பாகிஸ்தானின் 70-வது சுதந்திர தினத்தை அந்நாடு இன்று கொண்டாடி வருகிறது. அவ்வகையில், டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இன்று நடைபெற்ற விழாவில் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தலைமை தூதர் அப்துல் பாசித் பாகிஸ்தான் கொடியை ஏற்றிவைத்து அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றினார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பரஸ்பர உறவுகள் பலப்படும் வகையில் இரு நாடுகளின் இறையாண்மையும் காக்கப்படும் நிலையில் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளவே பாகிஸ்தான் விரும்பி வருகிறது என்று அவர் கூறினார்.
இவ்விழாவில் அப்துல் பாசித் பேசியதாவது:-
இன்று எங்கள் நாடு பல்வேறு சவால்களை சந்தித்து வருகிறது, ஆனால், உலகில் உள்ள எந்த சக்தியாலும் பாகிஸ்தானை சேதப்படுத்த முடியாது. பாகிஸ்தானுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் யாராக இருந்தாலும், எங்கள் நாட்டில் வாழும் முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் சீக்கிர்கள் உள்ளிட்ட சமுதாயங்களை சேர்ந்த நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பாகிஸ்தானின் நலனை காக்க எவ்வித தியாகமும் செய்ய தயங்க மாட்டோம்.
ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை பொருத்தவரையில் இந்த ஆண்டின் சுதந்திர தினத்தை காஷ்மீரின் விடுதலைக்காக நாங்கள் அர்ப்பணிக்கிறோம். ஜம்மு-காஷ்மீர் மக்கள் செய்த தியாகங்கள் வீண்போகாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் அமைதியின்மைக்கு முடிவு காணப்பட வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மக்கள் தங்களது சுயநிர்ணய உரிமையை பெறும்வரை அவர்களுக்கு தேவையான ஆதரவை அரசியல்ரீதியாகவும், ராஜாங்க உறவுகளின் வாயிலாகவும், தார்மிக அடிப்படையிலும் பாகிஸ்தான் தொடர்ந்து வழங்கும்.
காஷ்மீர் மக்களின் சட்டரீதியான போராட்டத்தை யாரும் சிறிதுப்படுத்தி பார்க்கவோ, ஒதுக்கி தள்ளிவிடவோ முடியாது. எவ்வளவு பலப்பிரயோகத்தை பயன்படுத்தினாலும், ஜம்மு-காஷ்மீர் மக்களின் அரசியல் அபிலாஷைகளை ஒடுக்கிவிட முடியாது. அவர்களின் விடுதலை இயக்கம் உரிய தீர்வை எட்டியே தீரும்.
ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின்படி, ஜம்மு-காஷ்மீர் பிரச்சனையை தீர்த்துவைக்க வேண்டிய நிர்பந்தம் சர்வதேச சமுதாயத்துக்கு உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.