மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பாரிய மணல் கொள்ளை நடைபெறும் பகுதிகள் விசேட பொலிஸ் பிரிவினால் நேற்று வியாழக்கிழமை முற்றுகையிடப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் விசேட பொலிஸ் குழு மேற்கொண்டுவந்த கண்காணிப்பின் கீழ் நேற்று காலை கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள வேப்பவட்டவான் பகுதியில் இந்த மணல்கொள்ளை நடைபெறும் பகுதிகள் முற்றுகையிடப்பட்டுள்ளன.
வேப்பவட்டவான், புத்தம்புரி குளத்தினை அண்டிய எட்டுப்பகுதியில் இந்த மண் கொள்ளையிடும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விசேட பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி அலேசியஸ் டியராட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஏ.சுமித் எதிரிசிங்க மற்றும் மட்டு-அம்பாறை மாவட்டங்களுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயக்கொட ஆராய்ச்சி ஆகியோரின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யு.ஆர்.பி.கருணாரட்னவின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.ஆர்.பி.சேனநாயக்கவின் தலைமையிலான பொலிஸ் குழு மற்றும் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் விசேட பொலிஸ் குழு என்பன இணைந்து இந்த முற்றுகையினை மேற்கொண்டது.
இதன்போது மட்டக்களப்பு மாவட்ட சுரங்க அகழ்வு கனியவளத் திணைக்கள அதிகாரிகளும் ஸ்தலத்திற்கு வருகைதந்து விசாரணைகளை நடாத்தினர்.
குறித்த எட்டுப் பகுதிகளிலும் பெருமளவான மணல்கள் குவிக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மணலின் அளவு மற்றும் பெறுமதி தொடர்பான கணிப்பீடுகள் நடைபெற்று வருவதாகவும் இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.