மன்னார், கரிசல் கிராமத்திலே முஸ்லிம் மக்களுக்கும் கிறிஷ்தவ மக்களுக்கும் இடையில் இடம்பெற்றுவந்த முறுகள் நிலை வடக்கு முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பைத் தொடர்ந்து சுமூகமாகத் தீர்க்கப்படக்கூடிய நிலை உருவாகியிருப்பதாக வடக்கு முஸ்லிம் சிவில் சமூகத்தின் தலைவர் ஜனாப் எம்.எம்.எம்.றமீஸ் அவர்கள் தெரிவித்தார்கள்.
வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்களது வேண்டுகோளின்பேரில் இன்றைய சந்திப்பு மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது, மேற்படி சந்திப்பில் ஆயர் சுவாம் பிள்ளை அவர்களும், குருமுதல்வர் விக்டர் சூசை அவர்களும், கத்தோலிக்க சங்கத்தலைவர் அவர்களும் கலந்துகொண்டார்கள், முஸ்லிம் சிவில் சமூகம் சார்பாகவும், கரிசல் முஸ்லிம் கிராம மக்கள் சார்பாகவும் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தார்கள்.
இருதரப்பு சந்திப்பும் மிகவும் சிநேகபூர்வமாகவும், விடயங்களை ஆழமாக நோக்கும் வகையிலும் அமைந்திருந்தன.
ஏற்பட்டிருக்கின்ற காணி தொடர்பிலான பிணக்கினை உடனடியாகத் தீர்க்க முடியாவிட்டாலும், இரண்டு சமூகங்களுக்குமிடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதற்கு போதிய கவனம் செலுத்தப்படல் அவசியம் என்று பேசப்பட்டது.
உடனடியாகக் கையாளப்பட வேண்டிய விடயங்களாக பின்வரும் மூன்று விடயங்கள் குறித்து இரு தரப்பினர்க்கும் இடையில் உடன்பாடுகள் எட்டப்பட்டன.
1. மன்னார் மாவட்ட சமூக நல்லிணக்கத்தை நோக்காகக் கொண்டு ஒரு மாதரி நடவடிக்கையாக கரிசல் கிராமத்தில் “சமாதான செயலணி” ஒன்றினை இஸ்லாமிய, கத்தோலிக்க, இந்து மக்களை உள்ளடக்கியதாக ஸ்தாபித்தல்.
2. அங்கு வாழ்கின்ற மக்களின் மத ரீதியான கிரியைகளின்போது ஒரு சாராரால் மற்றொருவருக்கு இடையூறுகளோ அச்சுறுத்தல்களோ ஏற்படாத வண்ணம் செயற்படுதல். இதனை சமூகரீதியில் உத்தரவாதப்படுத்துதல்.
3.குறித்த காணி தொடர்பிலான பிணக்கினைத் தீர்ப்பதற்கு முன்னோடியாக, குறித்த காணி தொடர்பில் முழுமையான தகவல் திரட்டொன்றினையும், நடுநிலையான ஆய்வொன்றினையும் மேற்கொள்தல்.
ஆகிய முக்கிய மூன்று தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதோடு, இதுவரை மீறப்பட்டுள்ள சட்டம் ஒழுங்கு சார்ந்த விடயத்தில் பொலிஸாரின் சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதற்கு இடையூறாக எவரும் செயற்படுவதில்லை என்றும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. தற்போது ஏற்பட்டு பதற்றமான சூழ்நிலைகளை தணிக்கும் விதத்தில் இரண்டு சமூகங்களையும் பள்ளிவாயல் நிர்வாகமும், தேவாலய நிர்வாகமும் ஆசுவாசப்படுத்துவதோடு, அத்துமீறல்கள் இடம்பெறாவண்ணம் நிலைமைகளை வைத்திருத்தல் என்றும் தீர்மானிக்கப்பட்டது.