Breaking
Mon. Nov 25th, 2024

கிழக்கின் எழுச்சியை ஒரு பிரதேசவாதமாக கற்பிதம் பண்ணும் அல்லது அதை அவ்வாறு காட்டி புறமொதுக்க நினைக்கும் இலங்கை முஸ்லிம்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணமாகிறது.


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவம் மாற்றப்பட வேண்டும் அது கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோசத்துடன் கிழக்கின்எழுச்சி அமைப்பு தனது முனைப்புகளைச் செய்து வருகிறது.

இன்று மு.கா வின் தலைமைத்துவம் றவூப் ஹக்கீமிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்ற
செயல்வாதத்துடன் கூடிய முயற்சி பல தரப்பாலும் ஏற்கப்படுகிறது. காரணம் பெருந்தலைவர் அஷ்ரபின் கொலைக்குப் பின்னர் மு.கா விற்கு தலைமை தாங்கிய ஹக்கீம் அக்கட்சிக்கு அதுவரை இருந்த பேரம் பேசும் சக்தியை மழுங்கடித்திருக்கிறார். அதன் தலைவராக பதவிக்கு வந்து அஷ்ரப் சாதித்த விடயங்களை மட்டுமே இன்னுமின்னும் பேசிக்கொண்டிருக்கிறாரே தவிர அவரால் இந்த
சமூகத்தில் சாதித்தவை எதுவுமில்லை. அஷ்ரப் தெளித்த அத்தர்தான் இன்றும் சில
போராளிகளை கிறக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது .

இதற்கும் அப்பால் மு.கா தோற்றுவிக்கப்பட்டது இந்நாட்டில் வாழும் முஸ்லிம் சமூகத்தின்
தனித்துவத்தையும் உரிமைகளையும் பாதுகாப்பதும் வென்றெடுப்பதும் என்ற அடிப்படைக் கொள்கையிலாகும். தனித்துவத்தை தளர்த்தி விட்டு பேசுவதற்கும் அஷ்ரப் தயாராகவே இருந்தார்.
1972 ஜனவரியில் புத்தளத்தில் பள்ளிக்குள் தொழுது கொண்டிருந்த முஸ்லிம்களை
சிங்கள பொலிசார் சுட்டுக் கொன்ற போது அப்போதைய ஸ்ரீ மா அரசாங்கத்தில் முக்கிய
பங்கு வகித்த டாக்டர் பதியுதீன் மஹ்மூத் போன்றவர்களால் இது தொடர்பில் எதுவும்
வாய்திறந்து பாராளுமன்றில் பேசமுடியவில்லை.

காரணம் அவர்கள் தமது விசுவாசத்தை சிங்கள அரசுக்கும் தமக்கு வாக்களித்த குறிப்பிட்டளவு
சிங்கள மக்களுக்கும் காட்டவேண்டியிருந்தது. நல்ல காலம் இவர்கள் செஞ்சோற்றுக் கடனிறுக்க
ஹக்கீமைப் போல் சமூகத்தை விற்கவில்லை. இந்நிலையில் அன்று இது தொடர்பில் தந்தை
செல்வநாயகத்தினால் மட்டுமே பாராளுமன்றில் பேசமுடிந்தது. அது கொள்கைக்கான குரல். இவ்வாறான பல சூழ்நிலைகளை கருத்திற் கொண்டுதான் அஷ்ரப் மு.கா வை தாபித்ததும்
முஸ்லிம்களின் பாதுகாப்பு குரலாக அக்கட்சியை செயற்படுத்தியதுமாகும். அன்று அஷ்ரபும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் கிழக்கிலிருந்து பெரும்பான்மை முஸ்லிம் வாக்குகளால்
தெரிவு செய்யப்பட்டனர்.

அதனால்தான் அவர்களால் கிழக்கு முஸ்லிம்களோடு சேர்ந்து இந்தாட்டில் வாழ்ந்த அனைத்து
முஸ்லிம்களுக்கும் சார்பாக குரல் கொடுக்க முடிந்தது. எனவே இந்நாட்டில் முஸ்லிம்களின்
பாதுகாப்புக்கென தோற்றுவிக்கப்பட்ட ஒரேயொரு கட்சி ஸ்ரீ லங்கா முஸ்லிம்
காங்கிரஸ் மட்டுமே. இதன் அர்த்தபூர்வாங்கம் பெருந்தலைவரின் காலத்தில் நிரூபிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் தலைமை வகித்த ஹக்கீமால் முஸ்லிம்களின் உரிமை பெருந்தேசிய வாதிகளாலும் சர்வதேசத்தாலும் கொச்சைப்படுத்தப்பட்ட போதும் இந்நாட்டு முஸ்லிம்களுக்கும் அவர்களது பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் வந்த போதும் பொறுத்துக் கொள்ளப்பட்டதே தவிர ஆக்கபூர்வமான எந்நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. காசு வாங்கினேன். நான் எடுக்கவில்லை என்று ஓட்டுக்குள் சுருங்கிக் கொள்ளும் நத்தை தனம்தான் சாணக்கியத்தின் சாகசம்.

இதை கருத்தில் கொண்டுதான் கிழக்கின் எழுச்சி மு.கா தலைமைத்துவம்
முழுக்கமுழுக்க முஸ்லிம் பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட ஒருவரை
தலைவராக நியமிக்க வேண்டும் எனப் போராடுகிறது. அதுதான் எந்த பேரினவாத
சக்திக்கும் பயப்படாமல் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகத்திற்காக குரல் கொடுக்கும்.
அது கிழக்கிற்கு வெளியே வாழுகின்ற சமூகத்திற்கும் சேர்த்தே என்பது
நிதர்சனமானதாகும்.

கிழக்கு விடியும் போது எல்லா திசைகளிலும்தான் வெளிச்சம் பாய்கிறது. பெளதீக நியதி அரசியல் நியதி ஆகும் இன்ஷா அல்லாஹ். ஆனால் இன்று கிழக்கிற்கு வெளியே உள்ள
முஸ்லிம்கள் கிழக்கின் எழுச்சியை அவர்களைப் புறந்தள்ளிய போராட்டமாக பார்ப்பது ஒரு வித
புரிந்து கொள்ளாமையே. இது கிழக்கான் மேற்கான் எனப் பிரிக்கும் வாதமல்ல. மாறாக
இன்று முஸ்லிம் அரசியலின் அக புற நிலைகளில் காணப்படும் இயலாமையை
இல்லாமலாக்கி நமது அடுத்த தலைமுறையை பாதுகாக்கும் ஒரு வழிமுறையாகும்.
ஏனெனில் அஷ்ரப் மு.கா வை தோற்றுவித்தது கிழக்கிற்கு வெளியே தர்கா டவுனிலும்
நுவரெலியாவிலும் தேர்தல் கேட்டு உள்ளூராட்சி மாகாணசபை உறுப்பினர்களை
தோற்றுவிக்க அல்ல. மாறாக கிழக்கில் கிடைக்கும் மக்கள் அங்கீகாரத்தைக் கொண்டு
ஏனைய பகுதிகளிலும் வாழும் முஸ்லிம்களையும் பாதுகாக்கவே. அன்று அஷ்ரபை கல்லெறிந்து விரட்டிய ஒருவரைக் கொண்டே இன்று மட்டக்களப்பில் தனித்து போட்டியிட்டு கட்சியின் வீரியத்தை காட்ட வேண்டிய கையறு நிலையை உருவாக்கியிருக்கிறது சாணக்கிய
தலைமை.அதுவும் கிழக்கில்தான் சாத்தியம் என்பதும் இந்த இடத்தில் அழுத்திப் பார்க்கப் பட
வேண்டியதொன்றாகிறது.

உண்மையில் வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை பெறுவதற்கு அங்கு மு. கா வில் தேர்தல் கேட்க வைப்பது அம்மக்களின் நிம்மதியைக் கெடுக்கும் வேலை. வடகிழக்கிற்கு வெளியில் சிங்கள மக்களுக்குள் 5% அல்லது 10% வாழும் முஸ்லிம் மக்கள் மு.கா ஆதரவாளர்களாக மாற வேண்டுமென்ற நிலைப்பாடு ஆரோக்கியமற்ற ஒன்றாகும்.

அவர்கள் ஐ.தே.க வை அல்லது ஸ்ரீ. ல.சு.க வை அல்லது ஜே.வி.பி யை ஆதரிப்பதே சாலச்சிறந்த
அரசியல் முன்னெடுப்பாகும். ஏனெனில் இந்நாட்டிலுள்ள அரசியல் புறநிலை யதார்த்தங்கள் அவ்வாறான அரசியல் கலாசாரத்தையே வளர்த்து விட்டுள்ளது. இந்த நாட்டில் தமிழர்கள் தமிழீழம் வேண்டிப் போராடியது இந்நாட்டு தமிழர்களுக்காக மட்டுமே என்று சிந்திப்பது மிகக் குறுகிய
பார்வையே. உண்மையில் அது தமிழ்நாட்டில் சாத்தியப்படுத்த முடியாத நிலையில் அங்கு
வாழும் பல கோடி தமிழர்களையும் மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல மூலைமுடுக்குகளில் வாழும் தமிழர்களுக்கும் குரல் கொடுக்கக்கூடிய ஒரு நாட்டை உருவாக்குவதையே நோக்காகக்
கொண்டிருந்தது என்றே பார்க்க வேண்டியதாகும்.

பின்னர் சட்டத்தரணி உருத்திரகுமாரால் உருவாக்கப்பட்ட நாடுகடந்த
தமிழீழமும் அதனையே பறைசாற்றியது. அதுபோலவே கிழக்கின் எழுச்சியும் மு.கா வின் தலைமையை கிழக்கிற்கு கேட்பது இந்நாட்டின் மொத்த முஸ்லிம்களுக்கும் அது
போல உலக முஸ்லிம்களுக்கும் குரல் கொடுக்கக்கூடிய ஒரு வீரியமும் சமூக வேட்கையுமுள்ள ஒரு தலைமைத்துவத்தை உருவாக்குவதற்காகவே ஆகும். சிங்கங்கள் தங்கள் சரித்திரத்தை எழுதும் வரை வேட்டையின் வரலாறு வேடனைத்தான் போற்றும். இது எல்லோருக்கும் சேர்த்து நாங்கள் போராடுகிறோம் என்று முன்வந்துள்ள கனவான்களின் விடுதலை எழுச்சி.

இலங்கையின் அண்மைய அரசியல் போக்குகள் இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்கும்
நகர்வுகள் கொண்டதாக உள்ளது. அவ்வாறான நிலையில் தோற்றுவிக்கப்படும்
போது அங்கு உருவாகும் சமஷ்டி அலகில் அல்லது அதிகார அலகில் முஸ்லிம்களின்
அபிலாஷைகளை தனித்துவத்தை வென்றெடுப்பதானது, தேர்தலுக்கு மாத்திரம் கிழக்கிற்கு வரும் ஹக்கீமினாலோ அதே போல தனது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க கணிசமான சிங்கள வாக்குகளை நம்பியிருக்கும் ஹக்கீம், ஹலீம், கபீர் ஹாசிம் மற்றும் வடகிழக்குக்கு வெளியே சிங்கள மக்களின் வாக்குகளையும் நம்பியிருக்கும் எந்த முஸ்லிம் அரசியல் தலைமைகளாலும் முடியாத ஒன்றாகவும் ஆர்வம் காட்டப்படாததுமாகவே இருக்கும்.
எனவேதான் சமஷ்டி அலகோ அதிகார அலகோ பற்றிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த
தீர்மானங்களில் இந்நாட்டு முஸ்லிம்கள் கைவிடப்பட்டு விடக் கூடாது என்ற கரிசனையில் தான் இந்நாட்டு முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியாக பார்க்கப்படும் மு.கா வையும் அதன் தலைமைத்துவத்தையும் கைப்பற்ற கிழக்கின் எழுச்சி போராடுகிறது.

அவ்வாறான ஒரு சுயாட்சி அதிகார அலகு இந்நாட்டு முஸ்லிம்களுக்கு அமைவது கிழக்கில் தான் சாத்தியமாகும். அப்போது நாங்கள் இந்நாட்டு முஸ்லிம்களின் தனித்துவத்திற்காக இலங்கைக்குள்ளும் சர்வதேசத்திலும் போராடுவோம் என்பதை கிழக்கிற்கு வெளியிலுள்ள முஸ்லிம்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

இஸ்லாமிய தூதை தூக்கிச் சென்ற மூலவர்களான மக்கத்து குறைசிகள் இஸ்லாமிய சாம்ராஜ்யம் சாத்தியமான பின்னும் கெளரவப் படுத்தப்பட்டது வரலாறு. மரத்தின் விழுதுகளும் கிளைகளும் எங்கும் வியாபிக்கலாம் ஆனால் விதையிட்ட இடத்தில்தான் வேர்ப்பிடிக்கும். அபிவிருத்தி அரசியலை வேண்டி நிற்பவர்கள் மு.கா விடம் அதனை எதிர்பார்க்க முடியாது. அதுவல்ல அதன் நோக்கம். மு.கா உரிமை நோக்கிப் பயணிக்கும் கட்சியாகும்.

அபிவிருத்தியை எதிர்பார்க்கும் வடகிழக்குக்கு வெளியே உள்ள முஸ்லிம்கள் இந்நாட்டின் தேசிய கட்சிகளை ஆதரிப்பதன் மூலமே அதனை பெற்றுக் கொள்ளமுடியும். எனவே கிழக்கின் எழுச்சியை கிழக்கான் நம்மை ஆள்வதா என்று பார்க்கும் முஸ்லிம் சகோதரர்களே உங்களை நீங்களே ஆளுங்கள்.

அதற்கு மு.கா உங்களுக்கு தேவைப்படாது. தமிழ் தேசிய கூட்டமைப்பு வடகிழக்கிற்கு வெளியே பல ஆயிரம் தமிழர்கள் வாழ்ந்தாலும்அக்கட்சியின் நோக்கமான தமிழர் சுயநிர்ணயத்தை நிலைப்படுத்தவும் தமிழரின் தனித்துவத்தை பாதுகாக்கவும் வடகிழக்கிற்குள் மட்டும்
தலைமைத்துவங்களையும் கொள்கைகளையும் கொண்டு செயற்படுவதை அவதானிக்கலாம்.

அவ்வாறே கிழக்கின் எழுச்சியும் கிழக்கிற்குள் தலைமைத்துவம் அமையவேண்டும் எனப்
போராடுகிறது. ஆனால் உங்களையும் சேர்த்துப் பாதுகாக்க மு. கா வின் தலைமைத்துவம் கிழக்கு
முஸ்லிம்களால் தெரிவு செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற எமது நியாயமான கோசத்தை புரிந்து கொள்ளுங்கள்.

இது உங்களையும் இணைத்துச் செல்லும் போராட்டமல்ல, உங்களுக்கான போராட்டம்.

ரிம்ஸான் அப்துல் சலாம்.
BA (Hons), இலங்கை சட்டக் கல்லூரி.
ஏறாவூர

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *