கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இயங்கி வருகின்ற மதுவரித் திணைக்களங்களில் பெண் உத்தியோகத்தர்கள் இல்லாத நிலை காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாவட்டங்களில் யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வையடுத்து பின்தங்கிய கிராமங்களில் சட்டவிரோத மது உற்பத்திகள் அதிகளவில் காணப்படுகின்றன.
இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாரும் மதுவரித் திணைக்கள அதிகாரிகளும் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பின்தங்கிய பிரதேசங்களில் இவ்வாறான சட்டவிரோதச் செயற்பாடுகளில் பெண்கள் அதிகளவில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகின்றது.
இவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபடுகின்ற பெண்களை கைது செய்வதற்கு பொலிஸ் நிலையங்களில் பெண் பொலிஸார் இருக்கின்ற போதும், மதுவரித் திணைக்களங்களில் பெண் மதுவரிப் பரிசோதகர்கள் இன்மையால் இவ்வாறான பெண்களைக் கைது செய்வதில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன.
தற்போது வவுனியா அலுவலகத்தில் மாத்திரம் பெண் உத்தியோகத்தர் இருப்பதாகவும் அவர் மூலமாகவே இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டியிருப்பதாகவும் இவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்ட
நிலையில் குறிப்பிட்ட சில பெண்களுக்கு எதிராக நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டிருக்கின்ற பிடியாணைகளை நிறைவேற்றுவதில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகவும் மதுவரித் திணைக்களம் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.