ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு கோரி திருகோணமலை குச்சவெளி கல்விப் பணிமனைக்குட்பட்ட மூன்று பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குச்சவெளி கல்விப் பணிமனைக்குட்பட்ட குச்சவெளி அந்நூரியா முஸ்லிம் வித்தியாலயம், அந்நூரியா கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் இலந்தைக்குளம் முஸ்லிம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களே இன்று கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியருகே இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குச்சவெளி பகுதியில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் திருகோணமலை மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளரிடம் வினவினோம்.
குறித்த பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில் தாம் ஏற்கனவே அறிந்துள்ளதாகவும் இது தொடர்பில் மாகாணக் கல்வியமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அது மாத்திரமன்றி, திருகோணமலை மாவட்டத்தின் பல பாடசாலைகளிலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்
அத்துடன், குறித்த விடயங்கள் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணியிடம் வினவியபோது, மாணவர்களின் ஆர்ப்பாட்டம் குறித்து அறிந்திருந்ததாகவும் குறித்த பாடசாலைகளில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.