(அஹமட்)
அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாக வாக்குறுதியளித்து விட்டு, கடந்த இரண்டு வருட காலமாக ஏமாற்றி வரும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்; இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை வரவுள்ளார்.
இந்த நிலையில்,தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தமது பிரதேசத்துக்கு வழங்குவதாக, மூன்று பொதுத் தேர்தல்களில் வாக்குறுதி வழங்கி விட்டு, தொடர்ச்சியாக ஏமாற்றி வரும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமை, இன்றைய தினம் அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மு.காங்கிரஸ் இளைஞர்கள், பகிரங்கமாக கேள்வி கேட்பதற்கு தயாராக உள்ளனர் எனத் தெரியவருகிறது.
அட்டாளைச்சேனைக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்த தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, தனது அந்தரங்க நண்பர் சல்மானுக்கு வழங்கிய ரஊப் ஹக்கீம்; அட்டாளைச்சேனைக்கு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்குவதற்கு ஹசனலி தடையாக உள்ளார் என, கடந்த காலங்களில் கூறி வந்தார்.
இந்த நிலையில், தனக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியே தேவையில்லை எனக் கூறிவிட்டு, முஸ்லிம் காங்கிரசிலில் இருந்து ஹசனலி விலகியுள்ளார். இருந்த போதிலும், அட்டாளைச்சேனைக்கான தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஹக்கீம் வழங்குவதாக இல்லை.
இவ்வாறானதொரு நிலையில், அட்டாளைச்சேனையில் அபிவிருத்தி மேற்கொள்ளவுள்ளதாக போக்குக் காட்டிக் கொண்டு, இன்றைய தினம் – அங்கு வரவுள்ள மு.கா. தலைவரை, அப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விசனத்துடன் எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த நோன்பு காலத்தில் அட்டாளைச்சேனையில் நடைபெற்ற இப்தார் நிகழ்வொன்றில் கலந்து கொள்ளவதாக இருந்த மு.கா. தலைவர் ஹக்கீமை, அப்பிரதேச இளைஞர்கள் சுற்றி வளைத்து, தமது ஊருக்கு வழங்குதாக உறுதியளித்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் கேட்பதற்குக் காத்திருந்தனர்.
இதனையறிந்து கொண்ட மு.கா. தலைவர், இறுதி நேரத்தில் தனது அட்டாளைச்சேனை விஜயத்தை ரத்துச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்தான், அட்டாளைச்சேனைக்கு நாளை ஹக்கீம் வருகிறார்.
தமது ஊரை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் ஹக்கீமை, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த மு.கா. இளைஞர்கள், நாளைய தினம் அசாதாரணமாக எதிர் கொள்வார்கள் என்றுதான் பேசப்படுகிறது.
15 வருடங்களாக தம்மை ஒருவர் ஏமாற்றி வருகிறார் எனத் தெரிந்திருந்தும், எந்த வித எதிர்ப்புணர்வுகளுமின்றி ஒரு பிரதேசத்தைச் சேர்ந்த மக்கள் சொரணையற்று இருப்பார்கள் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது.
கழுதைக்கு கரட் காட்டுவது போல், அட்டாளைச்சேனை மக்களுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் காட்டிக் கொண்டே காலம் கழிக்கலாம் என்று ரஊப் ஹக்கீம் நினைத்தால், ஏதோ ஒரு கட்டத்தில், அது – பிழைத்து விடும்.