காத்தான்குடி பள்ளிவாசல்களில் மிலேச்சத்தனாமாக படுகொலை செய்யப்பட்ட ஷுஹதாக்களின் சுவனவாழ்வுக்காக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரார்த்திப்பதாக அக்கட்சியின் தலைவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
199௦ ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மூன்றாம் திகதி, தமிழ் பேசும் மக்களின் வரலாற்றில் ஏற்பட்ட இந்தக்கறை அனைவரின் மனங்களிலும் நீங்காதுள்ளது. காத்தான்குடி மீரா ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் ஹுசைனியா தைக்காவில் இஷாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது புலிகள் மேற்கொண்ட இக்குரூரக் கொலைகளில் ஷஹீதாக்கப்பட்ட 103 முஸ்லிம்களின் குடும்பங்களுக்கும், உறவினர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை அமைச்சர் றிசாத் தெரிவித்துள்ளார்.
இனஐக்கியம் துருவப்பட்டிருந்த 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஆகஸ்ட் மாதம் நடந்த படுகொலைகளும், அதனைத் தொடர்ந்து அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் வடபுல முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்ட படுபாதகச் செயல்களும், தமிழ் – முஸ்லிம் உறவுக்கு பாரிய விரிசலை ஏற்படுத்தியது. இத்தனை அட்டூழியங்கள் நடந்த பின்னரும் இஸ்லாம் சகிப்புத்தன்மையுள்ள மார்க்கம், இஸ்லாமியர்கள் பொறுமைகாப்பவர்கள் என்பதை யதார்த்த வாழ்க்கையில் முஸ்லிம்களாகிய நாம் நிரூபித்துக்காட்டியிருந்தோம்.
தமிழ் மக்களுக்கு எதிராக நாம் ஒருபோதும் ஆயுதம் தூக்கியதுமில்லை, அவர்களின் அரசியல் ரீதியான கோரிக்கைகளுக்கு நாம் இடைஞ்சலாக இருந்ததுமில்லை. தமிழ்ச் சகோதரர்களுடன் இனிமேலும் இணைந்தும், பிணைந்தும் அந்நியோன்னிய உறவுடனேயே நாம் வாழ விரும்புகின்றோம்.