கட்டுரைகள்பிரதான செய்திகள்

கட்டாய எரிப்பு ஒழுங்குவிதி சட்டத்திற்குட்பட்டதா?- பகுதி-3

வை எல் எஸ் ஹமீட்

முன்னைய தொடரில் “கட்டாய எரிப்பு ஒழுங்குவிதி on the face (வெளிப்படையில்) Quarantine and Prevention of Diseases Ordinance No 3 of 1897 (as amended) என்ற சட்டத்திற்கு உட்பட்டதே! எனப்பார்த்தோம்.

இத்தொடரில் அதனை அரசியலமைப்பின் அடிப்படையில் பார்ப்போம்.

அரசியலமைப்பு 10 தொடக்கம் 17வது சரத்துவரை “அடிப்படை உரிமைகள்” குறித்து பேசுகின்றது. இவ்வடிப்படை உரிமைகள் இருவகையானவை. ஒரு வகை -முழுமையான உரிமை ( absolute rights). இவற்றில் ஓர் அணுவளவான மாற்றத்தைக்கூட சர்வஜன வாக்கெடுப்பின்றி செய்யமுடியாது. இவற்றை entrenched provisions என அழைக்கப்படும்.

இலங்கை யாப்பில் சரத்து (10) இல் மத சுதந்திரமும் (11) இல் சித்திரவதைக்கெதிரான சுதந்திரமும் இருக்கின்றது. அவை மேற்சொன்ன “முழுமையான சுதந்திரம்” எனும் வரையறைக்குள் வரும். ஏனையவை குறித்த சில காரணங்களுக்காக கட்டுப்படுத்தபுடியும். ஆனாலும் அவற்றைக் கட்டுப்படுத்துவதிலும் உதாரணமாக ICCPR போன்ற நியமங்களில் பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. மனித உரிமைகள் தொடர்பாக விரிவான ஒரு தொடர் எழதும் எண்ணம் இருக்கின்றது. இன்ஷாஅல்லாஹ், அப்போது அவைபற்றிப் பார்ப்போம்.

சரத்து 10, சிந்திக்கின்ற, மனச்சாட்சியைப் பின்பற்றுகின்ற மற்றும் மத சுதந்திரத்தைப்பற்றிப் பேசுகின்றது. மத சுதந்திரத்தைப் பொறுத்தவரை ஒரு “மதத்தைப் பின்பற்றுகின்ற, விரும்புகின்ற ஒரு மதத்தைத் தழுவுகின்ற” சுதந்திரத்தை வழங்குகின்றது. இவை கட்டுப்படுத்தப்பட முடியாதவை.

சரத்து 14(e) தனது மதத்தை வெளிப்படுத்துகின்ற ( to manifest) சுதந்திரத்தைப்பற்றிப் பேசுகின்றது. இந்த வெளிப்படுத்தல் நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, worship, observance, practice and teaching. இதேபோன்றுதான் ICCPR மற்றும் UDHR இலும் பிரிக்கப்பட்டிருக்கின்றது. (இரண்டிலும் சரத்து 18)

இதில் ஜனாசா நல்லடக்கம் observance அல்லது practice என்ற உப பிரிவின்கீழ் வரும். சிலர் practice இன் கீழும் சிலர் observance இன் கீழும் குறிப்பிடுகின்றார்கள். எது எவ்வாறிருந்தபோதும் இது 14(e) இல் குறிப்பிடப்பட்ட ‘மதத்தை வெளிப்படுத்தல்’ என்ற பொதுப்பிரிவின்கீழ் வருகின்றது.

இப்பிரிவு ICCPR இலும் சுகாதார காரணம் உட்பட சில குறித்த காரணங்களுக்காக சட்டத்தால் அதற்கு தேவையான அளவு மட்டும் கட்டுப்படுத்த இடம் வழங்கப்பட்டிருக்கின்றது. [ICCPR Article 18(3)]

இலங்கை யாப்பில் இதனைக் கட்டுப்படுத்தல்
——————————————————————
சரத்து 15 இந்த அடிப்படை உரிமைகளை ( சரத்து 10,11 தவிர்ந்த) கட்டுப்படுத்துவது தொடர்பாக குறிப்பிடுகின்றது. சரத்து 15 இல் எட்டு உப சரத்துக்கள் இருக்கின்றன. அவை எவற்றிலும் 14(e) இல் குறிப்பிடப்பட்ட உரிமையை ( மத வெளிப்பாடு) கட்டுப்படுத்துவது தொடர்பாக குறிப்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை.

ஆனால்,

15(7) பொதுவாக சரத்து 14 ஐக் கட்டுப்படுத்துவது தொடர்பாக குறிப்பிடுகின்றது. எனவே, 14(e) யையும் கட்டுப்படுத்தலாம்; என்பது அதன் பொருளாகும். அதில் சுகாதார காரணத்திற்காக கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ( protection of public health)

ஆனால்,

இந்தக் கட்டுப்படுத்தல் (பாராளுமன்ற) சட்டத்தினால் செய்யப்பட வேண்டும்; என்றும் அதில் குறிப்பிடப்பட்டு அதன்பின் “ இந்த உப சரத்தின் நோக்கத்தைப் பொறுத்தவரை “ பொதுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வெளியிடுப்படும் ஒழுங்கு விதிகளும் ‘சட்டம்’ என்பதற்குள் உள்ளடக்கப்படும் எனக்குறிப்பட்டுள்ளது.

அதாவது, பாராளுமன்றச் சட்டத்தாலும் அவசரகால சட்ட ஒழுங்கு விதிகளின் கீழும் இந்த மதவெளிப்பாட்டு உரிமையைக் கட்டுப்படுத்தலாம்; என்பது இதன் பொருளாகும். பொதுவாக, அவசரகால சட்டவிதிகள் எந்தவொரு சட்டத்தையும் மேவும்; அரசியலமைப்பு சட்டத்தைத்தவிர. எனவே, விதிவிலக்காக அரசியலமைப்பு வழங்கிய இவ்வுரிமையை (அவசியப்படின்) அவசரகால சட்டவிதிகளின் கட்டுப்படுத்த முடியும். ( இவ்வாறு இன்னும் ஒரு சிலவற்றிற்கு இதேபோன்று அவசரகால சட்டத்தால் கட்டுப்படுத்தும் விதிவிலக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.)

கட்டாய எரிப்பு ஒழுங்குவிதி
——————————————-
குறித்த கட்டாய எரிப்பு ஒழுங்குவிதி அவசரகால சட்டத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை. மாறாக மேற்குறிப்பிடப்பட்ட Qurantine தொடர்பான சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகளின் கீழேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. அரசியலமைப்பு வழங்கிய இந்த உரிமையை பாராளுமன்ற சட்டம் அல்லது அவசரகால சட்டம் தவிர்த்த வேறு எந்தவொரு ஒழுங்கு விதிகளின் கீழும் கட்டுப்படுத்த முடியாது. எனவே, குறித்த கட்டாய எரிப்பு ஒழுங்குவிதி சட்ட விரோதமாகும்.

இங்கு ஒரு கேள்வி எழலாம். அதாவது குறித்த Quarantine தொடர்பான சட்டம் 1978ம் ஆண்டு யாப்பு வருவதற்குமுன் உருவாக்கப்பட்ட சட்டம். அவ்வாறான அனைத்துச் சட்டங்களும் அவை அடிப்படை உரிமைச் சரத்துகளுக்கு முரணாக இருந்தபோதிலும் செல்லுபடியாகும்; என சரத்து 16(1) குறிப்பிடுகின்றது.

எனவே, குறித்த சட்டம் வழங்கிய அதிகாரத்தின்கீழ்த்தான் இந்த ஒழுங்குவிதி வெளியிடப்பட்டிருக்கின்றது. எனவே, இந்த ஒழுங்குவிதி செல்லுபடியாகாதா? என்ற கேள்வி எழலாம்.

இதற்கான பதில் குறித்த சட்டத்தில் நேரடியாக, இவ்வாறான தொற்றுநோய்க்காலங்களில் கட்டாயமாக தொற்றுள்ள உடல்கள் எரிக்கப்பட வேண்டும்; என்றோ அல்லது எரிப்பைக் கட்டாயப்படுத்தி அல்லது புதைத்தலை தடைசெய்து ஒழுங்குவிதி வெளியிடலாம்; எனவோ, நேரடியாக குறிப்பிடப்பட்டிருந்தால் அது செல்லுபடியாகும்.

இங்கு அவ்வாறு குறிப்பிடப்படவில்லை. மாறாக நோயைக் கட்டுப்படுத்துவதற்கான விதிகளை வெளியிடத்தான் அதிகாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. அவ்வாறு நோயைக்கட்டுப்படுத்த எரித்தலை கட்டாயமாக்கத்தான் வேண்டும்; என விஞ்ஞானம் தெளிவாக கூறுகின்றது; என வைத்துக்கொண்டால் இவ்வாறான விதி வெளியிடமுடியாதா? என அடுத்த கேள்வி எழலாம்.

அதற்குரிய பதில் ‘முடியாது’ என்பதாகும். ஏனெனில் அவ்வாறு கட்டாயம் எரித்துத்தான் ஆகவேண்டும்; என்ற ஒரு நிலை இருந்தால் அதனைச் செய்வதற்கு 15(7) வழிகாட்டி இருக்கின்றது. அதில் ஒன்று, பாரளுமன்ற சட்டத்தால் அதனைச் செய்வது அல்லது அவசரகால சட்டத்தால் அதனை செய்வது.

இவ்வாறு இரண்டு வழிகளை மட்டுமே அரசியலமைப்பு வழங்கியிருக்கும்போது, அவற்றைப் புறக்கணித்துவிட்டு ஒரு விதியை வெளியிடமுடியாது. அது சட்டவிரோதமானது.

சிலவேளை, குறித்த ஒழுங்குவிதி 1978ம் ஆண்டு யாப்பு வருவதற்குமுன் வெளியிடப்பட்டதாக இருந்திருந்தால் அது இன்றும் செல்லுபடியாகி இருக்கும். ஏனெனில் 16(1) இல் all existing “written law “ என்ற பதம் பாவிக்கப்பட்டிருக்கிற்றது.

அதாவது “1978ம் ஆண்டு யாப்பு வரும்போது அமுலில் இருந்த சகல எழுதிய, எழுதாத சட்டங்களும் அடிப்படை உரிமைச் சரத்துகளுக்கும் முரணானபோதும் செல்லுபடியாகும்” என 16(1) கூறுகின்றது.

சரத்து 170 இன் பிரகாரம் “ law” என்பது பாராளுமன்றத்தால் ( முன்னாள் சட்டசபை உட்பட) ஆக்கப்பட்ட சட்டங்களையே குறிக்கும். “Written law “ என்பது பாராளுமன்ற சட்டம், உப சட்டங்கள், ஒழுங்குவிதிகள் அனைத்தையும் குறிக்கும்.

குறித்த கட்டாய எரிப்பு ஒழுங்குவிதி ( 61A) 11/04/2020 இல்தான் வெளியிடப்பட்டது. எனவே, அது அடிப்படை உரிமைச் சரத்துகளுக்கு முரணாக அமைய முடியாது.

சட்டத்தின் நோக்கம் தவறின் செல்லுபடியாது
—————————————————————-
மேற்படி Quarantine தொடர்பான சட்டம் நோயைக் கட்டுப்படுத்துவதற்காகத்தான் ஒழுங்குவிதி வெளியிடும் அதிகாரத்தை வழங்கியிருக்கின்றது. அந்த நோக்கத்திற்கு அப்பால் அந்த அதிகாரம் செயற்படுத்தப்படுத்தப்படுமானால் அது சட்டமுரணாகும். (Ultra Vires)

தற்போது முழு உலகமும் இலங்கையில், குறித்த விடயத்திற்கான உரிய நிபுணர்களும் அடக்கம் செய்யலாம்; என்று கூறிய நிலையில் அடக்கம் செய்தலைத் தடுத்தல் நோயைக் கட்டுப்படுத்த அவசியமற்றது. எனவே, குறித்த நோயைக் கட்டுப்படுத்த அவசியமில்லாத ஒன்றை இந்த சட்டத்தால் கட்டுப்படுத்த அதிகாரமில்லை. அது Ultra Vires ஆகும்.

எனவே, உடல்களை கட்டாயமாக எரிப்பது சட்டவிரோதமானதும் மத சுதந்திரத்தை மீறுவதுமாகும்.

(முற்றும்)

Related posts

செப்டெம்பர் மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தல்! 95% பணி நிறைவு

wpengine

கேரள கஞ்சாவுடன் ஒருவர் வவுனியாவில் கைது

wpengine

பட்டதாரிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையிலான தகவலொன்றை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

wpengine