கிளிநொச்சி _ முட்கொம்பன் கிராமத்துக்கான வீதியை உடனடியாகச் செப்பனிடுமாறு, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.
முட்கொம்பன் கிராமத்துக்கான வீதி மிகவும் சேதமடைந்திருப்பதாக, அப்பகுதி பொதுமக்கள் தொடர்ச்சியாகத் முன்வைத்து வந்த முறைப்பாடுகளை அடுத்து, உடனடியாக அந்த வீதியைப் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்தார்.
இதையடுத்து, அவரது மேலதிக இணைப்பாளர் கோ.றுஷாங்கன் நேரடியாக அந்த வீதியைச் சென்று பார்வையிட்டு நிலைமையை ஆராய்ந்தார்.
இதன்போது, அவ்வீதியை உடனடியாக செப்பனிட நடவடிக்கை எடுக்குமாறு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சார்பாக வீதி அபிவிருத்தி திணைக்கள கிளிநொச்சி மாவட்ட பொறியியலாளரிடம், கோ.றுஷாங்கன் கோரிக்கையை முன்வைத்தார்.
அத்துடன், ஐ றோட் வேலைத்திட்டத்தின்கீழ் இணைக்கப்பட்டுள்ள இந்த வீதிக் கட்டுமானப் பணிகளை, தாமதமின்றி ஆரம்பிக்குமாறும், வீதிக் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க முன்னதாக குன்றும் குழியுமாகக் காணப்படும் வீதியை முதலில் மட்டப்படுத்தி உடனடி மக்கள் பாவனையை இலகுவாக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.