காஷ்மீர் மாநிலத்தில் கடந்த மாதம் 8-ந்தேதி ஹிஸ்புல் முகாகிதீன் பர்கான் வானி பாதுகாப்புப் படை வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
இந்த வன்முறை சம்பவங்களில் இதுவரை 68-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டனர். சுமார் 30 ஆயிரம் பேர் காயம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றும் வன்முறை நடந்ததால் காஷ்மீரில் குறிப்பிட்ட 5 மாவட்டங்களில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
காஷ்மீர் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு பல்வேறு திட்டங்களை தீட்டியுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் 2 தடவை காஷ்மீர் சென்று உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து காஷ்மீருக்கு அனைத்துக் கட்சி குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அந்த குழுவில் யார்-யாரை இடம்பெற செய்வது என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இன்னும் ஓரிரு தினங்களில் அனைத்துக் கட்சி குழு முடிவு செய்யப்பட்டு விடும்.
அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரம் அனைத்துக் கட்சிக் குழு காஷ்மீர் செல்ல உள்ளது. இந்த குழு காஷ்மீரில் அனைத்துக் கட்சி தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கடந்த 50 நாட்களாக நடந்து வரும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று நம்புகிறார்கள்.
இந்த நிலையில் காஷ்மீர் முதல்-மந்திரி மெகபூபா இன்று (சனிக்கிழமை) டெல்லி வந்தார். பிரதமர் மோடியை அவர் சந்தித்துப் பேசுகிறார். அவரிடம் காஷ்மீரில் நடக்கும் வன்முறையை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அந்த 400 பேரில் பெரும்பாலானவர்கள் பிரிவினைவாதிகளின் ஆதரவாளர்கள் ஆவார்கள். அவர்கள் நடமாட்டத்தை உளவுத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து தகவல் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே பிரிவினை வாதிகளை ஒடுக்கும் நடவடிக்கையையும் மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பிரிவினைவாத தலைவர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படும் சையது அலி ஷா கிலானி, மிர்வாஸ் உமர் பாரூக், யாசின் மாலிக் ஆகிய 3 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது சட்ட விரோத நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் பிரிவினை வாதி யாசீன்மாலிக் காஷ்மீரில் இருந்து வெளியேற்றப்பட்டு டெல்லிக்கு கொண்டு வரப்பட்டுள்ளான். இதனால் காஷ்மீரில் பதட்டம் அதிகரித்துள்ளது.
காஷ்மீர் வன்முறையை கட்டுப்படுத்த தவறியதால் கவர்னர் வோரா மீதும் முதல்-மந்திரி மெகபூபா மீதும் மத்திய அரசு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. எனவே கவர்னர் பதவியில் இருந்து வோராவை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
புதிய கவர்னராக யாரை நியமனம் செய்யலாம் என்ற ஆலோசனை நடந்து முடிந்து விட்டது. ஆனால் அதில் இன்னமும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.