காஷ்மீரில் புர்கான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிககப்பட்டுள்ளது. இருப்பினும் அங்கு அமைதி ஏற்படவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் நேற்று ஜனாதிபதியை சந்தித்தனர். இன்று பிரதமர் மோடியை அவர்கள் சந்தித்து, பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தினர்.
அப்போது பிரதமர் மோடி கூறுகையில்,
காஷ்மீரில் மக்கள் உயிரிழந்தது கவலையளிக்கிறது. அவர்களும் நம் மக்களே. காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த பிரச்னைக்கு உறுதியான மற்றும் நிரந்தரமான தீர்வை அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு தீர்வு காண வேண்டும். காஷ்மீர் மக்களிடம் அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். பேச்சுவார்த்தை மூலமே அனைத்து பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை தமக்கு வேதனை அளிக்கிறது எனக்கூறினார்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சி பிரதிநிதி, வளர்ச்சி மட்டும் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக்கூறியுள்ளார். விரைவில் இந்த பேச்சுவார்த்தை துவங்கும் என நம்புவதாக அவர் கூறினார்.
ஒமர் அப்துல்லாவும், வளர்ச்சி என்பது மட்டும் காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வாக அமையாது என்பதை பிரதமர் ஒப்புக்கொண்டதாக கூறினார்.