Breaking
Sun. Nov 24th, 2024

(முகம்மத் இக்பால், சாய்ந்தமருது)

சாய்ந்தமருது வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யும் முகமாக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையுடன் (AMH) இணைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் சில அரசியல் நோக்கங்களினால் பிழையான வியாக்கியானங்கள் கூறப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது வைத்தியசாலையில் கட்டடங்கள் பல கட்டப்பட்டாலும், புதிய வாட்டுக்கள் அமைக்கப்பட்டாலும், சாய்ந்தமருது மக்கள் சிகிச்சை பெறுவதற்காக கல்முனை AMH க்கே செல்வது வழமையாகும்.
இந்த நிலையை மாற்றி சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு மக்களை வரவழைத்து அதனை உயிரோட்டமாக்குவதற்காக விசேட சிகிச்சை பிரிவுகளை உருவாக்கி, அதற்கான நிபுணர்களை வரவளைத்து அதனை அபிவிருத்தி செய்யும் பொருட்டு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக அபிவிருத்தி குழுவினர்களும், ஜும்மா பள்ளிவாசல் நிருவாகத்தினர்ககளும் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசிம் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்கள்.

இந்த வேண்டுகோளுக்கமைய, கல்முனை AMH உடன் சாய்ந்தமருது வைத்தியசாலையை இணைத்து சில பிரிவுகளை இங்கு கொண்டுவருவதுடன், அதில் முதல்கட்டமாக எலும்பு முறிவு சத்திர சிகிச்சைக்கான விசேட பிரிவு ஒன்றினை உருவாக்குவதன் மூலம், இவ்வூர் மக்கள் மட்டுமல்லாது பொத்துவில் தொடக்கம் கல்முனை வரைக்குமான கரையோர மக்கள் சாய்ந்தமருது வைத்தியசாலையினை நாடி வருவார்கள் என்ற ஆலோசனை பிரதி அமைச்சர் பைசால் காசிமினால் முன்வைக்கப்பட்டது.

அத்துடன் எதிர்காலங்களில் கட்டம்கட்டமாக இன்னும் பல பிரிவுகளை சாய்ந்தமருது வைத்தியசாலைக்கு கொண்டு வந்து, இதனை கரையோர பிரதேச கேந்திர முக்கியத்துவமிக்க வைத்தியசாலையாக மாற்ற முடியும் என்பது பிரதி அமைச்சர் பைசால் காசிமின் ஆலோசனையாகும்.
இந்த ஆலோசனையை பள்ளிவாசல் நிருவாகத்தினர்கள் உற்பட அனைவரும் ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டார்கள். இதன் காரணமாக இணைப்பது சம்பந்தமான நடவடிக்கைகளை பிரதி அமைச்சர் மேற்கொண்டார். பின்பு அதன் இறுதித் தருவாயில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான சிலர் தலையிட்டு அதனை தடுத்து நிறுத்தினார்கள்.

இங்கே கேள்வி என்னவென்றால், ஆரம்பத்தில் கல்முனை AMH உடன் இணைப்பதற்கு சம்மதம் வழங்கிய சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் நிருவாகத்தினர்கள் பின்பு இதனை எதிர்க்க துணிந்ததன் மர்மம் என்ன ?
விடயம் இதுதான், அதாவது பிரதி அமைச்சர் பைசல் காசிம் முஸ்லிம் காங்கிரசை சேர்ந்தவர். அவர் இவ்வாறான மக்களை கவரக்கூடிய சேவைகளை செய்தால், அது முஸ்லிம் காங்கிரசுக்கு மேலும் நன்மதிப்பு கிடைப்பதுடன், தங்களது எதிர்கால அரசியலுக்கு ஆபத்தாகிவிடும் என்று சிலர் சிந்தித்ததன் காரணமாகவே அது தடுக்கப்பட்டது.

அதாவது சுகாதார பிரதி அமைச்சர், மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் இருந்தும் முஸ்லிம் காங்கிரசினால் சாய்ந்தமருது வைத்தியசாலையினை அபிவிருத்தி செய்யவில்லை என்று எதிர்காலங்களில் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக வசைபாடுவதற்கு எதுவும் இல்லாமல் போவிடும் என்ற காரணத்தாலேயே இது தடுக்கப்பட்டது.

ஏனெனில் கடந்த காலங்களில் இந்த வைத்தியசாலையை கூறிக்கூறியே முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரான பலவிதமான வசைபாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்த இணைப்பினை தடுப்பதற்கு இவர்கள் கூறும் எந்த காரணமும் ஏற்றுக்கொள்ளகூடிய வலுவான காரணங்களல்ல. அதுமட்டுமல்லாது நாங்கள் இதில் ஒன்றை கவனிக்க வேண்டும். அதாவது கல்முனை AMH உடன் இந்த வைத்தியசாலையை இணைக்குமாறு கல்முனை அரசியல் தலைமைகளோ அல்லது AMH நிருவாகமோ ஒருபோதும் கூறவில்லை.

இந்த இரண்டு ஊர்களுக்கும் அப்பால் உள்ள சுகாதார பிரதி அமைச்சர் என்ற முறையில் சாய்ந்தமருது வைத்தியசாலையின் எதிர்காலம் கருதியே இந்த இணைப்பிற்கு பைசல் காசிம் முயற்சித்தார். சில நேரம் சுகாதார பிரதி அமைச்சர் முஸ்லிம் காங்கிரஸ் அல்லாதவராக இருந்திருந்தால் இதனை எதிர்த்தவர்கள் ஆதரவளித்திருக்க கூடும்.

இந்த வைத்தியசாலையின் மீதும், ஊரின்மீதும் உண்மையில் அக்கறை இருந்திருந்தால் முதலில் இணைத்துவிட்டு இதனை ஒரு வெள்ளோட்டம் போல அவதானித்திருக்கலாம். இதில் இவர்கள் கூறுவதுபோன்று பாதகம் இருந்தால், மீண்டும் பழையமாதரி இதே அரசியல் அதிகாரத்தினை கொண்டு பிரிக்க முடியும்.
எனவே சாய்ந்தமருது வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி அரசியல் ஆதாயங்களுக்காக தடுக்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் செல்லாத இடமாகவே தொடர்ந்து இருக்கும். இதனால் இந்த வைத்தியசாலையை சாட்டாகவைத்து எதிர்காலங்களில் முஸ்லிம் காங்கிரசை விமர்சிப்பவர்களின் பாடு கொண்டாட்டம்தான்.

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *