ஈஸ்டர் தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காத நபர்களை தற்போதைய அரசாங்கம் பாதுகாத்து வருகிறதோ என்ற சந்தேகம் தனது மனசாட்சிக்கு அமைய இருப்பதாக ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த (Sanath Nishantha) தெரிவித்துள்ளார்.
புத்தளம் மஹகும்புக்கடவல பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். இந்த நிகழ்வில் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கலந்துக்கொண்டார்.
எமது வணக்கத்திற்குரிய கர்தினால் முதுகெலும்புள்ள தலைவர். அவரது வர்த்தைகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். ஏற்படுத்தாமலும் இருக்கலாம். அவர் முன்வைக்கும் விடயங்களில் உண்மை உள்ளது.
நானும் ஒரு நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றேன். ஈஸ்டர் தாக்குதல் நடந்த போது தகவல்களை மறைத்தனர், மக்களை பாதுகாக்க தவறினர் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ள அன்றைய பொலிஸ் மா அதிபர், பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் சிறையில் இருக்க வேண்டும்.
அந்த காலக்கட்டத்தில் முப்படை தளபதியாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருந்தார். அவரை அழைத்து வாக்குமூலம் ஒன்றை கூட பெறவில்லை என்றால், அரசாங்கம் அவர்களை பாதுகாக்கின்றதோ என்ற சந்தேகம் கத்தோலிக்கன் என்ற முறையில் எனது மனசாட்சிக்கு இருக்கின்றது.
இந்த விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது. எமது இந்த இரண்டு தலைவர்களும் தமது மனசாட்சியிடம் கேட்டுப் பார்த்தால் நல்லது என சனத் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.