தேசிய மக்கள் சக்தியின் காணாமல் போன இரண்டு உறுப்பினர்களும் இன்று (27) மாலை காலி, உனவடுன கடற்கரையில் இருந்த போது கண்டறியப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, குறித்த ஆண் உறுப்பினர், கனங்கே பொலிஸ் நிலையத்திற்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் தெரிவு செய்யப்படும் வாக்கெடுப்பு இன்று (27) நடைபெறவிருந்த நிலையில், இந்த இரு உறுப்பினர்களும் கடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த உறுப்பினர்கள் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, வெலிகம பிரதேச சபையின் முதல் கூட்டத்தின் நடவடிக்கைகள் இன்று ஒத்திவைக்கப்பட்டன.
இந்த பிரதேச சபையில் தேர்தல் முடிவுகளின்படி, தேசிய மக்கள் சக்தி 22 உறுப்பினர்களையும், ஐக்கிய மக்கள் சக்திய உள்ளிட்ட ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் மொத்தமாக 22 உறுப்பினர்களையும் பெற்றிருந்தன.
இதன்படி, பிரதேச சபையின் தவிசாளரை தெரிவு செய்வதற்காக தென் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் தலைமையில் காலை 9:30 மணியளவில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
ஆனால், அந்த நேரத்தில் தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஆண் உறுப்பினரும் பெண் உறுப்பினரும் சபைக்கு வருகை தரவில்லை. அவர்கள் இருவரும் கடத்தப்பட்டதாக அவர்களது கட்சியின் ஏனைய பிரதிநிதிகள் சபைக்கு அறிவித்திருந்தனர்.
இதன் காரணமாக, அவர்கள் வருகை தரும் வரை சபை நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு உள்ளூராட்சி ஆணையாளரிடம் அவர்கள் கோரியிருந்தனர்.
ஆனால், உள்ளூராட்சி ஆணையாளர் அப்போது, சபையில் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை இருப்பதால், நடவடிக்கைகளை இடைநிறுத்த முடியாது எனத் தெரிவித்தார்.
இந்தச் சூழ்நிலையில், சபை நடவடிக்கைகளை 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்க உள்ளூராட்சி ஆணையாளர் முயற்சித்தபோது, சபை வளாகத்திற்கு வந்திருந்த தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் சிலர் சபை மண்டபத்திற்குள் நுழைந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த அமைதியின்மை காரணமாக, சபை நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியவில்லை. இதனால், அடுத்த 30 நாட்களுக்குள் மீண்டும் சபை கூடுவதற்கு எதிர்பார்த்து, தென் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் சபை ஒத்திவைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் அஜித் பிரியந்தவும், கமனி மாலா அல்விஸூம் இவ்வாறு கடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.