(ஊடகவியலாளர்: கரீம் ஏ.மிஸ்காத்)
10.4.2016 ஆம் திகதி வெளிவந்த ஊடகச் செய்தி ஒன்றில் தமிழ் கூட்டமைப்பு நீண்டகால தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ சம்மந்தன் ஐயா தமிழ் முஸ்லிம் உறவுகள் பலப்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்திருந்தார். இது தொடர்பில் நீண்ட காலமாக செயல்பட்டு வரும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கான பிரஜைகள் குழு தலைவர் யாழவன் நஸீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மறப்போம், மன்னிப்போம் என்ற வார்த்தைகளை தேர்தல் காலங்களில் மட்டும் அழகாகச் சொல்லுகின்றோம். பின்னர் அதனை காற்றில் பறக்கவிடுகின்றனர். அதே போல சிங்கள சமூகத்தினது வடக்கு வாழ்விட பிரதேசத்தை மறுதழிக்க தமிழ், முஸ்லிம் உறவுகள் பற்றி அதனை ஐக்கிய படுத்த வேண்டும் என சிலர் காலத்தின் தேவையை மையப்படுத்தி ஊடகப் பிரச்சாரம் செய்கின்றனர்.
இத்தகையோர்கள் நெருப்புக்குள்ளால் தண்ணீரைக் கொண்டு செல்ல முட்படுகின்றனரா? அல்லது தண்ணீருக்குள்ளால் நெருப்பைக் கொண்டு செல்ல முற்படுகின்றனரா? என்ற அறிவு பூர்வமான சிந்தனையை வட மாகாண முஸ்லிம்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
அண்மையில் கௌரவ சம்பந்தன் ஐயா அவர்களும் தமிழ், முஸ்லிம் உறவுகள் பற்றி பிரச்சாரம் செய்கின்றார். இவருடைய இப் பிரச்சாரம் உளரீதியான யதார்த்த சிந்தனை வெளிப்பாடாக வடக்கு முஸ்லிம் சமூகம் ஏற்றுக் கொண்டு நம்பிக்கை அடைய வேண்டுமானால் சில விடயங்களை நிரூபித்து தலைவர் காட்ட வேண்டியுள்ளது.
1. 1990 ஆம் ஆண்டு வடக்கு தாயகத்தில் இருந்து முஸ்லிம்களுடைய சொத்துக்களை புலிகள் கொள்ளை அடித்து வெளியேற்றிய வரலாறு மாபெரும் யுத்த தர்மத்திற்குள் மீறப்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் என்பதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
2. 1990 ஆம் ஆண்டு வடக்கு முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை வடக்கில் மீளக் கட்டியெழுப்புவதற்கு கட்டுப்பாடில்லாத மீள் குடியேற்றச் சுதந்திரத்தை வடக்கு முஸ்லிம்கள் முன்னெடுக்க தமிழ் கூட்டமைப்பு பிரகடணம் செய்ய வேண்டும். அத்துடன் நம்பிக்கை ஊட்டும் சட்ட நடை முறைகளையும் முன்னெடுக்க வேண்டும்.
3. வடக்கு முஸ்லிம்களுடைய மீள் குடியேற்ற நகர்வுகளை கட்டுப்படுத்தி தாயக சனத்தொகைப் பரம்பலை தகர்த்தெறியக் கூடிய வகையில் பின்வரும் விடயங்களில் செயல்பாடுடையதாக தடைக்கல்லாக அமைவதை உடனடியாக நீக்குவதற்கு தலைவர் சம்பந்தன் ஐயாவும், அவர் தரப்பினர்களும் முன் வர வேண்டும்.வீடு வழங்குதல், காணி வழங்குதல் போன்ற விடயங்களில் கொடுக்கப்படும் விண்ணப்பங்களில் வடக்கு முஸ்லிம்கள் புள்ளிகளை இழக்கக் கூடிய வகையில் அமைந்த வினாக்களை உடனடியாக நீக்க வேண்டும். (உ+ம்: 65 ஆயிரம் வீடுகள்)
4. வடக்கு முஸ்லிம்கள் அந்தந்த மாவட்டங்களில் எதிர் கொள்ளும் நிர்வாகச் சிக்கல்களை தீர்த்தல்
இது போன்ற விடயங்களுக்கு கௌரவ சம்பந்தன் ஐயா தீர்வு கண்டு வடக்கு முஸ்லிம்களுடைய உரிமைகளை பாதுகாக்க முற்படுவாரானால் தமிழ், முஸ்லிம் உறவுப்பாலத்தை பலப்படுத்துவது மட்டுமல்லாமல் வட பிராந்திய தமிழ் பேசும் சுயாதீன நல்லாட்சியை ஒற்றை ஆட்சியின் கீழ் கொண்டுவருவதற்கான பூரணமான வதிவிட மக்கள் ஆணை ஒன்றுபடும் என பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கான பிரஜைகள் குழு தலைவர் யாழவன் நஸீர் தெரிவித்துள்ளார்.