கம்பஹா நகர எல்லைக்குள் முகமூடி ஹெல்மட், அபாயா, புர்கா என்பன அணிந்து எவரும் பிரவேசிக்க முடியாதவாறு, கம்பஹா நகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என நகர சபைத் தலைவர் எரங்க சேனாநாயக்க தெரிவித்தார்.
கம்பஹாவில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற ஊடகக் கலந்துரையாடலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இக்கலந்துரையாடலில் அவர் மேலும் கூறியதாவது,
“கம்பஹா நகரம், பாரியதொரு நிர்வாக நகரமாகும். இங்கு ரயில் நிலையம், வைத்தியசாலை உள்ளிட்ட பிரதான அரச அலுவலகங்கள் பல உள்ளன. இதனால், மக்கள் நடமாட்டமும் அதிகளவில் இருந்து வருகின்றது.
இந்தநிலையில், கம்பஹா நகரையும், இங்கு வருவோரையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் எமக்குள்ளது.
பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படைப்பிரிவினருடன் இணைந்து, இப்பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளோம்.
எனவே, முகமூடி ஹெல்மட், அபாயா, புர்கா என்பவற்றை எவரும் அணிந்துவர முடியாதவாறு சட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம்.
கம்பஹா நகரத்துக்கு வரும் மக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பு, நன்மை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது” – என்றார்.
அதேவேளை, அபாயா, புர்கா போன்றவற்றுடன் முஸ்லிம் பெண்கள், நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு வரவேண்டாம் என வைத்தியசாலை நிர்வாகிகளால் அறிவுறுத்தப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.
இது தொடர்பான அறிவித்தல், நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு முன்பாகப் பதாகை மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறு அபாயா, புர்கா அணிந்து வரும் பெண்களுக்கு சிகிச்சை அளிக்கப்படமாட்டாது என்றும், அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அபாயா, புர்கா அணியாமல், சாதாரண ஆடையில் வந்தால் மாத்திரமே சிகிச்சை வழங்கப்படுகின்றது எனவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.