கிளிநொச்சி – இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு முன்னெடுக்கப்பட்டுள்ள சிறுபோக செய்கையில் இடம்பெற்றுள்ள ஊழல் முறைகேடுகளின் பின்னனியில் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதை மூடி மறைக்கும் விதத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்திற்கு பொறுப்பற்ற விதத்தில் பதில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடுக்குளத்தின் கீழ் இவ்வாண்டு நுாறு விதமான நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு பயிர்செய்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக கோரக்கன் கட்டு, பெரியகுளம், முரசுமோட்டை, குமரபுரம் போன்ற பகுதிகள் உள்வாங்கப்பட்டு அவற்றிலும் பயிர்செய்கைகள முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கோரக்கன்கட்டுப்பகுதியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கான காணிகளை வழங்குவதாக தெரிவித்தாலும், அவ்வாறு வழங்காது நீர்ப்பாசனத்திணைக்கள அதிகாரிகள் சிலரும்,சின்னக்காடு மற்றும் கோரக்கன் கட்டு கமக்கார அமைப்பினரும் சேர்ந்து இறுதிப் பயிர் செய்கை கூட்டத்தீர்மானத்திற்கு மாறாக பணத்தொகைக்கான பொதுப்பங்குகள் விநியோகம், முறையற்ற விதத்திலான பங்குகள் வழங்கல் என பல்வேறு முறைகேடுகள் இடம் பெற்றிருப்பதாக தொடர்ச்சியாக முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர், நீர்ப்பாசன பொறியியலாளர்,கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு இணை தலைவர் ஆகியோருக்கான மகஜர்களை கையளித்திருந்தனர்.
இருப்பினும், இதுவரை எந்த விதமான விசாரணைகளோ,தீர்வுகளோ முன்னெடுக்கப்படவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த தகவல்களை பெறும் விதத்தில் தகவலறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விண்ணப்பித்த போது கோரக்கன் கட்டுப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறுபோக செய்கை தொடர்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பொறுப்பாக பதிலளிக்க வேண்டிய நீர் பாசனத் திணைக்களம் பொறுப்பற்ற விதத்திலும் அதிகாரிகளை பாதுகாக்கும் விதத்திலும் பதில்களை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.