பிரதான செய்திகள்

கல்முனையை சேர்ந்தவரை முன்னிறுத்தி கிழக்கில்தான் முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் அமைய வேண்டும்

(முகம்மத் இக்பால்,சாய்ந்தமருது)

அரசியலில் நன்கு அனுபவித்து பழக்கப்பட்டவர்கள் எல்லோரும் இன்று பதவி பகட்டுக்கள், மற்றும் அதிகாரங்களின்றி இருப்பதனால், தங்களது அரசியல் எதிர்காலத்தினை உறுதிப்படுத்தி வாரிசுகளுக்கு எதிர்கால அரசியல் வழிவகைகளை உருவாக்கிக்கொடுக்க முற்படுகின்றார்கள். இதற்காக கிழக்கின் எழுட்சி என்ற போர்வையில் முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் கிழக்குக்குதான் வர வேண்டும் என்று புதுவகையான அரசியல் பிரச்சாரங்களை சமூக வலைத்தளங்கள் மூலமாக முன்னெடுப்பதனை அவதானிக்க காணக்கூடியதாக உள்ளது. 

இவ்வாறான பொய்ப்பிரச்சார முன்னெடுப்புக்களினால் கடந்தகால வரலாறு தெரியாத இளைய தலைமுறையினர்கள் மத்தியில் தாக்கத்தினை செலுத்துகின்றது. இவர்களது போலிமுகங்களை அறிந்துகொள்ளாது அவைகளை உண்மை என்று நம்புகின்றார்கள். இவ்வாறான பொய்ப்பிரச்சாரங்கள் அனைத்தயும் இளைய தலைமுறையினர்களுக்கு வெளிப்படுத்துவது எமது கடமையாகும்.

முஸ்லிம் காங்கிரஸ் என்னும் எமது அரசியல் பேரியக்கம் உருவாக்கப்பட முன்பு எமது சமூகத்தின் மத்தியில் ஒற்றுமையின்றி பிரதேச வாதங்கள் தலைதூக்கி இருந்தது. எதற்கெடுத்தாலும் பிரதேசத்தினை மையமாக கொண்ட அரசியல் கலாச்சாரம் அன்று இருந்தது. இவ்வாறு பிரதேச ரீதியாக பிளவுபட்டு கிடந்த முஸ்லிம் மக்களை ஒன்றிணைப்பது என்பது கற்பனையில் கூட நினைத்துப்பார்க்க முடியாத ஓர் விசப்பரீட்சயாக காணப்பட்டது.

இந்த காலகட்டத்தில் முஸ்லிம் மக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட தமிழ் ஆயுத இயக்கங்களின் அடக்குமுறை காரணமாக இந்நாட்டில் சிதறிக்கிடந்த முஸ்லிம்களின் ஒற்றுமையும், அரசியல் தனித்துவமும் உனரப்பட்டது. இந்த சூழ்நிலையில்தான் முஸ்லிம் காங்கிரசினை தோற்றுவித்ததோடு, பிரதேசவாதத்தினையும் அன்றைய தலைவர் அஷ்ரப் அவர்கள் தகர்த்தெறிந்து இந்நாட்டின் அனைத்து முஸ்லிம் மக்களையும் முஸ்லிம் காங்கிரஸ் என்னும் மரத்தின்கீழ் முடியுமானவரையில் ஒன்றினைத்தார். இதற்காக தலைவர் அஷ்ரப் அவர்கள் மட்டுமல்ல அன்றைய நூற்றுக்கணக்கான இளைஞ்சர்கள் செய்த தியாகங்கள் ஏராளம்.

முஸ்லிம் காங்கிரஸ் ஓர் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டு போட்டியிட்ட முதலாவது தேர்தல் கிழக்குக்கு வெளியிலாகும். அதாவது கிழக்குக்கு வெளியிலேயே முஸ்லிம் மக்களின் முதலாவது அங்கீகாரம் முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைத்தது என்பது மறுக்கமுடியாத வரலாறு.

1988 ஆம் ஆண்டின் வடகிழக்கு மாகாணசபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டு பதினேழு மாகாணசபை உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது. கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் – தமிழ் எல்லைக் கிராமத்தில் முஸ்லிம் மக்களை அச்சுறுத்தி கொலைசெய்து பொருளாதாரத்தினை சூறையாடிய ஈ.பீ.ஆர்.எல்.எப் இயக்கம் இந்த தேர்தலில் வடகிழக்கு மாகாணசபையை கைப்பெற்றி இந்திய அமைதிப்படையின் பாதுகாப்புடன் ஆட்சிசெய்தது.

முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக முஸ்லிம் மக்களின் பிரதிநிதியாக மாகாணசபைக்கு சென்ற அன்றைய பொறுப்புள்ள சில முக்கிய பிரதிநிதிகள் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளில் கவனம் செலுத்துவதனை விட்டுவிட்டு, மாகாணசபை ஆட்சியாளர்களான ஈ.பீ.ஆர்.எல்.எப் இயக்க உறுப்பினர்களுக்கு கூஜாதூக்கிகளாக இருந்துகொண்டு அவர்களுடன் சேர்ந்து குடித்து கும்மாளம் அடிப்பதிலேயே தங்களது காலத்தை கடத்தினார்கள்.

முஸ்லிம் மக்கள் மத்தியில் ஈ.பீ.ஆர்.எல்.எப் இயக்கத்தின் பெயரை கேட்டாலே அச்ச உணர்வு காணப்பட்ட அதேநேரம், அவ்வியக்கத்தினர்களின் முஸ்லிம் விரோத செயற்பாடுகளுக்கு எதிராக தலைவர் அஷ்ரப் அவர்கள் கண்டன அறிக்கைகளை விடுத்துக்கொண்டிருந்தார். ஆனால் முஸ்லிம் காங்கிரஸ் மாகாணசபை உறுப்பினர்களில் சிலர் பொறுப்பற்ற முறையில் அதே இயக்க உறுப்பினர்களுடன் மது அருந்திக்கொண்டு விடுதிகளில் கும்மாளம் அடித்துக்கொண்டிருந்ததுதான் புரியாத அரசியலாக அன்று இருந்தது.

இதனை கட்டுப்படுத்துவது அன்றைய தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. திருகோணமலையில் நடைபெறுகின்ற இவ்வாறான விடயங்களை தலைவருக்கு விசுவாசமான உறுப்பினர்கள் எத்திவைக்கும் வரையில் எதுவும் அறியாதவராக தலைவர் அஷ்ரப் இருந்தார்.

அதுமட்டுமல்லாது தலைவர் அஸ்ரப்பை முஸ்லிம் காங்கிரசின் தலைவர் பதவியில் இருந்து அகற்றிவிட்டு தலைமை பதவியினை கைப்பெற்றும் நோக்கில் மிகவும் திட்டமிட்ட பாரிய அடித்தளம் ஒன்று கட்சிக்குள்ளேயே அமைக்கப்பட்டது. அத்துடன் எந்தவொரு தீர்மானத்தினை மேற்கொள்வதாக இருந்தாலும் அனைத்துக்கும் முட்டுக்கட்டைகளும், இடையூறுகளையும் தலைவர் அஷ்ரப் அவர்கள் எதிர்கொண்டார். எனவேதான் கட்சியின் உள்வீட்டு பிரச்சினை எல்லைமீறி சென்றபோது வேறுவழியின்றி சிலரை அதிரடியாக முஸ்லிம் காங்கிரசிலிருந்து நீக்கினார்.

முஸ்லிம் காங்கிரசிலிருந்து தலைவர் அஷ்ரப் அவர்களினால் வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து “முஸ்லிம்” என்ற பெயர் பதத்துடன் கூடிய கட்சி ஒன்றினை அமைத்தார்கள்.

இந்தநிலையில் 1994 ஆம் ஆண்டு உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஒன்றினை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்கொண்டது. அப்போது முஸ்லிம் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்ட உதிரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து முஸ்லிம் காங்கிரசை அழித்து அத்தேர்தலில் தோக்கடிக்க வரிந்துகட்டிக்கொண்டு களத்தில் நின்று செயற்பட்டனர். இதற்கு துரும்பாக இவர்கள் பாவித்ததுதான் பிரதேசவாதம்.

அத்தேர்தலில் அக்கரைப்பற்றில் ஒவ்வொரு வீடு வீடாக சென்று அல் – குரானை கையில் ஏந்திக்கொண்டு கல்முனயானுக்கு வாக்களிக்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணும்படி அன்று மக்கள் வற்புறுத்தப்பட்டார்கள். முஸ்லிம் காங்கிரசுக்கு அளிக்கப்படும் வாக்குகள் அனைத்தும் கல்முனயானுக்கே சென்றடையும். எனவே கல்முனையான் முஸ்லிம்களுக்கு அரசியல் தலைமை வகிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்ற பிரதேசவாதம் தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு எதிராக அன்று அக்கரைபற்றில் விதைக்கப்பட்டது.

அதேபோல் ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, போன்ற பிரதேச மக்களிடம் சென்று கலியோடை பாலத்தினை எல்லையிட்டு, கலியோடை பாலத்தை தாண்டிய கட்சியான முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிப்பது ஹராம் என்று மேடை மேடையாக கொடிய பிரதேசவாத பிரச்சாராம் முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் அன்றைய பிரதேசசபை தேர்தலின்பின்பு வாக்குகளை எண்ணியபோதுதான் புரிந்தது மக்கள் பிரதேசவாதிகள் அல்ல என்பது. முகத்தை முறிக்க முடியாமல் முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களிக்க மாட்டோம் என்று சத்தியம் செய்தவர்கள்கூட முஸ்லிம் காங்கிரசுக்கே வாக்களித்தார்கள். அன்று பிரதேசவாதத்தினை முன்னிறுத்தி தமது அரசியல் இருப்பினை உறுதிப்படுத்த எடுத்த முயற்சிகள் அனைத்தும் மக்கள் மத்தியில் புஸ்வானமாகியது.

“முஸ்லிம்” என்று பெயர்தாங்கிய கட்சி ஒன்றின் மூலமாக முஸ்லிம் காங்கிரசுக்கு போட்டியாக இவர்கள் எல்லோரும் களம் இறங்கியபோது, முஸ்லிம் காங்கிரஸ் அழிந்து விட்டது என்றும், அஸ்ரப்பின் கதை முடிந்து விட்டது என்றும் மாயை ஒன்று மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது. ஆனால் அந்த தேர்தளுடனேயே அந்த கட்சி இருந்த அடையாளம் இன்றி அழிந்துபோனது. அதன் பெயர்கூட இன்றய தலைமுறையினர்களுக்கு தெரியாது.

முஸ்லிம் காங்கிரசில் இருக்கும்வரைக்கும் பிரதேசவாதத்துக்கு எதிராகவும், சமூக ஒற்றுமையை வலியுறுத்தியும் மேடை மேடையாக வாய்கிழிய பேசியவர்கள், முஸ்லிம் காங்கிரசில் இல்லாதபோது தங்களது அரசியல் இருப்பினை உறுதிப்படுத்துவதற்காக கொடிய பிரதேசவாதத்தினை முன்னிறுத்தி முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரிவினைகளை உண்டுபண்ணி தங்களது சுயநல அரசியலை மேற்கொள்கின்றார்கள்.

எனவேதான் அன்று எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள் முஸ்லிம் காங்கிரசுக்கு தலைவராக இருந்தபோது, கல்முனயான் முஸ்லிம்களுக்கு தலைமை வகிக்க கூடாது என்று தங்களின் தனிப்பட்ட சுயநலத்துக்காக மக்கள் மத்தியில் இருந்த ஒற்றுமையை சிதறடிக்க முற்பட்டவர்கள் எல்லோரும், இன்று புதிய வேடம் தரித்துக்கொண்டு, அதே கல்முனையை சேர்ந்தவரை முன்னிறுத்தி கிழக்கில்தான் முஸ்லிம் காங்கிரசின் தலைமைத்துவம் அமைய வேண்டும் என்று மீண்டும் புதுவகையான பிரதேச வாதத்தினை விதைக்கின்றார்கள்.

இது தங்களின் பதவிகளுக்காக முஸ்லிம் மக்களிடம் இருந்துவரும் ஒற்றுமையினை சிதறடித்து முஸ்லிம் தேசியத்தினை அழிப்பதற்கான தந்திரோபாயமாகும் என்பதனை மக்கள் அறியாமலில்லை.

(எனது இந்த கட்டுரை விடிவெள்ளி பத்திரிகையில் கடந்த 22.07.2016 இல் வெளிவந்தது.)

Related posts

பலசரக்கு தூள் சார் உற்பத்திகள் சந்தைப்படுத்தல் கிளையை பார்வையட்டேன்; நாடு முழுவதும் பரவலாக்கத் தட்டம்:

wpengine

கூட்டமைப்புக்காக அரசியல் செய்யப்போகும் மன்னார் ஆயர்

wpengine

16ஏக்கர் காணி மன்னார் அரசாங்க அதிபர் வசம்! இன்று விடுவிப்பு

wpengine