நீண்ட காலம் வெற்றிடமாக இருந்து வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கல்முனை தொகுதி அமைப்பாளர் பதவிக்கு சட்டத்தரணி அப்துல் றஸ்ஸாக் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதன் மூலம் இப்பகுதி கட்சி ஆதரவாளர்களுக்கு உத்வேகம் கிடைத்திருக்கிறது என கட்சியின் கல்முனை தொகுதி பிரசார செயலாளரும் முஸ்லிம் கலாசார, தபால் சேவைகள் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான செயிட் அஸ்வான் ஷக்காப் மௌலானா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது;
“அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மிகவும் சிறப்பாக தலைமைத்துவம் வழங்கி வந்த முன்னாள் உயர் கல்வி பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபா அவர்கள் 2010ஆம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேறியது முதல் சுமார் ஏழு வருட காலம் கல்முனைத் தொகுதிக்கான ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் பதவி வெற்றிடமாக இருந்து வந்தது. இதனால் கட்சி நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது. கட்சித் தொண்டர்களும் சோர்வடைந்து காணப்பட்டனர்.
இந்த அமைப்பாளர் வெற்றிடத்திற்கு மயோன் முஸ்தபாவின் இணைப்பு செயலாளராக பணியாற்றிய சட்டத்தரணி ரஸ்ஸாக் நியமிக்கப்பட வேண்டும் என எமது கட்சியின் தலைவர்- பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பொதுச் செயலாளர்- அமைச்சர் கபீர் ஹாஷிம் போன்றோரிடம் நான் நேரடியாகவும் கடிதங்கள் மூலமாகவும் வலியுறுத்தி வந்துள்ளேன்.
இந்நிலையில் கடந்த வாரம் கட்சித் தலைமையின் பணிப்புரையின் பேரில் செயலாளரினால் இந்நியமனம் வழங்கப்பட்டிருக்கிறது. இதையிட்டு கட்சித் தொண்டர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் சார்பில் கட்சி தலைவர், செயலாளர் மற்றும் ஸ்ரீகொத்தா அதிகாரிகள் போன்றோருக்கு நான் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுடன் இணைந்து நீண்ட காலமாக கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்து வந்த சட்டத்தரணி ரஸ்ஸாக் தனது ஆற்றல், அனுபவம் மூலமாக கல்முனை தொகுதியில் கட்சியைக் கட்டியெழுப்புவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவார் என திடமாக நம்புகின்றேன்.
இவர் கட்சித் தொண்டர்கள் மற்றும் பொது மக்களுடன் இன்முகத்துடன் பழகக்கூடியவர். மக்களின் நன்மதிப்பைப் பெற்றவர். சென்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு, பத்தாயிரத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளை பெற்றுக் கொண்ட இவர் மிகவும் அனைவரையும் அரவணைத்து, நேர்மையாக செயல்பட கூடியவர்.
இவரது நியமனத்தினால் கல்முனை தொகுதியின் அபிவிருத்தி மற்றும் கட்சி புனரமைப்பு நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.
எனவே எமது கட்சி ஆதரவாளர்கள் மாத்திரமல்லாமல் மாற்றுக் கட்சிகளில் இருந்து ஒதுங்கியிருக்கின்ற அனைவரும் எமது அமைப்பாளர் ரஸ்ஸாக் தலைமையில் ஒன்றினைந்து செயற்பட முன்வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கின்றேன்” என செயிட் அஸ்வான் ஷக்காப் மௌலானா குறிப்பிட்டுள்ளார்.