இலங்கையில் 30 வருட யுத்த காலத்தில் காணாமல் போனவர்கள் பற்றிய விவகாரங்களை கையாள்வதற்காக நிறுவப்பட்டுள்ள செயலகம் பற்றிய திருத்தச் சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் ஒரு சில கருத்துத் தொிவிக்க அவசாசம் கிடைத்ததையிட்டு நன்றிகளைத் தொிவித்துக் கொள்கிறேன்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக வவுனியா, கிளிநொச்சி, சித்தன்கேர்னி போன்ற இடங்களில் தொடர் சுழற்சிமுறை போராட்டங்கள் இன்றும் நடைபெறு வருகின்றது.
இவர்களில் பெரும்பாலானோர் இறுதி யுத்தம் நடந்து முடியவடைந்து மக்கள் வவுனியாவிட்கு அழைத்துவரும்போது இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்படுகிறது. ஜனாதிபதி அவர்களின் யாழ்ப்பாண விஜயத்தின் போது காணாமல் ஆக்கபட்டோர் அமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். குறிப்பாக இந்த அலுவலகங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட வேண்டும்.
நாட்டில் நல்லாட்சியை உருவாக்க அரசு முன்னெடுக்கும் சில அதிரடி நடவடிக்கைகளினால் சில இனவாதச் சக்திகள் இன்று கதிகளங்கியுள்ளன. அவர்களது இனவெறி அப்பாவி சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்களாக இன்று மாறியுள்ளது.
கடந்த மே மாதம் சர்வதேச வெசாக் வாரத்தைத் தொடர்ந்து சுமார் 20 இற்கும் அதிகமான முஸ்லிம் வியாபார நிலையங்களும் மஸ்ஜித்களும் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையம் உறுதிசெய்கின்றது. அதே போல தேசிய கிறிஸ்தவ எவன்ஜலிகல் பேரவையின் அறிக்கையின் படி, இலங்கையில் கிறிஸ்தவர்களுக்கெதிராக 2015 இல் 90, 2016 இல் 89, 2017 இல் 36 ஆக மொத்தம் 215 வன்செயல்கள் இடம்பெற்றுள்ளன. பிரபல மனித உரிமைகள் சட்டத்தரணி லக்ஷான் டயஸ் அவர்களின் கருத்துப்படி இவற்றில் அநேகமானவை பௌத்த பிக்குகளினால் மேற்கொள்ளப்பட்டவையாகும்.
இன்று நல்லிணக்க பொறிமுறைகளை நோக்கிப் பயணிக்கும் நாம் எந்தவகையிலும் மதத்தை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பாக அமைதி,சாவாழ்வு, சமூக நீதி பற்றிப் போதிக்கும் மதத் தலைமைகள் வன்செயல்களில் ஈடுபடுவதையும், குறித்த வன்முறையாளர்களுக்கு ஆதாரவாக செயற்படுவதையும் அனுமதிக்க முடியாது.
நாட்டில் இன வன்முறைகளைத் தூண்டி பாரிய அழிவுகளுக்கு அடிப்படையாக அமைந்த தேரரை குறித்த காலப்பகுதிக்கு அனைத்து பிரச்சார நடடிவக்கைகளிலிருந்தும் இடைநிறுத்த மியன்மார் தலைமை பீடாதிபதிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை ரூபவாஹினி செய்திகள் அறிவிக்கின்றது. இது பௌத்த சிந்தனை இனவாதத்தைத் தூண்டி பகைமை உணர்வை ஆதரிக்கவில்லை என்பதற்கு ஒரு நல்ல உதாரணமாகும்.
ஆனால் இலங்கையில் மதங்களும், இனவாதப் பிரச்சாரங்களும் அரசியல் இலாபங்களுக்காக சீர்குழைக்கப்பட்டு வருகின்றன. இதனை இன்றைய ஊடகங்களில் வெளிப்படையாகவே காணக்கூடிணதாக உள்ளது.
இலங்கையில் பௌத்த, இந்து, கிறிஸ்தவ மற்றும இஸ்லாமிய சமயங்களின் புனிதத்துவம் பேணப்பட குறித்த இனவாதச் சக்திகள் அகற்றப்பட வேண்டும்.இலங்கையில் தொல்பொருள் தளங்கள் அழிக்கப்படும் போது அமைச்சர் அவர்கள் அங்கு ஹோட்டல் அமைக்க முயற்சிக்கிறார் என்ற குற்றச் சாட்டை முன்வைக்க முயற்சிப்பதானது இந்த இனவாதச் சக்திகளின் அரசியல் நிகழ்ச்சிநிரலை வெளிப்படுத்துகிறது.
அதே இனவாதச் சக்திகள் இலங்கை முஸ்லிம்கள் தேசிய தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்துகின்றனர்கள் என்ற வதந்தியைப் நாடுபூராகவும் பரப்பி சிங்கள மக்களைத் தூண்டி நாட்டில் மீண்டும் ஒரு இனவாத யுத்தத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
நான் இந்த மேலான சபையில் அவர்களுக்கு சவாலிடுகிறேன்! இலங்கையில் கடந்த காலங்களில் எத்தையை தொல்பொருள் தளங்கள் புதையல் திருடர்களாலும் மாற்றுமதக் குழுக்கலாளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்றும், அதேபோல குறித்த புதையல் திருட்டு அல்லது சேதப்படுத்தல்களில் இன, மத அடிப்படையில் எந்த எந்த நாசகாரச் சக்திகள் ஈடுபட்டுள்ளன என்பதையும் நிறுபித்துக் காட்டட்டும்.
இன மத வேறுபாடின்றி இவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். அதேபோல போலிப்பிரச்சாரத்தை மேற்கொண்ட இந்த இனவாத மதக் குழுக்களும் தண்டிக்கப்பட வேண்டும். இவர்களின் நோக்கம் நாட்டில் இனவாதத்தைத் தூண்டி வன்முறைகள் ஊடாக இன்னும் ஆயிரக்கணக்கான மக்களை காணமல் செய்து அல்லது அவர்களை நாட்டைவிடுத் துறத்துவதே அன்றி வேறில்லை.
நாட்டில் இனவாதத்தைத் தூண்டி தேசிய அபிவிருத்தியைச் சீர் குழைப்பதில் தேசிய மற்றும் சர்வதேச சக்திகள் பங்கேற்றுள்ளதை மறுக்க முடியாது.
சிங்கள, தமிழ்,முஸ்லிம் இனங்களை அழிக்க யாராவது முயற்சிக்கின்றார்களேயானால் தராதரம் பார்க்காது அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
எறிகிறதீயில் நெய்வார்ப்பது போல, BBC, ஐநா அமைப்புகள் மற்றும் மேற்கததைய சக்திகள் இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் இளவயது திருமணம் நிகழ்கிறது என்ற வதந்திகளைப் பரப்ப முயற்சிக்கின்றனர். இவ்வாறான சந்தர்ப்பவாத தீய சக்கதிகளின் நடிவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
நான் இந்த சபையில் அதிமேதகு ஜனாதிபதியையும் கௌரவ பிரதமரையும் வேண்டுவது என்னவெனில், மதத்தின் பெயரால் அடுத்த சமயங்களுக்கு ஏற்படும் அச்சசுறுத்தல்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க்கட வேண்டும். எந்தவொரு அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாது வெறுப்புப் பேச்சுக்களைத் தடைசெய்யும் ஒரு புதிய சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு உடனடியான அது நிறைவேற்றப்பட வேண்டும்.
இந்தப் பயணத்தில் அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் இருந்து எமது தாய்நாட்டின் ஒளிமயமான எதிர்காலம் கருதி ஒரு தாய் மக்களாகப் பணியாற்ற வேண்டும்.
காணாமல் செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நீதிகிடைக்கச் செய்வதுடன் உரிய இழப்பீடுகளையும் வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.