(அனா)
கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மிக நீண்டகால பிரச்சனையாக இருந்து வந்த மைதான காணி பிரச்சனைக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தரப்படும் என்று கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.
மிறாவோடை சக்தி வித்தியாலயத்தின் மைதான காணி பிரச்சனை தொடர்பான உயர்மட்ட மாநாடு இன்று சனிக்கிழமை கோறளைப்பற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்றது.
மீறாவோடை காணி பிரச்சனை தொடர்பாக வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்றுக் கொண்டிருப்பதனால் தற்போதைக்கு இரு தரப்பாரும் தீர்ப்பு கிடைக்கும் வரை காணிக்குள் செல்வதில்லை என்றும், தீர்வு பாடசாலைக்கு சாதகமாக கிடைக்கும் பட்சத்தில் காணி உரிமை கோருபவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும், காணி உரிமை கோருவோருக்கு தீர்ப்பு கிடைக்கும் பட்சத்தில் பாடசாலையின் நலனைக் கருத்தில் கொண்டு அக்காணியை விட்டுக் கொடுப்பது என்றும், அக்காணிக்கு மாற்றுக் காணி வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இரு சமூகங்களுக்கிடையில் உள்ள காணிப் பிரச்சனையை பேசி தீர்த்துக் கொள்ள வேண்டுமே தவிர மூன்றாம் தரப்பினர் ஒருவரை கொண்டு வந்து நியாயம் கேட்பதால் எதிர்காலத்தில் இன ஒற்றுமைக்கு பாதகமாக அமையும் என்று கோறளைப்பற்று பிரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர்களான கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.
இம்மகாநாட்டில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், கல்குடா வலயக் கல்விப் பணிப்பாளர் தி.ரவி, ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எஸ்.பெரமுன, மிறாவோடை சக்தி வித்தியாலய அதிபர் எஸ்.சுதாகரன் மற்றும் தமிழ், முஸ்லிம் தரப்புக்களின் பிரதேச அமைப்புக்களின் முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.