பிரதான செய்திகள்

காணி உறுதிப்பத்திரம் இல்லாத 15,000 பேருக்கு விரைவில் காணி உறுதிப்பத்திரங்கள்!

மகாவலி வலயத்தில் காணி உறுதிப்பத்திரம் இல்லாத 20,000 பேருக்கு காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மேலும் 15,000 காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் பணி இம்மாதம் ஆரம்பிக்கப்படும் என்றும் விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரொஷான் ரணசிங்க,

கடந்த காலங்களில் நிலவிய பொருளாதார நெருக்கடி காரணமாக கால்வாய்களை சுத்தம் செய்யக் கூட நிதி ஒதுக்க முடியாத நிலை காணப்பட்டதாகவும், உலக வங்கியுடன் கலந்துரையாடி, நிதி அமைச்சின் ஆதரவுடன் இரண்டு திட்டங்களுக்கு 10,000 மில்லியன் ரூபா ஒதுக்க முடிந்ததாகக் குறிப்பிட்ட அமைச்சர், அதில் கால்வாய்கள், நீர்ப்பாசனக் கட்டமைப்பு மற்றும் நீர்த்தேக்கங்களை புனரமைப்பதற்கு 3,000 மில்லியன் ரூபா ஒதுக்க நடவடிக்கை எடுத்ததாகவும் தெரிவித்தார்.

கடன் அடிப்படையில் இந்த நிதி பெற்றுக்கொள்ளப்படுவதால் நீண்ட கால பயன்பாட்டைக்கொண்ட பணிகளுக்கு இதனை செலவிட அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் இதன்போது அமைச்சர் தெரிவித்தார்.

மகாவலி வலயத்தில் வசிக்கும் ஒரு சிலருக்கு 50 ஆண்டுகளுக்கும் மேலாக காணி உறுதிகள் இருக்கவில்லை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய புதிய வேலைத்திட்டத்தின் ஊடாக காணி உறுதிகளை வழங்கும் பணியை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி “காணி உறுதி வீட்டுக்கே” என்ற தொனிப்பொருளில், மகாவலி காணிகளில் வசிப்பவர்களுக்கான காணி உறுதிகளை அவர்களின் வீட்டுக்கே சென்று வழங்கும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அதன் மூலம் இதுவரை 20,000 காணி உறுதிகள் வழங்கப்பட்டுள்ளதோடு மேலும் 15,000 உறுதிகளை வழங்க அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

தற்போது வறட்சியான காலநிலை நிலவுகின்ற பிரதேசங்களில் விவசாயத்திற்குத் தேவையான நீரை நீர்த்தேக்கங்களில் இருந்து விடுவித்தல் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் தோன்றியுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், குறிப்பிட்ட சில நீர்த்தேக்கங்களில் இருந்து நீரை விடுவிக்கும்போது அது மின் உற்பத்தியைப் பாதிக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அவ்வாறு நீரை விடுவிப்பதன் மூலம் மின் உற்பத்தி வீழ்ச்சி அடைந்தால் நாட்டில் மின் வெட்டை அமுல்படுத்த வேண்டிய நிலை தோன்றும் சாத்தியம் இருப்பதால் விவசாயம் மற்றும் மின் உற்பத்தி என்ற இரண்டு விடயங்களும் பாதிக்காத வகையில் இந்த சிக்கலைத் தீர்க்க முயற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டதுடன், அங்கு மின்சாரத்தை துண்டிக்காத வேலைத்திட்டத்திற்கு நாம் செல்ல வேண்டும் என்ற கருத்துத் தெரிவிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Related posts

மொட்டு எம்.பி. அவல நிலை வாழ்நாளில் அரசியலுக்குள் வரவேமாட்டேன்

wpengine

சமூர்த்தி கொடுப்பனவு முறையாக வழங்கப்படவில்லை! பிரதேச செயலகத்திற்கு முன்பாக பயனாளிகள் பாரிய ஆர்ப்பாட்டம்! போக்குவரத்து பாதிப்பு

wpengine

தமிழ் மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகளும், அரசியல்வாதிகளும் கடந்தகாலங்களை மறந்து செயற்பட வேண்டும்.

wpengine