தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்பட்டுள்ள கல்முனை நகர மண்டபத்தை மாநகர சபையிடம் மீள ஒப்படைப்பதற்கு இம்மாதம் இறுதி வரை குறித்த நிறுவனத்திற்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி தெரிவித்துள்ளார்.
கல்முனை நகர மண்டபம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;
“கல்முனை மாநகர சபையின் கடந்த கால பொதுச் சபை மற்றும் நிதிக்குழு என்பவற்றின் தீர்மானத்திற்கு அமைவாக கல்முனை நகர மண்டபமானது தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு வழங்கப்பட்டிருந்தது.
எனினும் ஒப்பந்த காலம் நிறைவடைந்துள்ள நிலையில் நகர மண்டபத்தில் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டுள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான பொருட்களை அகற்றிச் செல்வதற்காக அந்நிறுவனத்தினால் கால அவகாசம் கோரி வேண்டுகோள் விடுக்கப்பட்டதற்கு அமைவாக எமது மாநகர சபையின் வருமான பரிசோதகர்களின் கள விஜயத்தின்போது மேற்கொள்ளப்பட்ட சிபாரிசின் பேரில் இம்மாதம் இறுதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.
மாநகர சபை கட்டளைகள் சட்டத்தின் 267 ஆம் பிரிவின் உப பிரிவு 3 இன் கீழ் 1989 ஆம் ஆண்டின் 541/17 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் பகுதி LVII இற்கு அமைவாகவே மாநகர சபை நிர்வாகத்தினால் இக்கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.