கிழக்கின் முஸ்லிம் பகுதிகள் அனைத்தும் இணைக்கப்பட்டு வடக்குடன் இணையாத தனி மாகாணமாக இருக்க வேண்டும் என்பதே முஸ்லிம் காங்கிரசின் ஆலோசனை என்பதை உள்ளடக்க முடியாமல் போனமை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கையாலாகா தனமா? என உலமா கட்சித்தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனை என கூறும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு, அதே இடைக்கால அறிக்கையில் ஏன் இவ்வாறு கூற முடியாது? எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அரசின் இடைக்கால அறிக்கை தொடர்பாக ஆராயும் உலமா கட்சியின் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
“முஸ்லிம் காங்கிரஸ் வடக்கு, கிழக்கு இணைப்பு விடயத்தில் மௌனமாக இருப்பதாகவும், முஸ்லிம் கட்சிகள் பொய் சொல்வதாகவும் ஹக்கீம் கூறியுள்ளார்.
நாம் கேட்கிறோம் அப்படியாயின் வடக்கும், கிழக்கும் பிரிந்தே இருக்க வேண்டும் என எப்போதாவது ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறாரா என கேட்கிறோம்.
அதேபோல் அரசின் இடைக்கால அறிக்கையில் கிழக்கு மாகாண முஸ்லிம்களின் எந்தவொரு அபிலாஷைகளும் உள்வாங்கப்படவில்லை என்பதால் முஸ்லிம் காங்கிரஸ் அரசியலமைப்பு வழி நடத்தல் குழுவிலும், நாடாளுமன்றத்திலும் தூங்கிக் கொண்டிருந்ததா என கேட்கிறோம்.
நாட்டின் எதிர்க்கட்சியாக இருக்கும் தமிழ்க்கூட்டமைப்பின் ஆலோசனைகளை அரசு ஏற்று இடைக்கால அறிக்கையில் முன்வைக்கிறது என்றால் அரசின் பங்காளிக்கட்சியான முஸ்லிம் காங்கிரசின் ஆலோசனைகள் ஏன் கருத்தில் கொள்ளப்படவில்லை?
இதற்கு காரணம் ரவூப் ஹக்கீமும், முஸ்லிம் காங்கிரசும் தமிழ் டயஸ் போராவிடம் விலை போகிவிட்டதுதான் என்பது எமது
குற்றச்சாட்டாகும்.
அப்படி இல்லை என்றால் முஸ்லிம் காங்கிரசினால் இடைக்கால அறிக்கைக்கு வடக்கும், கிழக்கும் இணைக்கப்படக்கூடாது என்ற முஸ்லிம்களின் அபிலாஷையை வழங்க முடியாமல் போனதன் காரணமென்ன?
எந்தவொரு மாகாணமும் இணையக்கூடாது என ஜாதிக ஹெல உறுமய சொல்லியிருப்பதை கவனிக்கவில்லையா என ஹக்கீம் கேட்பது சிரிப்பை தருகிறது.
மக்கள் செல்வாக்கு பெற்ற ஒரு கட்சியின் தலைவராக இருந்து கொண்டு கொஞ்சமும் வெட்கம் இன்றி ஹெல உறுமயவை காட்டுகிறார்.
எந்தவொரு மாகாணத்தையும் இணைக்கக்கூடாது என்று மூடுமந்திரமாகக்கூட முஸ்லிம் காங்கிரசால் சொல்ல முடியாமல் இருப்பது ஏன்?
எம்மைப்பொறுத்த வரை முஸ்லிம் காங்கிரஸ் பணத்துக்காகவும், பதவிகளுக்காகவும் முஸ்லிம் மக்களின் வாக்குகளை விற்றுவிட்டார்கள்.
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் ஒற்றுமைப்பட்டு முஸ்லிம் காங்கிரசை விரட்டாவிட்டால் கிழக்கு முஸ்லிம்களை அந்தக்கட்சி பாரிய படுகுழியில் தள்ளி விடும் என்பதை அரசியல் அறிவும், சமூக அக்கறையும் கொண்ட உலமாக்களின் தலைமையிலான கட்சி என்ற வகையில் எச்சரிக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.