ஜம்மு-காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவி வரும் பிரச்னை குறித்து மாநில தலைமை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரண்டு நாள் பயணமாக நாளை காஷ்மீர் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இவருடன் உள்துறை செயலாளர் ராஜீவ் மிஸ்ரா செல்கிறார்.
கடந்த மாதம் ஹிஸ்புல் பயங்கரவாதி பர்ஹான் வானி பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி இளைஞர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பாதுகாப்புப் படையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இதுவரை 64 பேர் உயிரிழந்தனர்.
எனவே, தொடர்ந்து 46-வது நாளாக காஷ்மீரின் பல பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களை பற்றி தலைமை அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்க ராஜ்நாத் சிங் நாளை காஷ்மீர் செல்ல உள்ளதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.