Breaking
Mon. Nov 25th, 2024

(சுஐப் எம் காசிம்)

ஒரு சமூகத்தின் உயிர் நாடியாக விளங்கும் கல்விக்கு கைகொடுத்தவர்கள் என்றுமே அந்த சமூகத்தால் மறக்கப்பட்ட வரலாறு கிடையாதென்றும் அந்த வகையில் வசதி படைத்தவர்கள் கல்விக்காக வாரிவழங்குவது சிறந்த பண்பாகுமெனவும் அமைச்சர் றிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கொழும்பு ஹமீட் அல் ஹ_சைனியா கல்லூரியின் எதிர்கால அபிவிருத்தி குறித்த வேலைத்திட்டம் தொடர்பான கூட்டமொன்று கொழும்பு வெள்ளவத்தையில் இடம்பெற்றபோது அமைச்சர் றிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் நிதியமைச்சர் ரவிகருணாநயக, எம்பிக்களான முஜிபுர் ரஹ_மான், அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் உட்பட பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இங்கு அமைச்சர் கூறியதாவது,

கொழும்பு மாவட்ட முஸ்லிம்களின் கல்வி வீழ்ச்சியடைந்ததற்கு பல்வேறு காரணிகள் இருக்கின்றன. பாடசாலைகளின் வளப்பற்றாக்குறை கொடிய வறுமை சிறுவயதில் தொழில் மீது கொண்ட ஆசை, முறையான வழிகாட்டல் இல்லாத தன்மை போன்றவற்றினாலேயே இந்த மாவட்ட முஸ்லிம்கள் கல்வியிலே பின்னடைந்தவர்களாக இருக்கின்றனர். கொழும்பு முஸ்லிம்களின் சனத்தொகைக்கு ஒப்பான சனத்தொகையிலே அம்பாறை மாவட்ட முஸ்லிம்களும் இருக்கின்ற போதும் அவர்கள் கல்வியிலே உச்ச நிலையில் இருக்கின்றனர். விடா முயற்சியும், கல்விமேல் கொண்ட கரிசனையும், கல்விக்கு அளிக்கும் முன்னுரிமையுமே அவர்களை உயர்த்தி வைத்திருக்கின்றது.

கொழும்பு மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளில் ஏற்பட்டுள்ள வளப்பற்றாக் குறைகளினால் பல பாடசாலைகளில் அனுமதி பெறுவது முயற் கொம்பாகவே இருக்கின்றது. இதனாலேயே பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஆயிரக்கணக்கில் செலவிட்டு சர்வதேசப் பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். இந்த மாணவர்கள் சாதாரண தரம் வரைக் கற்றுவிட்டு தமது கல்வியை இடைநிறுத்துகின்றனர். இதனாலேயே திறமையான ஆற்றலுள்ள மாணவர்களின் கல்வி பாலாகின்றது. அத்துடன் பெற்றோர்களுக்கு அவர்கள் ஒரு சுமையாகவும் இருக்கின்றனர். இந்த நிலையிலிருந்து கொழும்பை மீட்டெடுக்க அனைவரும் முன்வர வேண்டும்.

குறிப்பாக வசதிபடைத்த தனவந்தர்கள் தமது பனத்தை கல்வி மேம்பாட்டுக்காக செலவு செய்வது அவசியமாகின்றது. முஸ்லிம் சமூகத்தின் கொடை வள்ளல் நளீம் ஹாஜியார் நமக்கு சிறந்த முன்மாதிரியாக இருந்தவர். சமூகத்தின் கல்வி மேம்பாட்டுக்காக அவர் வாரிவழங்கியவர். அதன் மூலம் பயனடைந்து உயர்நிலையில் இருப்பவர்கள் ஏராளம்.

தனது பிள்ளையின் கல்விக்காக பத்தாயிரம் ரூபா செலவு செய்தால் சமூகத்துக்காக பத்து இலட்;சத்தை செலவழிப்பதாக அவர் முன்னர் ஒரு முறை கூட்டமொன்றில் உணர்வுபூர்வமாக உரையாற்றியதை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். கல்வியிலே சமூகம் உயர்வடைய வேண்டுமென்பதில் அவர் காட்டிய அக்கறையையும், ஆர்வத்தையும் நாங்கள் புரிந்து கொள்ள முடிகின்றது. எனவே தனவந்தர்கள் வாரிவழங்கும் மனப்பாங்கை ஏற்படுத்தினால் இறைவன் அவர்களுக்கு மேலும் மேலும் செல்வத்தை வழங்குவான் என்பதில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

கடந்த காலங்களில் குபேரமாக வாழ்ந்தவர்கள் ஒரு நொடிப் பொழுதில் எவ்வாறு அகதியாக மாறினார்கள் என்பதற்கு பல சம்பவங்களை உதாணமாகக் கூறமுடியும். வடமாகாண முஸ்லிம்கள் இரவோடு இரவாக விரட்டப்பட்ட போது, அவர்களிடையோன செல்வந்தர்கள் கியூ வரிசையில் உணவுக்காக, உடைக்காக, தேனீருக்காக நின்றதை நாங்கள் கண்ணாரக்கண்டிருக்கின்றோம். அனுபவித்து இருக்கின்றோம். அதே போன்று அண்மையில் கொழும்பில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நமது கண்முன்னே இன்றும் நிலைத்து நிற்கின்றது. இதுதான் மனித வாழ்க்கை.

ஹமீட் அல் ஹ_சைனியா கொழும்பிலே ஒரு சிறந்த கல்லூரி. கல்வியில் மாத்திரமன்றி விளையாட்டுத் துறையிலும், குறிப்பாக உதைபந்தாட்டத்தில் அக்கல்லூரி முன்னணி வகிக்கின்றது. இக்கல்லூரியின் வளர்ச்சிக்காக பழைய மாணவர்கள் அதீத அக்கறைகாட்டிவருகின்றனர். அதன் வெளிப்பாடே இன்றைய கூட்டம். பாடசாலையின் வளப்பற்றாக் குறையையும், இடப் பற்றாக் குறையையும் தீர்ப்பதற்காக அவர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நாங்கள் உதவ வேண்டும்.  

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *