உடுதும்புர பிரதேச பெண் கிராம அலுவலகர் ஒருவரை மிரட்டி ஆறு மாத காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த ரத்தொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பொலிஸ் விஷேட குற்றப்புலனாய்வு அதிகாரிகள் நேற்றுமுன் தினம் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் உடுதும்புர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றி கொண்டிருந்த போது கடந்த ஏப்பிரல் மாதம் 9ஆம் திகதி முதன் முறையாக குறித்த கிராம அலுவலகரை மிரட்டி துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளார் என விசாரணைகளில் தெரிய வருவதாக குற்றப்புலனாய்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்னை சந்தேக நபர் துஷ்பிரயோகப்படுத்திய பின்னர் இவ் விடயத்தை எவரிடமாவது கூறினால் குறித்த பெண்னையும் அவரது கணவர் மற்றும் பிள்ளைகளை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட குறித்த பெண் கொலை மிரட்டலின் காரணமாக ஆறு மாத காலமாக தான் துஷ்பிரயோகப்படுத்தப்படுவதை யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளார்.
இதனிடையே குறித்த சந்தேக நபரான அதிகாரி உடுதும்புர பொலிஸ் நிலையத்திலிருந்து ரத்தொடைக்கு இட மாற்றமாகி சென்றதை தொடர்ந்து தன் கணவரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார்.
அதன் பின்னரே பாதிக்கப்பட்ட பெண்ணும் அவருடைய கணவரும் பொலிஸில் முறையீடு செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப்புலனாய்வுப்பிரிவினர் குறித்த சந்தேக நபரை நேற்றுமுன் தின பகல் கொழும்பிற்கு வரவழைத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
விசாரணைகளில் குற்றம் உறுதிப்பட்டதைத் தொடர்ந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நேற்றுமுன் தின இரவு குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதோடு நீதி மன்றில் ஆஜர் படுத்துவதற்காக கண்டிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.