பிரதான செய்திகள்

கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு 2007′ சுற்றுநிருபத்தின் படி நியமனம் வழங்கப்பட வேண்டும்

(அஸ்லம் எஸ்.மௌலானா)

2013 ஆம் ஆண்டு சுற்றுநிருபத்தின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டால் பெரும்பாலானோர் நியமனம் பெறுகின்ற வாய்ப்பை இழக்க நேரிடும் என்பதால் 2007 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்தின் படி நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அம்பாறை மாவட்ட சுயாதீன தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் எம்.பௌசர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கிழக்கு மாகாணத்தில் இருபது வருடங்களுக்கு மேலாக பணியாற்றிய 445 தொண்டர் ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு கடந்த ஜனவரி மாதம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்த போதிலும் சில இழுபறிகள் காரணமாக நியமனம் வழங்குவதில் தொடர்ந்தும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நியமனத்தை வழங்குவதற்காக இம்மாதம் 12  தொடக்கம் 15ஆம் திகதி வரை நடைபெறவிருந்த நேர்முகப்பரீட்சையும் பிற்போடப்பட்டிருக்கிறது. அதேவேளை சுற்றுநிருபத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பாத்திரத்திற்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்கவில்லை.

மஹிந்த அரசாங்கத்தில் கிடப்பில் போடப்பட்டிருந்த தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனத்தை வழங்குவதற்கு நல்லாட்சி அரசாங்கம் முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ள போதிலும் நிர்வாக மட்டத்திலான குளறுபடிகள் இன்னும் நிவர்த்தி செய்யப்படவில்லை. இதனால் எமது தொண்டர் ஆசிரியர்களுக்கான நியமனம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டில் அம்பாறை மாவட்டத்தில் நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியவர்களுள் பெரும்பான்மையின தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட அதேவேளை தமிழ்பேசும் தொண்டர் ஆசிரியர்கள் 109 பேர் புறக்கணிக்கபட்டிருந்தனர்.

ஆகையினால் அனைத்து தொண்டர் ஆசிரியர்களுக்கும் நியமனம் கிடைக்கும் வகையில் 2007 ஆம் ஆண்டு சுற்றுநிருபத்தின் பிரகாரம் நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்க வேண்டும். அதற்கு எமது அரசியல் தலைமைகள் அழுத்தம் கொடுக்க வேண்டும். இவ்விடயம் மேலும் இழுத்தடிக்கப்படுமானால் நாம் வீதியில் இறங்கி போராடுவதற்கு நிர்ப்பந்திப்படுவோம் என்கின்ற எச்சரிக்கையை விடுக்கின்றோம்” என்றார்

Related posts

பொத்துவில் – ஹெட ஓயா நீர்த் திட்டத்தை நிறைவேற்றுவேன்-அமைச்சர் ஹக்கீம்

wpengine

மட்டக்களப்பு ஜெயராஜ்ஜின் புதிய கண்டுபிடிப்பு

wpengine

கத்தோலிக்க அருட்தந்தையர்கள் சடலத்தை தனிமைப்படுத்த மீண்டும் தோண்டிய! மன்னார் ஆயர் இல்லம்

wpengine