(எம்.ரீ. ஹைதர் அலி)
தற்போது கிழக்கு மாகாணத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்து வருகின்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் 17.03.2017ஆந்திகதி நேற்று 9 வயதுடைய சிறுமி ஒருவர் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது கவலைக்குரிய விடயமாகும்.
அத்துடன் காத்தான்குடி பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலினால் பாதிப்படைந்து இன்னும் பல உயிரிழப்புக்கள் இடம் பெறலாம் என்ற அச்சத்தினால் காத்தான்குடி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இது தொடர்பாக ஆராயும் அவசரக்கூட்டம் 2017.03.18ஆந்திகதி-சனிக்கிழமை (இன்று) இரவு காத்தான்குடி சம்மேளன காரியாலயத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் அவசர அழைப்பினையேற்று கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர் ஆகியோரும் வருகை தந்திருந்தனர்.
இக்கூட்டத்தில் டெங்கு நோயினை கட்டுப்படுத்தல் தொடர்பாகவும், இந்நோயினால் பொதுமக்கள் பாதிக்காத வன்னம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் அரச திணைக்களங்கள் மற்றும் வீடுகளிலுள்ள சுற்றுச் சூழல்களை சுத்தமாக வைத்துக்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளல் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.
மேலும் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் 20 பேர் கொண்ட அவசர வேலையாட்களை நகர சபையினூடாக அமுல்ப்படுத்தல் என்றும், காத்தான்குடி தள வைத்தியசாலைக்கு தேவைப்பாடாகவுள்ள ஆளணிகளை தற்காலிகமாக அவசரமாக வழங்குவதென்றும் தேவைப்பாடாகவுள்ள மருத்துவ வசதிகளை பெற்றுக்கொடுத்தல் என்ற விடயங்களும் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.