கிழக்கு மாகான ஆளுநராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் அவர்கள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டதனை அடுத்து அவருக்கு வாழ்த்து செய்திகள் குவிந்தவண்ணம் உள்ளன. முஸ்லிம் சமூகம் இன்னும் அரசியல் பக்குவம் அடையவில்லை என்பதுதான் இதற்கு காரணமாகும்.
அரசியலமைப்புக்கு முரணாக, ரணில் தலைமையிலான ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததனால், ஐ.தே. கட்சியினதும், அதன் தோழமை கட்சியினது அதிகாரத்தினை மட்டுப்படுத்துவதற்கும், தனது சுதந்திர கட்சியை கட்டியெழுப்புவதற்குமாகவே திடீரென புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
ஏற்கனவே பதவி வகித்த ஆளுநர்கள் ரணிலுடன் உறவுகளை பேணி வந்ததனால் ஐ.தே கட்சியின் ஆட்சி அதிகாரத்துக்கு அவர்கள் சவாலாக இருக்கவில்லை.
இதனால் அவர்களது பதவிக்காலம் முடிவடைய முன்பாகவே புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் ஜனாதிபதியின் நம்பிக்கையினை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் கிழக்கு மாகாணத்தில் ஐ. தே. கட்சியின் அதிகாரத்துக்கு சவால்விடுவார் என்ற அடிப்படையிலும், தனது சுதந்திர கட்சியை கிழக்கு மாகாணத்தில் கட்டியெழுப்புவார் என்ற நம்பிக்கையிலுமே ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கு ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபையில் முதலமைச்சர் மற்றும் அமைச்சரவை இருந்தபோது கடந்தகால ஆளுநர்களின் அதிகார தலையீட்டுக்கு முன்பாக அவர்களினால் ஈடுகொடுக்க முடியவில்லை.
இன்று அவ்வாறான எந்தவித மக்கள் பிரதிநிதிகளும், நிருவாகமும் இல்லாத நிலையில், மாகானத்துக்குட்பட்ட அனைத்து கிழக்கு மாகான அதிகாராத்தினையும் ஒரு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஹிஸ்புல்லாஹ் என்ற தனி நபரிடம் வழங்கப்பட்டுள்ளதானது யாரும் எதிர்பாராத ஆச்சர்யப்படக்கூடிய விடயமாகும்.
இவ்வாறான அதிகாரத்தினைக்கொண்ட கிழக்கு மாகான ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் என்ன செய்யப்போகின்றார் ? ஜனாதிபதியின் நோக்கத்தினை நிறைவேற்றப் போகின்றாரா ? அல்லது பதவி என்னும் அலங்காரத்தோடு வலம்வரப்போகின்றாரா ?
அல்லது கிழக்குமாகாணத்தில் தீர்க்கப்படாமல் இருக்கின்ற முஸ்லிம்களின் பிரச்சனைகளை தீர்க்கப்போகின்றாரா ? என்பதுதான் இன்று எல்லோரினதும் எதிர்பார்ப்பாகும்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் முதன்மை பிரச்சினையாக காணிப் பிரச்சினை உள்ளது. திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட முஸ்லிம்களின் காணிகள் இன்னும் மீள கையளிக்கப்படவில்லை.
அத்துடன் அம்பாறை மாவட்டத்தில் பொன்னன்வெளி கண்டம், அஸ்ரப் நகர், அம்பலன் ஓயா, பொத்துவில், பாலையடி வட்டை, கோமாரி உட்பட அம்பாறை மாவட்டத்தில் சுமார் மூவாயிரம் ஏக்கர் சுவீகரிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிகள் இன்னும் விடுவிப்பு செய்யப்படவில்லை.
இதற்காக முஸ்லிம் காங்கிரஸ் பல முயற்சிகள் மேற்கொண்டிருந்தும் அதற்காக கடந்தகாலங்களில் அதிகாரத்தில் இருந்த கிழக்குமாகான ஆளுநர்களின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.
எனவேதான் ஆளுநராக முழு அதிகாரத்துடன் பதவியில் அமர்த்தப்பட்டுள்ள ஹிஸ்புல்லாஹ் அவர்கள் இவ்வாறான முஸ்லிம்களின் காணிகளை மீட்பதற்கு துணிச்சலுடன் செயல்படுவாரா ?
அல்லது அபிவிருத்தி என்ற போர்வையில் தங்களின் சில அரசியல் எடுபிடிகளுக்கு சலுகைகளை வழங்குவதன் மூலம் சுதந்திர கட்சியை கிழக்கு மாகாணத்தில் கட்டியெழுப்பும் ஜனாதிபதியின் எண்ணத்தினை நிறைவேற்றப்போகின்றாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்.
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது