தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் பெண்ணொருவர், தனது குழந்தையுடன் பேருந்தில் முன் பாய்வதற்கு முற்பட்ட போது காலி நகர சபை பணியாளர்கள் சிலர் அவரை காப்பாற்றி
காவற்துறையில் ஒப்படைத்துள்ளனர்.
36 வயதான குறித்த பெண் காலி – கலேகான பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது கணவரால் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் சித்திரவதைகளை தாங்கமுடியாமல் இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சித்ததாக அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னரும் அந்த பெண் தற்கொலை செய்ய முற்பட்டுள்ளதுடன், அருகில் இருந்த சிலர் அவரை காப்பாற்றியுள்ளனர்.
குறித்த கணவருக்கு எதிராக இதற்கு முன்னர் அந்த பெண் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
இதன்போது குறித்த கணவரிடம், அந்த பெண் இருக்கும் வீட்டுக்கு செல்ல வேண்டாம் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அந்த ஆலோசனையை மீறி அந்த கணவர் மீண்டும் அந்த வீட்டுக்கு சென்று அந்த பெண்ணையும் அவரது தாயாரையும் சித்திரவதை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாகவே அவர் இவ்வாறு தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
பின்னர் இது தொடர்பாக செயல்பட்ட பொத்தல காவற்துறை, அந்த பிரதேசத்திற்கு சென்று குறித்த சந்தேக நபரான கணவரை கைது செய்துள்ளது.
இதற்கமைய அந்த பெண், குழந்தை மற்றும் அவரது தாயாரையும் காவற்துறை, அவர்களின் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பொத்தல காவற்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.