்.´´ என்று கூறிய நிசாருக்கு ஒரு விருப்பம் உள்ளது.

´´எனது அம்மா தனது மகனுக்காக ஏங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலை மற்ற தாய்களுக்கு வரக்கூடாது. சிறையில் இருக்கும் பலரும் அழுகி விட்டனர், இன்னமும் பலர் அழுகிக் கொண்டிருக்கின்றனர் என்பது உங்களுக்கு தெரியுமா?

சிறையில் இருப்பவர்கள் பாதிப்படைந்தால், அவர்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கக் வேண்டும்.

எனது ஒரே விருப்பம் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பது தான். இந்த செய்தி ஆட்சியாளர்களின் கவனத்துக்கு செல்ல வேண்டும்.´´ என்று நிசார் வேண்டுகோள் விடுத்தார்.

தீங்கிழைக்கும் வழக்கு விசாரணைகளுக்கு ஏதாவது தீர்வு உள்ளதா? இது தவறான வழக்கு விசாரணையல்ல; சரியாக சொல்வதானால், தீங்கிழைக்கும் வழக்கு விசாரணை. ஏனென்றால், நிசாரின் ஒப்புதல் வாக்குமூலம் கூட உண்மையானது இல்லை.

நிசார் மற்றும் ஜாஹீரின் வாழ்க்கை சீரழிந்ததற்கு இழப்பீடு பெற வாய்ப்புண்டு. ஆனால், அது ஒரு மற்றொரு நீண்ட பயணமாக அமையக்கூடும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *