பிரித்தானியாவில் பாலஸ்தீன இளைஞர் ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய நிலையில் அவரை மூன்று பேர் அடித்து உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலஸ்தீனத்தை சேர்ந்த இளைஞர் இஷான் அபுல்ராப் (27) பிரித்தானியாவில் உள்ள துர்ஹாம் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி கிறிஸ்துமஸ் தினத்தன்று பிராம்வெல்கேட் மூர் பகுதியில் உள்ள மதுவிடுதிக்கு இஷான் தனது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அங்கு இஷான் மது அருந்தாத நிலையில் அவரை நோக்கி மூன்று பேர் வந்துள்ளார்கள்.
வந்தவர்கள் இஷான் மற்றும் அவர் நண்பரிடம் நீங்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என கேட்க அவர்கள் பாலஸ்தீனம் என கூறினார்கள்.
உடனே நீங்கள் இஸ்லாமியர்கள் தானே எனவும், தற்கொலை தாக்குதல்தாரிகளா எனவும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
அதெல்லாம் இல்லை என இஷான் கூறிவிட்டு அவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு பதில் சொல்லாத மூவரும் அங்கிருந்து வெளியில் சென்றுள்ளனர். பின்னர் இஷான் மற்றும் நண்பர்கள் மதுவிடுதியிலிருந்து வெளியில் சென்ற போது அவர்களை வம்புக்கிழுத்த மூவரும் துரத்தி சென்று சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர்.
இதையடுத்து மதுவிடுதிக்கே ஓடிய இஷான் அங்கிருந்தவர்கள் உதவியோடு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இஷான் நண்பருக்கு சிறிய காயம் ஏற்பட்ட நிலையில் இஷானுக்கு முகம், முட்டி, தலை என பல இடங்களில் காயம் ஏற்பட்டதோடு தலை வலியும் ஏற்பட்டுள்ளது, இதோடு கண்பார்வையும் மங்கலாகியுள்ளது.
இஷான் கூறுகையில், பாலஸ்தீனத்தில் எப்போதும் சண்டையிருக்கும், அதனால் தான் அமைதி தேடி இங்கு வந்தேன்.
இஸ்லாமியராக நான் இங்கு இருப்பதால் தான் என்னை அவர்கள் அடித்தார்கள். கிறிஸ்துமஸ் என்பது அன்பு மற்றும் நம்பிக்கையின் நேரம், அதில் வன்முறை கூடாது.
இந்த சம்பவத்தால் உடலால் மட்டுமில்லாமல் மனதாலும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளேன் என கூறியுள்ளார்.
இதனிடையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 49 மற்றும் 23 வயதான இரண்டு நபர்களை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.