(அனா)
கல்குடாத் தொகுதி முஸ்லீம் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை சீரழிப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் முற்படுகின்றார். அவரது அரசியல் இலாபத்திற்காக ஒட்டுமொத்த சமுகத்தின் கல்வியையும் சீரழிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கிராமிய பொருளாதார பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
பிரதி அமைச்சரின் பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதியில் இருந்து வாழைச்சேனை அந் நூர் தேசிய பாடசாலைக்கு வழங்கப்பட்ட ஒலிபெருக்கி சாதனங்களை கையளிக்கும் நிகழ்வு இன்று (02.09.2016) கல்லூரி பிரதான மண்டபத்தில் கல்லூரி முதல்வர் ஏ.எம்.தாஹிர் தலைமையில் இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தர்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்..
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லீம் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் கல்வி சென்றடைய வேண்டும், கல்வியில் எமது மாவட்டம் முதன்மை மாவட்டமாக திகழவேண்டும் என்ற நோக்கத்தில் அரசியில் செய்யும் ஓர அரசியல் வாதி நான். அதனால்தான் கிழக்குமாகாண முதலமைச்சருக்கு சொல்கிறேன் கல்வி விடயத்தில் அரசியலை புகுத்த வேண்டாம் என்று.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் ஓட்டமாவடி கல்வி கோட்டத்தில் உள்ள பாடசாலையில் உயர்தர வகுப்புக்கு கற்பிக்கும் ஓர் ஆசிரயர் இடமாற்றத்திற்கு அதிபரினதோ அல்லது வலயக்கல்விபணிப்பாளரதோ அனுமதியின்றி பதில் ஆசிரியர் நியமிக்கப்படாமல் கிழக்கு மாகாண முதலமைச்சரின் சிபாரிசில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாரு ஓட்டமாவடி கல்விக் கோட்டத்தில் உள்ள பாடசாலையில் உயர்தரம் கற்பிக்கும் ஆசிரியர் பதில் கடமைக்கு எவரும் இல்லாமல் இடமாற்றம் பெற்றுச் சென்றால் உயர்தர வகுப்பு மாணவர்கள் குறித்த பாடத்தை எவ்வாறு கற்றுக் கொள்வது? அடுத்த ஆண்டு பரீட்சை எழுத உள்ள மாணவர்களது நிலைமை என்ன? உங்களுக்கு தேவையானவர்கள் என்றால் மாணவர்களது எதிர்காலம் பற்றி எதுவும் சிந்திக்காமல் இடமாற்றங்களை செய்வது ஓட்டமாவடி கல்வி கோட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு செய்யும் துரோகமாகும்.
எனது அரசயில் வரலாற்றில் என்னை நூறு வீதம் எதிர்த்தவர் என்றாலும் அவர் திறமையானவர் என்றால் அவரை ஆதரித்த வரலாறும் எனது நூறு வீத ஆதரவாளராக இருந்து பாடசாலைகளை சீரழிக்கின்றார்கள் என்றால் அவர்களை இடமாற்றம் செய்த வரலாறும்தான் உள்ளது நான் ஒரு போதும் அரசியல் இலாபத்திற்காக கல்வி சமூகத்தை சீரழிக்க முற்பட்டதுமில்லை, அவ்வாறு செயற்படவும் மாட்டேன்.
தாங்கள் விரும்புகின்ற போது விரும்புகின்ற பாடசாலை கிடைக்க வேண்டும் என்பதற்காக அந்த இடமாற்றத்தை செய்து தரும் அரசியல் வாதிகளுக்கு பின்னால் காலத்திற்கு காலம் சந்தர்ப்பத்திற்கு ஏற்றால் போல் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் தங்களது கொள்கைகளை மாற்றிக் கொண்டு திரியும் ஆசான்களும் சிறந்த சமுகத்தை உருவாக்கக்கூடிய ஆசான்களாக இருக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மத்திய வலயகல்வி அலுவலக உதவி கல்விபணிப்பாளர் எம்.எஸ்.கே.றஹ்மான், பிரதி அமைச்சரின் இணைப்பாளர் எச்.எம்.தௌபீக், பாடசாலை அபிவிருத்தி சங்க பிரதிநிதிகள், பழையமாணவர் சங்க பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்.