Breaking
Thu. Apr 25th, 2024

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

கிழக்கு முதலமைச்சர் சம்பூர் பாடசாலையில் நடந்து கொண்ட விதமே இவ்வார அரசியல் அரங்கில் மிகப் பெரும் பேசு பொருளாக உருவெடுத்துள்ளது.ஒவ்வொருவரும் தங்களது பார்வைக்கேற்ப இவ் விடயம் தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இனவாதத்தை பிரதான முதலீடாகயிட்டு தங்களது காரியங்களைச் சாதிக்கலாமென வழி மேல் விழி வைத்து காத்து நிற்கும் சில அரசியற் கட்சிகளுக்கும்,இனவாத அமைப்புக்களுக்கும் இவ்விடயம் வாய்க்குள் சக்கரையை அள்ளிப் போட்ட கதையாகிவிட்டது.ஏற்கனவே மைத்திரி அரசு இவ்வாறானவர்கள் கிளரும் இனவாதக் கருத்துக்களால் திணறிக்கொண்டிருக்கின்றது.இதற்குள் இச் சம்பவம் மேலும் தலையிடியாக உருவெடுத்திருக்குமென்பதில் ஐயமில்லை.மு.காவின் உள் வீடு கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும் இச் சந்தர்ப்பத்தில் இலங்கை பாதுகாப்பு படைகளுடன் வம்பிழுத்து வந்திருக்கும் கிழக்கு முதலமைச்சரின் இச் செயலால் மு.கா மிகுந்த சவாலையும் எதிர்கொண்டிருக்கும். .

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேன தனது வெளிநாட்டுப் பயணத்திலிருந்து வந்து,இது தொடர்பில் முடிவெடுக்கும் வரை இரு தரப்பையும் எதுவும் கதைக்க வேண்டாமெனக் கூறி இக் கதைக்கு முற்றுப் புள்ளி வைத்திருந்தார்.இன வாதக் கருத்துக்கள் வெளிக்கிளம்பச் சாத்தியமான விடயங்களை ஜனாதிபதியின் தலையில் கட்டிவிட்டு பிரதமர் நழுவுவதொன்றும் புதிதல்ல.வில்பத்து விவகாரத்திலும் பிரதமர் மௌனப் போக்கை கடைப்பிடித்தமை குறிப்பிடத்தக்கது.எதிர்காலத்தில் இலங்கை நாட்டின் முக்கிய பதவிகளுக்கு போட்டியிடவல்ல பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு இருப்பது எதிர்காலத்தில் இவர் மீதான முஸ்லிம் மக்களின் ஆதரவை சற்று நிதானித்துச் செய்ய வேண்டுமென்பதை எடுத்துக் காட்டுகிறது.ரணில் விக்கிரமசிங்கவிற்கும் பாதுகாப்பு படை வீரர்களுக்குமிடையில் சிறிது முரண்பாடு காணப்படுவதால் இவ் விடயத்தைக் கையாளாது தவிர்ந்திருக்கலாம் என்றதொரு கருத்தும் நிலவுகிறது.

தற்போது ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேன நாடு திரும்பி அவர் இது தொடர்பிலான இறுதி முடிவை வெளிப்படுத்தாத நிலையில் அமைச்சர் ஹக்கீம் கிழக்கு முதலமைச்சரை இது தொடர்பில் மன்னிப்புக் கோர வேண்டுமெனக் கூறியுள்ளார்.அமைச்சர் ஹக்கீமைப் பொறுத்த மட்டில் ஒரு சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் அவ்வளவு இலகுவில் வாய் திறந்து பேசி விடவோ தீர்மானம் எடுத்து விடவோ மாட்டார்.ஒரு தேசியப்பட்டியலை வைத்துக் கொண்டு வருடமொன்று கழியப்போகின்றமையும் இவ் விடயத்தில் கருத்தேதும் கூறாது மௌனித்து நிற்கின்றமையும் போதுமான சான்றாகும்.இவ் விடயத்தில் சூடு ஆறுவதற்கு முன்பு தனது கருத்தை வெளியிட்டுள்ளாறென்றால் விடயமேதுமில்லாமலா இருக்கும்? இக் கருத்தை ஜனாதிபதி மைத்திரி கூறும் போது,முஸ்லிம்களிடையே மைத்திரி மீதான நல்லெண்ணத்தைக் குறைத்துவிடுமென்ற நோக்கில் அமைச்சர் ஹக்கீமை கூற வைத்து இவ் விடயத்தை மிக இலகுவாக கையாண்டாரோ தெரியவில்லை.அவர்கள் கூறுவதற்கெல்லாம் தலையாட்ட அவர்களது அரசின் அமைச்சுக்களை இவர்கள் வைத்திருக்கின்றார்களே!

ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேனவும் கிழக்கு முதலமைச்சர் கடற் படை அதிகாரிக்கு ஏசிய விடயத்தை பிழை எனக் குறிப்பிட்டுள்ளார்.இனவாதத்திற்கு அப்பால் சிறு பான்மையினருக்கு குரல் கொடுத்து வரும் பலரும் (ஜே.வி.பி,கலாநிதி விக்கிரம பாகு கருனாரத்ன,மனோ கனேசன்) ஆளுநரின் செயற்பாட்டைக் கண்டிப்பதோடு கிழக்கு முதலமைச்சரின் செயற்பாட்டைக் கண்டிக்கத் தவறவில்லை.இது வரை இவ்விடயத்தில் கிழக்கு முதலமைச்சர் கடற் படை அதிகாரிக்கு ஏசிய விடயத்தை எந்த முக்கிய புள்ளியும் சரி எனக் கூறவில்லை.இது தொடர்பில் கிழக்கு முதலமைச்சர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலும் குறித்த கடற் படை வீரர் மீது பிழையைச் சாட்டாது அவர் மீடியா நபர்களைத் தடுக்கும் நோக்கில் தன்னைத் தடுத்திருக்கலாமெனக் கூறி கிழக்கு முதலமைச்சரே குறித்த கடற் படை வீரரின் செயற்பாட்டிற்கு நியாயமும் கற்பித்துள்ளார்.இதன் பிறகு முதலமைச்சர் மன்னிப்புக் கோராமல் இவ்விடயத்திலிருந்து நழுவுவது அவ்வளவு இலகுவானதல்ல என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது.இலங்கை நாட்டின் கடற் படையே குறித்த அதிகாரிக்கு ஆதரவாக செயற்படுவதால் இது நியாயம் கிடைக்காது முடிவிறுமொரு பிரச்சியாகவும் தெரியவில்லை.பாதுகாப்பு படை வீரர்களை அரசியல் வாதிகள் இழிவு படுத்தும் வகையில் நடந்து கொண்டது இது தான் முதற் தடவையுமல்ல.இதற்கு முன்பு பல தடவைகள் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்ற போதும் அவைகளுக்கு பாதுகாப்பு படைகள் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல் இதனைத் தூக்கிப் பிடிப்பது இனவாதத்தின் ஒரு வடிவம் தான்.இதற்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்றதால் இவ் விடயம் சரியென்றாகப் போவதுமில்லை.

அமைச்சர் ஹக்கீமின் கிழக்கு முதலமைச்சர் மன்னிப்புக் கோர வேண்டுமெனக் கூறிய கருத்தை வைத்து,முதலமைச்சர் மன்னிப்புக் கேட்டால் அது அவரது செல்வாக்கை குறைந்து விடுமென்பதால் கூறியதாக கூறுகின்றனர்.இதற்காக இலங்கை நாட்டின் படையிடம் தங்களது கட்சி உறுப்பினரை மாட்டி விட்டு வேடிக்கை பார்க்குமளவு மு.கா பலமிக்கதல்ல.அதற்கு இது தகுந்த நேரமுமல்ல என்பதை அமைச்சர் ஹக்கீம் நன்கே அறிவார்.மிகச் சிரமத்திற்கு மத்தியில் கிழக்கு முதலமைச்சைத் தக்க வைத்துள்ள மு.காவின் தலைவர்,ஹாபிஸ் நஸீர் முதலமைச்சராகக் கூடாதென எண்ணியிருந்தால் மு.காவை முதலமைச்சை எடுக்காது தடுத்திருக்க முடியும்.இது ஆதாரமற்ற கற்பனையின் உச்சமெனலாம்.அமைச்சர் ஹக்கீம் இக் கருத்தை முன் வைத்த இடத்தில் தான் பிக்குகளிடத்தில் மன்னிப்புக் கோரிய கதை ஒன்றைக் கூறி தன்னைத் தாழ்த்தி நஸீர் ஹாபிசை மன்னிப்புக்கேட்க உள ரீதியாக தைரியப்படுத்தியுள்ளமை பாராட்டத்தக்கதொரு செயலாகும்.இக் கூற்று நஸீர் ஹாபிஸ் மன்னிப்புக் கோர சற்று உள ரீதியான தைரியத்தை வழங்கும்.

ஒரு முதலமைச்சர் மன்னிப்புக் கோருவதொன்றும் அவரது தன் மானத்திற்கு இழுக்கானதொரு செயலல்ல.அவ்வாறு கூறுவது எமது மக்களின் அறியாமை.இந் நிகழ்விற்கு முதலமைச்சர் ஆளுநரின் சில விடயங்களால் உள அதிருப்தியில் வந்ததால் குறித்த அதிகாரி தடுத்த போது மனிதன் என்ற வகையில் அவ் அதிகாரி மீது கோபப்பட்டிருக்கலாம்.மனிதன் என்பவன் தவறுக்கும் மறதிக்கும் மத்தியில் படைக்கப்பட்டவன்.இச் சம்பவம் இடம்பெற்ற மறு கனம் முதலமைச்சர் மன்னிப்புக் கோரியிருந்தால் அது அவரது பெருந் தன்மையை வெளிக்காட்டிருக்கும்.இவர் பிழை செய்து குறித்த அதிகாரியிடம் மன்னிப்புக்கோராமல் இருப்பாராக இருந்தால் நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் அகப்பட்டுக்கொள்வார்.அதுவும் பதவி ரீதியான அகங்காரம் என்பதால் இறைவனின் பிடியும் மிகக் கடுமையாக இருக்கும்.அல்லாஹ்வின் தண்டனையா? மன்னிப்புக் கோரலா? என்றால் மன்னிப்புக் கோரலுக்கே ஒரு முஸ்லிம் முதன்மை வழங்குவான்.இதனை யாரும் மறுக்கவுமுடியாது பிழையென வர்ணிக்கவுமியலாது.இருந்தாலும் அவர் இவர் சொல்லுவதற்காக மன்னிப்புக் கோருவது பிழையானது.அது அவரது பதவி பட்டங்களைப் பாதுகாப்பதற்கான மன்னிப்பாக மாறிவிடும்.கிழக்கு முதலமைச்சர் இவ் விடயத்தை ஜனாதிபதி தீர விசாரித்து மன்னிப்புக் கோரச் சொன்னால் தான் மன்னிப்புக் கோரத் தயாரெனக் கூறி இருப்பதானது சற்று சங்கோஜமான கூற்றாகும்.குறித்த விடயத்தில் ஜனாதிபதி விசாரித்தே உண்மையை அறிய வேண்டும்.ஆனால்,நஸீர் ஹாபிசிற்கு எது உண்மை என்பதே தெரியும்.

நஸீர் ஹாபிஸ் தான் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தன்னைக் கண்ட ஆளுநர் மேடைக்கு வருமாறு அழைத்ததாகவும்,அவ்வாறு தான் மேடைக்குச் செல்லும் போது குறித்த அதிகாரியால் தடுக்கப்பட்டதாக கூறியதோடு மீடியா நபர்களை மேடைக்குச் செல்லாது தடுக்கும் நோக்கில் அவர் என்னைத் தடுத்திருக்கலாமெனவும் கூறியுள்ளார்.இங்கு குறித்த அதிகாரி முதலமைச்சர் என்ற வகையில் நஸீர் ஹாபிசை வேண்டுமென்று தடுக்கவில்லை என்பது புலனாகிறது.தாங்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளை பாதுகாப்பது குறித்த பாதுகாப்பு அதிகாரிகளின் கடமை.அங்கு அமெரிக்கத் தூதுவரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.குறித்த கடற் படை அதிகாரி தனது பணியைச் செய்ததற்கே ஏச்சு வாங்கியுள்ளார்.முதலமைச்சர் முஸ்லிம் என்பதற்காக இதைச் சரியென நியாயப்படுத்த வரும் முஸ்லிகளும் இனவாதிகளாகும்.

குறித்த நிகழ்வு இடம்பெற்ற தினம் அப் பாடசாலை கடற் படையின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதாலும் (அரச நிகழ்வு) அப் பாடசாலை கிழக்கு மாகணத்தின் ஆதிக்கத்திற்குட்பட்டதென்பதாலும் அக் குறித்த நிகழ்விற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரை அந் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் முறைப்படி அழைத்திருக்க வேண்டும்.இன்னும் சொல்லப் போனால் குறித்த நிகழ்வை கிழக்கு மாகாண சபையே ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.இந் நிகழ்வில் முதலமைச்சரை சிறிதேனும் கணக்கில் கொள்ளாது செயற்பட்டமை ஆளுநரின் அதிகார ஆதிக்கமெலாம்.இதன் போது சிலர் பாதுகாப்பு படை வீரர்களின் கலந்து கொள்கையை சிவில் துறைக்குள் பாதுகாப்பு படையனரின் அட்டகாசம் போன்று வர்ணிக்க முற்படுகின்றனர்.குறித்த தினமே அப் பாடசாலை கடற் படையின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதால் அன்று பாதுகாப்பு படை வீரர்களின் கலந்து கொள்கையை பிழையெனக் கூற இயலாது.ஆளுநர் கூறியதற்கிணங்கவே அவர்கள் இந் நிகழ்வை ஏற்பாடு செய்ததால் அதனையும் பிழை எனக் கூற முடியாது.இங்கு பாதுகாப்பு படைகள் சிவில் துறைக்குள் நுழையவில்லை என்பதும் அவர்கள் மக்கள் பிரதிநிகள் என அறிந்து முரண்படவில்லை என்பதும் மறுதலிக்க முடியாத உண்மை.இப்படி இருக்கையில் இவ்வாறான கருத்துக்களைப் பரப்பி முதலமைச்சரின் பிழையை சரியாக்க முனைவது ஏற்கத்தகுந்ததல்ல.இது ஜெனீவாவில் பாதுகாப்பு படையினர் சிவில் துறைக்குள் தாக்கம் செலுத்துகிறார்கள் என்பதற்கான ஆதாரமாக ஒரு போதும் அமையாது.இந் நிகழ்வில் அமெரிக்க பிரதிநிதி கலந்து கொண்டதாலும் பாடசாலை மாணவர்கள் பார்த்துக்கொண்டிருந்ததாலும் இலங்கையின் மானம் வெளிநாட்டுக்குப் பறந்ததோடு இவர்களினூடாக தவறானதொரு வழிகாட்டல் அம் மாணவர்களைச் சென்றடைந்திருக்கும்.

இது தொடர்பில் மு.கா ஒரு ஆராய்வுக் கூட்டத்தை ஒழுங்கு செய்திருந்ததாக கூறப்படுகின்ற போது அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் இன்னும் வெளிக் கொணரப்படவில்லை.இவ் விடயத்தை மிகச் சூட் சுமமாக கையாள்வதற்கான உத்தியாகவுமிருக்கலாம்.முதலமைச்சர் கடற் படை அதிகாரியுடன் நடந்து கொண்ட விதம் பிழையாக இருந்தாலும் இப் பிழையின் அடிப்படை ஆளுனரில் இருப்பதால் ஆளுநரும் இது விடயத்தில் மன்னிப்புக்கோர வேண்டும்.அமைச்சர் ஹக்கீம் முதலமைச்சரை மன்னிப்புக் கோரக் கோரும் அதே நேரம் ஆளுநரையும் மன்னிப்புக் கோரும் நிபந்தையை முன் வைக்க வேண்டும்.இப்படியெல்லாம் முன் வைத்து நெஞ்சை நிமிர்த்திச் செல்லும் துணிவு மு.காவிற்கிருப்பதாக நான் நம்பவில்லை.

இன்று மாகாண சபைகளில் ஆளுநர்களின் அதிகாரங்கள் மிகைத்திருப்பதால் இச் சந்தர்ப்பம் அதனைத் தெளிவு செய்ய மிகப் பொருத்தமானதாகும்.இச் சந்தர்ப்பத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஆளுநர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார் என்ற வகையில் (அரசியலமைப்பு 154.ஆ.4.ஆ.iii) ஆளுநருக்கு எதிராக கிழக்கு மாகாண சபையில் ஆளுநரை நீக்கும் வகையில் ஜனாதிபதிக்கு சமர்பிக்கப்படும் உரையொன்று கொண்டுவரப்படல் வேண்டும்.குறித்த அறிக்கையை மாகாண சபைக்கு கொண்டு செல்வதற்கான அக் கூட்டத்திற்கு சமூகமளித்தோரில் அரைவாசிக்கும் மேற்பட்ட ஆதரவு த.தே.கூவின் ஆதரவுடன் பெறக் கூடிய ஏதுவான சந்தர்ப்பமுமுள்ளது.இதனை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க மூன்றில் இரண்டு பெரும் பான்மை தேவை என்பதால் அதனை மு.கா பெறுமா என்பது சந்தேகத்திற்கிடமாக இருந்தாலும் மு.கா,த.தே.கூவிற்கு அப்பால் ஒரு சில உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்குமாக இருந்தால் அதனை நிறைவேற்றி ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கவும் முடியும்.இதனை மு.கா கொண்டு வருமா?

அன்று தொடக்கம் இன்று வரை மாகாண சபைகளுக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட வேண்டுமென த.தே.கூ முழு மூச்சாக செயற்படுகின்ற போதும் இப்படி ஆளுநர் விடயத்தில் கொக்கரிக்கும் மு.கா என்ன செய்துள்ளது என்பதுவே இங்கெழுகின்ற வினாவாகும்.இலங்கை அரசியலமைப்பின் படி ஆளுநருக்கு மிகுந்த அதிகாரமிருப்பது மறுக்க முடியாத உண்மை.அரசியலமைப்பில் xviiஅ அத்தியாயத்தை வாசிக்கும் ஒருவர் இதனை மறுதலிக்காது ஏற்றுக்கொள்வார்.இன்று இந்த ஆளுனரை நீக்கினாலும் நாளை வரும் ஆளுநரும் மாகாண சபையின் செயற்பாட்டை சவாலுக்குட்படுத்தலாம்.இன்று அரசியலமைப்பை சிறு பான்மையினரின் நலனுக்காக மாற்றுவது சாத்தியமற்ற ஒன்று.அப்படியாக இருந்தால் முதலமைச்சரோடு சேர்த்து கிழக்கு மாகாண ஆளுநரையும் மு.கா கைப் பற்றும் போராட்டத்தை கைக் கொள்ள வேண்டும்.இது வரை நான் அறிந்த வகையில் மு.கா இப்படியான ஒரு போராட்டத்தைக் கைக் கொண்டதாக இல்லை.ஆளுனரை நியமிக்கும் அதிகாரம் இலங்கை அரசியலமைப்பின் படி ஜனாதிபதியிடம் இருப்பதால் ஜனாதிபதி மாத்திரம் நினைத்தால் மிக இலகுவாக பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்புமுள்ளது.இது வரை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக ஒரு முஸ்லிமை நியமிக்க முடியாதவர்கள் இவ்வாறான போராட்டங்களில் வெற்றியுருவார்கள் என்பதை நம்ப இயலாது.

கிழக்கு மாகாண சபை இன்று கலைக்கப்படுமா? அல்லது நாளை கலைக்கப்படுமா? என்ற நிலையே காணப்படுகிறது.இச் சந்தர்ப்பத்தில் இவ்வாறான மோதல்கள் கிழக்கு மாகாண சபையை கலைக்கும் நிலைக்கும் இட்டுச் செல்லாம்.எது எவ்வாறு இருப்பினும் இன்று மு.காவும் த.தே.கூவும் இணைந்து கிழக்கு மாகாண சபையை ஆளுவதால் நஸீர் ஹாபிசை முதலமைச்சர் கதிரையை விட்டகற்றுவதற்கு யாராலும் முடியாது.

குறிப்பு: இக் கட்டுரை இன்று செவ்வாய் கிழமை 31-05-2016ம் திகதி நவமணிப் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.இக் கட்டுரை தொடர்பில் ஏதேனும் விமர்சனங்கள் இருப்பின் akmhqhaq@gmail.com எனும் முகவரிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ் விடயம் தொடர்பில் நான் இதற்கு முன்பு ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளேன்.அக் கட்டுரையை வாசித்தால் இது தொடர்பில் இன்னும் தெளிவு பெற முடியுமென நம்புகிறேன்.

 

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *