கருச்சிதைவு பற்றி பல நாடுகளில் சார்பாகவும் எதிராகவும் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இலங்கையில் எதிரான கருத்துகளே வேரூன்றியுள்ளன. ஆயினும் தற்கால உலகில் நடைபெறும் சம்பவங்களால் இலங்கையில் கருச்சிதைவு சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கருத்து மெல்லத் துளிர்ந்து வருகிறது. ஆகவே நாம் இரண்டு கருத்துகளையும் அறிந்து கொள்வது காலத்தின் தேவையாகும்.
வாசகர்களிடம் மன்னிப்பு
கருச்சிதைவு பற்றி அறிய வேண்டியவர்கள் படித்தவர்களை விட பாமர மக்களேயாவர். ஆகவே இக்கட்டுரை அவர்களும் சரியாக விளங்கிக் கொள்வதற்காக நாட்டு வழக்கில் பாவிக்கப்படும் சில சொற்கள் இக்கட்டுரையிலும் பாவிக்கப்பட்டுள்ளன. அச் சொற்கள் பாவிக்காவிட்டால் பாமர மக்கள் கருச்சிதைவுக்கு அடிப்படையான காரணத்தை சரியாக புரிய மாட்டார்கள். ஆகவே அச்சொல் பாவிக்கப்படுவதற்கு மன்னிப்பு கோருகிறேன். எல்லோரையும் விட அறிவு குறைந்த மக்களே தமது குடும்ப மானத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தவறான முறையில் கருச்சிதைவு செய்ய முயன்று உயிரை இழக்கின்றனர். இக்காரணத்தினால்தான் அவர்களின் மனதில் இங்கு கூறப்படும் காரணங்கள் பதியப்பட வேண்டுமென்று இக்கட்டுரையை எழுதியுள்ளேன்.
கருச்சிதைவு ஏன் செய்ய வேண்டும்?
கருச்சிதைவு ஏன் செய்ய வேண்டும் என்பதற்கு வைத்தியர்கள் ஒரு காரணத்தைக் கூறுவர். கருத்தரித்துள்ள பெண்ணின் உடல் நிலை கருவைத் தாங்கவும் பெற்றெடுக்கவும் இடம் கொடுக்கும் நிலையில் இல்லை என்பதால் அவர்கள் கருச்சிதைவுக்கு ஆலோசனை கூறுகின்றனர். உதாரணமாக இந்தியாவில் 13 வயதில் கருத்தரித்த ஒரு பெண் குழந்தை கருச்சிதைவு செய்ய அனுமதிக்கப்பட்டதை நாம் அறிவோம். ஆகவே வைத்தியர்கள் கூறும் காரணம் நியாயப்படுத்த கூடியதாகும்.
விகாரமான குழந்தை அல்லது
பூரணமாகாத குழந்தை
(Abnormal Fortus)
இன்னுமொரு காரணம் விகாரமான அல்லது அவயங்களில் குறைபாடுடைய குழந்தையாக உருவெடுக்கும் சிசுக்களை பிறப்பதற்கு முன்னரே அழிக்க வேண்டும் என்ற எண்ணம் தற்காலத்தில் பிறக்கப் போகும் குழந்தை என்ன குழந்தை? ஆணா? பெண்ணா? எனப் பார்ப்பதற்கும் அக் குழந்தையும் உடல் அம்சங்களின் வளர்ச்சியைப் பார்ப்பதற்கும் வசதிகள் உண்டு. ‘ஸ்கான்’ என அழைக்கப்படும் முறையில் அறிமுகப்படுத்தப்பட இயந்திரம் மூலம் இதனைக் கண்டு பிடிக்கலாம். அப்படியான ஒரு நிலையில் அதாவது விகாரமாக அல்லது அங்கக் குறைபாடுகளுடன் ஒரு குழந்தை பிறந்து வாழ்வதை விட அக்குழந்தை பிறப்பதற்கு முன்னரே கர்ப்பப் பையில் இருக்கும்போதே அழித்து விடுவது அக் குழந்தைக்கும் பெற்றோருக்கும் நலமானதாக இருப்பதால் அத்தகைய சிசுவை பிறப்பதற்கு முன்னரே கருச்சிதைவு செய்து அழிக்க வேண்டும் என்ற எண்ணம் பெற்றோருக்கு உண்டாகி விடுகின்றது. இதுவும் நியாயப்படுத்தக்கூடிய காரணமாகும்.
பாலியல் வல்லுறவால் பிறக்கும் குழந்தைகள்
இன்னுமொரு காரணம் பாலியல் வல்லுறவால் ஒரு பெண்ணுக்கு கருத்தரித்தால் அக்குழந்தையின் நிலை எப்படி இருக்கும். சமூகத்தில் ஒடுக்கப்பட்ட குடும்பத் தாயாகவும் குழந்தையாகவுமே அவர்கள் இருப்பர். தற்காலத்தில் பாலியல் வல்லுறவு பரந்த அளவில் நடைபெறுகிறது. தராதரம் பார்க்காமல் காரியாலயங்களில், பாடசாலைகளில் மற்றும் வேலைத்தலங்களில், அயல் வீடுகளில், சமய குரவர்களின் மத்தியில் மற்றும் எல்லா இடங்களிலும் பாலியல் வல்லுறவு நடைபெறுகிறது.
மிகச் சமீபத்தில் நான் வீரகேசரி பத்திரிகையில் வாசித்த செய்தி ஒன்றின்படி ‘சந்தியா’ என்ற பாடசாலை மாணவி தனது உயர்தர பரீட்சையை முடித்துவிட்டு சந்தோசமாக வீட்டுக்கு வந்து TV பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு பாதகன் அவளது வீட்டிற்குள் சென்று பாலியல் வல்லுறவு புரிந்தது மட்டுமல்ல, அவளைக் கொலையும் செய்தான். இவள் பரீட்சையின் பின்னர், தான் எந்த தொழிலுக்குப் போக வேண்டும் எப்படி வாழ வேண்டும் என்றெல்லாம் கனவு கண்டுகொண்டிருந்திருப்பாள். பாதகன் அதையெல்லாம் ஒரு நொடிப் பொழுதில் அழித்துவிட்டான். இவள் உயிருடன் இருந்திருந்தால் அவளுக்கு கருச்சிதைவு செய்ய சட்டம் இடம் அளிக்குமா? இல்லை. அவள் சமூகத்தில் ஒதுக்கப்பட்டவளாக அல்லது தினமும் கேவலமான பேச்சுக்களைக் கேட்ட வண்ணமே இருக்க வேண்டும். ஆகவே பாலியல் வல்லுறவுக்குட்பட்ட பெண் குழந்தைகளின் சிசுவை அழிக்க முயற்சிப்பதையும் நாம் நியாயப்படுத்தலாம்.
கர்ப்பிணி தாயின் உயிருக்கு ஆபத்து Mother Facing Threat to her Life from Pregnancy
இன்னுமொரு காரணம் ஒரு கர்ப்பிணித் தாய் தனது குழந்தையை ஏறக் குறைய 10 மாதம் சுமக்கும்போது பல துன்பங்களுக்கு ஆளாவாள். சில வேளைகளில் அவள் இறந்தும் போவாள். அப்படியிருக்கும்போது அவள் விருப்பத்துடன் கருச்சிதைவு செய்வாள் என்று கூற முடியாது. ஆயினும் அவள் கருச்சிதைவு செய்யாவிட்டால் அவளது குழந்தை பிறக்கும். அவள் இறந்து விடுவாள். தாயில்லா குழந்தையாக அக் குழந்தை வளரும். தாய் இல்லா குழந்தை தறுதலையாகும் என்று சிலர்கூறுவதுண்டு. ஆனால் தாயில்லாக் குழந்தையாக வளரும் குழந்தைகள் எல்லாம் கெட்டவர்களாக வளர்வதில்லை. மிக அறிவாளனாகவும் உலகம் போற்றுபவனாகவும் வரலாம். இதற்கு ஒரு உதாரண மனிதனாக லியனாடோ டாவின்சி விளங்குவதை நாம் காணலாம்.
ஒரு பாடசாலையில் ஆசிரியர் கற்பித்துக் கொண்டு இருக்கும் போது ஒருநாள் ஆசிரியர் சிறுவகுப்பாரிடம் ஒவ்வொருவரும் உங்களது தாயாரின் படத்தை வரைந்து எனக்குக் காட்டுங்கள் என்று கூறியபோது ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் வரைந்து காட்டினர். ஆசிரியர் வரையாத மாணவனிடம் நீர் ஏன் வரையவில்லை என்று கேட்டபோது எனக்கு அம்மா இல்லை. நான் அம்மாவைக் கண்டதில்லை என்று கூறினான். ஆசிரியர் அம்மாணவனைத் தேற்றுவதற்காக மாணவனின் வீட்டுக்குச் சென்றபோது அம் மாணவனின் அறையில் பல பெரிய படங்கள் கீறப்பட்டு இருந்தன. அனைத்தும் பெண் தாயார்களின் படங்கள். ஆசிரியர் மாணவனிடம் இவர்கள் யார் என்று கேட்க இவர்களில் ஒருவர் எனது அம்மாவாக இருக்க மாட்டார்களா? என கற்பனை பண்ணி நான் வரைந்துள்ள படங்களே என்று கூறினான். இவன் வேறு யாரும் இல்லை. உலகப் பிரசித்திபெற்ற டியனாடோ டாவின்சி ஆவார். ஆகவே தாயில்லாக் குழந்தைகள் தறுதலையாகும் என்பதை ஏற்க முடியாது. எனவே வைத்தியர்களின் ஆலோசனைப்படி உயிருக்கு ஆபத்து என்று கருதினால் தாயாருக்கு கருச்சிதைவு செய்ய இடமளிப்பது நியாயமானது.
கருச்சிதைவை நியாயப்படுத்தலாம் என்பது பற்றி
மேலே கூறிய காரணங்களினால் அதாவது பாலியல் வல்லுறவு விகாரமாக உருவாகும் சிசுவை தாயின் உயிருக்கு ஆபத்து என்ற சந்தர்ப்பங்களில் கருச்சிதைவு செய்ய அனுமதிப்பதில் தவறு இல்லை என்று கூற வேண்டும். ஆயின் கருச்சிதைவை கீழைத்தேய நாடுகள் ஆதரிப்பதில்லை. அவர்களது ஆன்மீக கலாசார வாழ்க்கையே அதற்குக் காரணமாகும். மேலே கூறிய காரணங்களை வெகுவாக எதிர்ப்பவர்கள் மிகக்குறைவு. ஆயினும் சட்டத்தில் கருச்சிதைவுக்கு இடமில்லை.
கருச்சிதைவுக்கு இடம் தரப்பட வேண்டும் என்பவர்களின் கருத்தைப் பார்ப்போம் மேலே கூறிய காரணங்கள் கருச்சிதைவுக்கு ஆதரவாக சமூகத்தால் அங்கீகரிக்கக் கூடியவையாக இருந்தபோதும் சமூகம் வெளிப்படையாக அங்கீகரிக்க தயாரில்லை என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
கருச்சிதைவை சட்டபூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்பவர்கள் கூறும் காரணங்கள் கர்ப்பப்பை ஒரு பெண்ணின் உடலில் உள்ளது. ஒரு பெண் தனது உடலில் உள்ள உறுப்புகளில் ஒன்றை மாற்ற வேண்டுமென்று விரும்பினால் அதனை தடுக்கச் சட்டத்தில் இடமில்லை. பாலையே மாற்றுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். முகங்களையே அழகுபடுத்தி வேறுபடுத்துவதையும் நாம் காணலாம். ஆகவே தனக்கு சொந்தமான கருப்பையை Womb இல் உள்ளதை அழிக்க தனக்கு உரிமையில்லை என்பது விகடமானது. ஏனெனில் Womb தனக்கு சொந்தமானது என்று அவள் கூறுவதாகும். இதனை ஏற்க முடியாது. ஏனெனில் Womb அவளுக்கு சொந்தமாக இருக்கலாம். ஆனால் அந்த Womb இல் உண்டாகும் உயிர் சிசு அவளுக்குச் சொந்தமானதல்ல. இதன் பொருள் என்னவெனில் ஒரு குறித்த அளவு காலம் மட்டுமே தான் பெற்றெடுத்த குழந்தைக்கு பெற்றோர் உரித்தாளராக விளங்குகின்றனர். அவர்கள் பெரியவர்களாக மாறி தம்மைத் தாமே பரிபாலித்துக் கொள்ளக்கூடிய நிலைக்கு வந்த பின்னர் பெற்றோரிடமிருந்து விடுபடுகின்றனர். அவர்கள் விரும்பியபடி வாழலாம். ஆகவே ஒரு பெண்ணின் Womb இல் உண்டாகும் குழந்தை பரிபூரணமாக அவளுக்குச் சொந்தமானதல்ல. சமூகத்திற்கே சொந்தமானது. சமூகத்திற்குச் சொந்தமான ஒன்றை ஒருவர் அழிக்க முடியாது. அதற்கு தண்டனையுண்டு. இதனால் கருச்சிதைவு அங்கீகரிக்க வேண்டும் என்ற தர்க்கத்தை சமூகம் ஏற்பதில்லை.
மேலும் கருச்சிதைவை அங்கீகரித்தால் உயிர்க்கொலை ஒன்றை செய்வதை சட்டம் அங்கீகரிக்கிறது என்றே கொள்ள வேண்டும். எனவே கருச்சிதைவு செய்யவேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவில்லை.
கருச்சிதைவை ஏன் செய்கிறார்கள்
நாம் வாழும் சமூகம் சில அருஞ் செல்வங்களான பண்புகளையும் கலாசாரத்தையும் நமக்கு அளித்துள்ளது. அதில் ஒன்று குடும்பம் என்பது ஆகும். குடும்பம் என்பது ஆண் ஒருவனும் பெண் ஒருத்தியும் இணைந்து வாழும் வாழ்வாகும். இது குடும்பத்தாலும் மற்றும் சமூகத்தவர்களாலும் அங்கீகரிக்கப்பட வேண்டும். அவர்கள் இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட்டு குழந்தைகளை பெறும்போது சமூகம் அதனை அங்கீகரிக்கிறது. வளைகாப்பு சடங்கு தொடக்கம் பெயர் வைத்தல், பிறப்பு நாள் கொண்டாட்டம் என்பனவற்றை கொண்டாடுகின்றனர். இப்படியான சந்தோசமான ஒரு நிகழ்வுதான் குழந்தை உற்பத்தியும் பிறப்புமாகும். ஆகவே இந்த குழந்தையை கருச்சிதைவு செய்ய பெற்றோரோ, தாய் தகப்பனோ விரும்புவார்களா? ஒரு போதும் விரும்பமாட்டார்கள். அப்படியாயின் கருச்சிதைவை விரும்புபவர்கள் அல்லது அனுமதி கேட்பவர்கள் யார்? எனப் பார்ப்போம்.
குடும்ப பண்புகளுக்கு புறம்பாக தரிக்கும் குழந்தைகளையே அழிக்க உரிமை கோருகின்றனர். சில சமயங்களில் விவாகமாகாத இருவர் ஒருவருடன் ஒருவர் ஆரம்பத்தில் பழகி பின்னர் நெருங்கிப் பழகி அதன் பின்னர் மறைவான முறையில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு விடுகின்றனர். இதன் பலனாக இறைவனே அவர்களை உலகிற்கு காட்டிக் கொடுக்க குழந்தையை தரிக்க செய்து விடுகிறான்.
இள வயதில் கணவனை இழந்த பெண் பாலியல் இன்பத்தை வேறு வழிகளில் பெறுவதுண்டு. இதனை கள்ளத் தொடர்பு என அழைப்பர். அப்போதும் சில குழந்தைகள் உண்டாகிவிடுகின்றன.
இன்னும் சில சந்தர்ப்பங்களில் கணவன் வேறு நாடு சென்று வாழும்போது இடைப்பட்ட காலத்தில் இன்னுமொருவருடன் நட்புக் கொண்டு குழந்தை தரித்து விடுகின்றனர். இதேபோல பல சந்தர்ப்பங்களில் கணவன் – மனைவி என்ற சமூக அங்கீகார உறவுக்கு அப்பால் பல பெண்கள் கருவை வாங்கிக் கொள்கின்றனர்.
இவர்களால் சமூகத்திற்கு முகம் கொடுக்க முடியாது. குழந்தையை தரிக்க செய்தவரும் ஏதோ சாக்கு போக்குக் கூறி சமாளித்து விடுவார். ஆகவே பெண்ணானவள் தனது வயிற்றில் உள்ள சிசுவை அழிக்கவே விரும்புவாள். சில சந்தர்ப்பங்களில் தானே உயிரை மாய்த்துக் கொள்வாள்.
மேலே கூறிய வகுதிக்குள் வருவோரே கருச்சிதைவை கோருகின்றனர். இதனை சமூகம் அங்கீகரிக்குமா? என்பதே பிரச்சினை. இந்தியாவிலோ இலங்கையிலோ இதற்கு அங்கீகாரம் கிடைக்காது. தகப்பனில்லா குழந்தை என்ற பெயரை தாய் எடுத்துக் கொடுக்க மாட்டாள். ஆகவே தான் கருச்சிதைவை செய்ய அவள் முயற்சிக்கிறாள். இது ஒரு சமூகப் பிரச்சினை. மற்றும் உடல் பிரச்சினையாகும். உடல் பிரச்சினைகளான மது அருந்துதல், புகைபிடித்தல், பிழையான பழக்க வழக்கங்களில் ஈடுபடல், ஆண் புணர்ச்சி என்பன போன்றவற்றை போல் இதுவும் ஒன்றாகும். இதற்கு சட்ட அந்தஸ்து கோர முடியாது.
இலங்கையில் மேலே கூறிய கள்ள வழிகளில் விவாக அந்தஸ்து இல்லாமல் உற்பத்தியாகும் சிசுக்கள் 1000 அளவில் ஒரு நாளில் அழிக்கப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
களனி பல்கலைக்கழக சமூகவியல் பேராசிரியர் ஒருவரின் அறிக்கையில் 658 பேர் அளவில் கருச்சிதைவு செய்கின்றனர் என தெரிவித்துள்ளார். இதன் படி பார்த்தால் ஒரு வருடத்தில் 240170 பெண்கள் கருச்சிதைவு செய்து கொள்கின்றனர். சட்டவிரோதமான முறையில் கருச்சிதைவு இருக்கும்போது இத்தகைய தொகை கருச்சிதைவு செய்தால் கருச்சிதைவை சட்டபூர்வமாக்கினால் என்ன நடக்கும் என நினைத்துக் கூட பார்க்க முடியாது. எனவே சிதைவை சட்டபூர்வமாக்கக் கூடாது. சமீபத்தில் இந்தியாவில் இருந்து எத்தனையோ ஆயிரம் கருச்சிதைவு மாத்திரைகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட செய்திகள் பத்திரிகையில் வெளிவந்ததை நாம் காணலாம். ஆகவே கருச்சிதைவு தடுக்கப்பட முடியாத ஒன்று. ஆயினும் சட்டபூர்வமாக்க முடியாத ஒன்றுமாகும்.
தொகுப்புரை
கருச்சிதைவு கோரிக்கைக்கு காரணம் கள்ளமாக அல்லது கணவன் மனைவி தொடர்பு இல்லாதவர்களிடையே உண்டாகும் சிசுவை அழிப்பதற்காகவே இருக்கின்றது. இது சமூகப் பிரச்சினையாகும். இதனை இலகுவில் தீர்க்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன அவர்கள் தனது தோட்டத்திற்குச் சென்றபோது அங்குள்ள ஒரு நாய் அவரைக் கடிக்க வந்தபோது தோட்ட வேலைக்காரன் அருகில் இருந்து கல்லை எடுத்து அந்த நாய்க்கு எறிந்தான். நாய் ஓலமிட்டு கொண்டு கதறி ஓடியது. உடனே ஒன்றும் கூறாத ஜே.ஆர். பின்னர் வேலைக்காரனை கூப்பிட்டு நீ ஏன் நாய்க்கு கல்லால் அடித்தாய் என்று கேட்டபோது நான் கல்லால் அடிக்காவிட்டால் அது ஹாமுவை கடித்திருக்கும் என்று கூறினார். உடனே இனி அப்படி நாய்க்கு அடிக்க வேண்டாம் என்று கூறினார். ஜே.ஆர். அவர்கள் மரண தண்டனை இலங்கையில் வரக்கூடாது என்பதற்கு இந்த நாய் இட்ட ஓலமும் ஒரு காரணம் என்று ஒரு கட்டுரை வந்திருந்தது. நாய் இப்பாடுபட்டால் மனிதன் கயிற்றில் தொங்கும்போது என்ன பாடுபடுவான் என்று அவர் எண்ணியிருக்க வேண்டும் என்று கூறலாம்.
அத்தகைய இலங்கையில் சிசுவொன்றை Womb மில் அழிக்க இடம் கொடுக்கப்படுமா? என்பது நினைத்துக் கூட பார்க்க முடியாத ஒரு விடயமாகும். ஆகவே இங்கு செய்யக்கூடியது என்னவெனில் அறிவுரைகளை மக்களுக்கு வழங்குவதாகும்.
1. முறையான பாலியல் அறிவை மாணவர்களின் பாட விதானத்தில் சேர்க்க வேண்டும்.
2. சமூக ஆர்வலர்கள் பாலியல் அறிவை கிராம மட்டத்தில் புகட்ட வேண்டும். குழந்தை தரிக்காத செயற்கை முறைகளைப் புகட்ட வேண்டும்.
3. சட்டவிரோதமான முறையில் கருச்சிதைவு செய்வதால் ஏற்படும் உயிர் இழப்புகளைப்பற்றி மக்களுக்குப் புகட்ட வேண்டும். கருச்சிதைவால் உண்டாகும் இரத்தப் பெருக்கு காரணமாக 12% மேற்பட்டோர் இறக்கின்றனர். 50% மேற்பட்ட பெண்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர் என்பதை விளங்கப்படுத்த வேண்டும். ஆண் – பெண் உறவின் இன்பத்தை மறக்க முடியாது. அதேபோல் கருச்சிதைவையும் அங்கீகரிக்க முடியாது.