[எம்.ஐ.முபாறக்]
ஏறாவூரில் நிர்மானிக்கப்படவுள்ள கிழக்கு இலவச புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் இரண்டு தொகுதிகளை நிர்மாணித்து முடிப்பதற்கான அடிக்கல் இன்று சனிக்கிழமை பிற்பகல் நான்கு மணிக்கு நடப்படவுள்ளது.
இரண்டு கோடி ரூபா பெறுமதியான இந்த நிலையத்தை நிர்மாணிப்பதற்கான நிதி திரட்டும் நடவடிக்கை டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் கட்டமாக ஏறாவூரில் தொடக்கி வைக்கப்பட்டது.இதன்மூலம் இரண்டு நாட்களுக்குள் 12.5 லட்சம் ரூபா திறப்பட்டது.
புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தின் ஏற்பாட்டுக் குழு சார்பில் இந்த நிதியை திரட்டிய பல சமூக சேவை அமைப்புகள் ஏற்பாட்டுக் குழுவிடம் உத்தியோகபூர்வமாக நிதியை ஒப்படைத்தன.
இந்த நிதியைக் கொண்டு நிலையத்தின் ஒரு பிரிவுக்கான கட்டடத்தை கட்டி முடிப்பதற்கு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.
மேலும் கட்டார் நாட்டில் நமக்காக நாம் அமைப்பால் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு மற்றுமொரு கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லும் நடப்படவுள்ளது.மொத்தமாக இரண்டு கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் இன்று நடப்படுகின்றது.
இந்த நிதியை திரட்டிய பொது அமைப்புகளின் பிரதிநிதிகளே இந்தக் கட்டடத்துக்கான அடிக்கல்லை நட்டு வைக்கவுள்ளமை இந்த நிகழ்வின் சிறப்பம்சமாகும்.
இதேவேளை,இரண்டாம்கட்ட நிதி திரட்டலுக்கு நிர்வாகம் தயாராகிக்கொண்டு இருக்கின்றது.அத்தோடு,மத்திய கிழக்கு நாடுகளிலும் நிதி திரட்டல் மும்முரமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்த நிதி திரட்டல் நிறைவடைந்ததும் நிர்மாணப் பணியின் இரண்டாம் கட்டம் முன்னெடுக்கப்படும்.