பங்களாதேஷ் நாட்டின் தலைநகரான டாக்காவில் உள்ள ஹோட்டலில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு தனது பிரசாரம்தான் தூண்டுகோலாக இருந்தது என வெளியாகிவரும் குற்றச்சாட்டுகளுக்கு டாக்டர் ஸாகிர் நாயிக் மறுப்புத் தெரிவித்துள்ளார்.
தற்சமயம் சவூதி அரேபியாவில் தங்கியிருக்கும் அவர் மக்கா நகரிலிருந்து வெளியிட்ட வீடியோ பதிவிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் ஸாகிர் நாயக் கூறியுள்ளதாவது, உங்களுக்கு ஒரு தகவல் கிடைக்கும்போது அதை மூன்றாம் நபருக்கு தெரிவிப்பதற்கு முன்னர் அந்த தகவலின் நம்பகத்தன்மையைப் பற்றி நன்கு ஆராய்ந்த பின்னரே பிறருக்கு வெளிப்படுத்த வேண்டும் என குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக உலகில் உள்ள எந்த ஊடகமும், ஏன், அனைத்து ஊடகங்களுமே குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த வழிகாட்டல் நெறிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை. சமீபத்தில் இந்திய நாளிதழ்களின் தலைப்பு செய்திகளிலும், ஊடகங்களில் வெளியான செய்திகளிலும் இதே நடைமுறைதான் பின்பற்றப்பட்டுள்ளது.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய ஒரு வாலிபரை இந்த தாக்குதலை நடத்தும்படி நான் எனது பேச்சின் மூலம் தூண்டிவிட்டதாக அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டு வருகின்றன.
இந்தச் செய்தியின் பின்னணி என்ன என்பது தொடர்பாக நான் ஆய்வு செய்தேன். இதுதொடர்பாக, பங்களாதேஷ் அரசையும் அரசு துறை அதிகாரிகளையும் நான் தொடர்பு கொண்டு பேசியபோது, டாக்கா தாக்குதலின் பின்னணியில் இருந்த அந்த வாலிபரை அப்பாவி மக்களை கொல்லும்படி நான் தூண்டிவிட்டதாக அவர்கள் நம்பவில்லை என என்னிடம் தெரிவித்தனர்.
இது தவிர, அந்த வாலிபர் என்னுடைய விசிறி (தீவிர அபிமானி) என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. ஆம், உலகம் முழுவதும் எனக்கு பல லட்சக்கணக்கான விசிறிகள் உள்ளனர். குறிப்பாக, பங்களாதேஷில் உள்ள மக்களில் 90 சதவீதம் பேர் என்னை அறிந்து வைத்துள்ளனர். அவர்களில் 50 சதவீதம் பேர் எனது விசிறிகளாகவும் உள்ளனர்.
அவ் வகையில், டாக்கா ஹோட்டலில் தாக்குதல் நடத்திய வாலிபரும் எனது விசிறியாக இருந்திருக்கக்கூடும். ஆனால், அப்பாவி மனித உயிர்களை கொல்லும்படி அவரை நான் தூண்டியதாக கூறப்படுவது கொடுமையான குற்றச்சாட்டாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டாக்கா ஹோட்டலின் மீது தீவிரவாத தாக்குதலை ஸாகிர் நாயக் தூண்டிவிட்டதாக செய்தி வெளியிட்டதாக கூறப்படும் பங்களாதேஷ் நாளிதழும் ‘அப்படியொரு தகவலை நாங்கள் வெளியிடவில்லை’ என மறுப்புத் தெரிவித்துள்ளது.
பங்களாதேஷின் பிரபல நாளிதழான ‘டெய்லி ஸ்டார்’ இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பாவி மக்களை கொல்லும்படி ஸாகிர் நாயக் எந்த தீவிரவாதியையும் தூண்டிவிட்டதாக நாங்கள் செய்தி வெளியிடவில்லை.
நாங்கள் வெளியிட்ட செய்தியில், ‘டாக்கா ஓட்டல் தாக்குதலில் தொடர்புடைய ஒரு தீவிரவாதி ஸாகிர் நாயக்கின் பேச்சை மேற்கோள் காட்டி முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும் என்ற கருத்தை பேஸ்புக் மூலம் பரப்பி பிரசாரம் செய்து வந்துள்ளார்.
பங்களாதேஷில் தனக்கு இலட்சக்கணக்கான அபிமானிகள் உள்ளதாக கூறிவரும் ஸாகிர் நாயக்கின் முந்தைய பேச்சை அவரது பேச்சின் உள்கருத்துக்கு மாறுபட்ட வகையில் திரித்து வெளியிட சில இளைஞர்களின் புத்தி எப்படி எல்லாம் செயல்படுகிறது? என்பதைத்தான் எங்களது செய்திக் கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம்’ என்று டெய்லி ஸ்டார் நாளிதழ் வெளியிட்டுள்ள மறுப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.