Breaking
Mon. Nov 25th, 2024

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்கும் “கிராமத்துடன் உரையாடல்” திட்டத்தின் 13வது நிகழ்ச்சித்திட்டத்திற்காக குருணாகல் மாவட்டத்தின் கிரிபாவ பிரதேச செயலக பிரிவின் வேரகல கிராம சேவகர் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இது இன்று (06) காலை 10.00 மணிக்கு மதுரகம விளையாட்டரங்கில் ஆரம்பமாகும். ஜனாதிபதி அவர்களுடன் அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அமைச்சு செயலாளர்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ “கிராமத்துடன் உரையாடல்” திட்டத்தை திட்டமிட்டிருப்பது கிராமப்புற மக்களிடம் நேரடியாக சென்று கிராமப்புற மக்களின் பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றுக்கு விரைவான தீர்வுகளை வழங்கி அவர்களின் முன்னேற்றத்திற்கு வழிசெய்யும் நோக்கில் ஆகும்.

இலங்கையின் மக்கள் தொகையில் 70% இன்னும் கிராமப்புறங்களிலேயே வாழ்கின்றனர். அவர்களில் 35% பேர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதன் மூலம் தமது வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். இந்த மக்கள் நீண்ட காலமாக பல்வேறு பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். காணிகள் பற்றாக்குறை, சிக்கல்கள் இல்லாத காணி உறுதிப் பத்திரங்கள் இல்லாதிருப்பது, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் பற்றாக்குறை, வீதிகள் மற்றும் போக்குவரத்து சிக்கல்கள், சுகாதாரம் மற்றும் கல்வி பிரச்சினைகள், மனித-யானை மோதல் மற்றும் அதிகாரிகளின் அலட்சியம் ஆகியவை அவற்றில் முக்கியமானவையாகும். கிராம மக்களிடமிருந்து பிரச்சினைகளை அடையாளம் கண்டு, அவர்களின் சொந்த யோசனைகள் மற்றும் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கைகள் இத்திட்டத்தின் போது முன்னெடுக்கப்படுகின்றன. தீர்ப்பதற்கு காலம் செல்லும் பிரச்சிகள் பின்னர் தீர்க்கப்படுவதற்காக குறித்துக்கொள்ளப்படுகின்றன.

கிராமப்புற மக்களை பாதிக்கும் பிரச்சினைகளை ஒருதரப்பிலிருந்து மட்டும் புரிந்துகொள்வது அவற்றைத் தீர்ப்பதில் தாமதத்திற்கு ஒரு காரணம் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் பிரச்சினையை ஒரு விதத்திலும், கிராமவாசிகள் இன்னொரு வகையிலும் பார்க்கிறார்கள். பிரச்சினையின் அனைத்து அம்சங்களையும் சரியாக அடையாளம் காண்பதன் மூலம் இலகுவாகவும் விரைவாகவும் தீர்வை வழங்க முடியும் என்று ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார். இதுவரை இடம்பெற்ற “கிராமத்துடன் உரையாடல்” திட்டங்களில் இந்த முறைமையை பயன்படுத்தி பல சிக்கல்களுக்கு தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

“கிராமத்துடன் உரையாடல்” திட்டம் 2020 செப்டம்பர் 25 ஆம் திகதி பதுளை மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மாத்தளை, இரத்தினபுரி, அனுராதபுரம், அம்பாறை, பொலன்னறுவை, களுத்துறை, மொனராகலை, கேகாலை, கண்டி, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் கடந்த நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன.

இன்று“கிராமத்துடன் உரையாடல்” திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கிரிபாவ பிரதேச செயலகம், அனுராதபுரம் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கும் கல்கமுவை பிரதேசத்திற்கும் எல்லையில் அமைந்துள்ளது. இங்கு 35 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. வேரகல ஏழ்மையான மற்றும் மிகவும் பின்தங்கிய கிராமமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மதுராகம பிரதேசமும் இதில் அடங்குகிறது. 147 குடும்பங்களைக் கொண்ட இப்பிரதேசத்தின் மக்கள் தொகை 537 ஆகும். வேரகல மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களின் முக்கிய வாழ்வாதாரம் விவசாயம். கால்நடை வளர்ப்பு, தச்சு மற்றும் செங்கல் தயாரிப்பு போன்ற சுயதொழில்களிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.

கிரிபாவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்த கிராமங்களில் உள்ள மக்கள் மற்ற பகுதிகளில் போன்றே பல பொதுவான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர் பற்றாக்குறை, காட்டு யானை அச்சுறுத்தல், வீதிகள் மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள், நீர்த்தேக்கங்களின் அணைக்கட்டுகள் உடைதல், பாரம்பரிய விசாய காணிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், கல்வி மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்தல், உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை ஆகியவை இதில் முக்கியமானவையாகும்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *