காஷ்மீரில் கடந்த ஜூலை 8 ஆம் தேதி ஹிஸ்புல் முஜாகீதின் இயக்க தளபதி பர்ஹான் வானி பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதையடுத்து அங்கு அமைதியின்மை நீடித்து வருகிறது. பர்ஹான் வானி கொல்லப்பட்டதை கண்டித்து பிரிவினைவாதிகள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதால் அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு உத்தரவு 43-வது நாளாக இன்றும் நீடிக்கிறது. ஸ்ரீநகர் மற்றும் தெற்கு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள இரண்டு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு உள்ளது.இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஸ்ரீநகர் மாவட்டம், ஆனந்த்நாக் டவுன், பாம்போர் டவுன் ஆகிய பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரிவினைவாதிகள் தங்கள் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஆசாத் பேரணி என்ற பெயரில் மாவட்ட தலைமை அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. செல்போன் இணையதள சேவை தொடர்ந்து முடக்கப்பட்டுள்ளது. ஜூலை 9 ஆம் தேதி அங்கு பல்வேறு முறை நடைபெற்ற வன்முறையில் இதுவரை 64 பேர் பலியாகியுள்ளனர்.